ஜெ., வழக்கு: விசாரணை அதிகாரியை விசாரிக்க கோரிய மனு மீது 20ல் தீர்ப்பு
ஜெ., வழக்கு: விசாரணை அதிகாரியை விசாரிக்க கோரிய மனு மீது 20ல் தீர்ப்பு
ஜெ., வழக்கு: விசாரணை அதிகாரியை விசாரிக்க கோரிய மனு மீது 20ல் தீர்ப்பு
ADDED : ஆக 17, 2011 01:20 AM

பெங்களூரு : தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக, விசாரணை அதிகாரியாக இருந்த நல்லம்ம நாயுடுவிடம், மீண்டும் விசாரிக்கக் கோரிய மனு மீது, வரும் 20ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 311ன் கீழ், இந்த வழக்கை துவக்கத்திலிருந்து விசாரித்து வந்த விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடுவிடம், (தற்போது இவர் ராஜினாமா செய்து விட்டார்) மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி, சசிகலா, இளவரசி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. மூத்த வழக்கறிஞர் குமார் வாதிடுகையில், ''சொத்துக் குவிப்பு வழக்கில், சில சாட்சிகள் முன்னுக்குப் பின் முரணாகக் கூறியிருந்தனர். ஏன் இப்படி நடந்தது என்பது குறித்து, நல்லம்ம நாயுடுவிடம் விசாரிக்க வேண்டும்,'' என்றார்.
இதற்கு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா எதிர்ப்புத் தெரிவித்து, ''இந்த வழக்கு கடைசி கட்டத்திற்கு வந்துள்ளது. எதிர்த் தரப்பினர் வழக்கை நடத்த விடாமல் இழுத்தடிக்கின்றனர். இதற்கு, அனுமதி அளிக்கக் கூடாது,'' என்றார்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனய்யா கூறுகையில், ''இம்மனு மீதான தீர்ப்பு, வரும் 20ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்,'' என்று தெரிவித்தார்.