Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தலைமை தேர்தல் அதிகாரி நாளை திருச்சி வருகை

தலைமை தேர்தல் அதிகாரி நாளை திருச்சி வருகை

தலைமை தேர்தல் அதிகாரி நாளை திருச்சி வருகை

தலைமை தேர்தல் அதிகாரி நாளை திருச்சி வருகை

ADDED : செப் 14, 2011 12:06 AM


Google News
Latest Tamil News
திருச்சி:திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், நாளை திருச்சி வருகிறார். தேர்தல் குறித்து அனைத்துக் கட்சிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்துகிறார்.திருச்சி மேற்கு தொகுதிக்கு அக்டோபர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் புதிய ஆட்சி ஏற்பட்ட குறுகிய நாட்களில் நடைபெறும் முதல் இடைத்தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தி.மு.க., ஆட்சியில் திருமங்கலம் இடைத்தேர்தலின் போது, பணம் விளையாடியது. திருமங்கலம், 'பார்முலா' இந்திய அளவில் பிரசித்திப் பெற்றது. இதைத் தடுக்கவே, கடந்த சட்டசபை தேர்தலில், தேர்தல் கமிஷன் விழிப்புடன் செயல்பட்டு, தன் இரும்புக்கரம் கொண்டு பணப் பட்டுவாடாவை ஒடுக்கியது.தற்போது, அ.தி.மு.க., ஆட்சியில் நடைபெறும் முதல் இடைத்தேர்தல் இது என்பதால், தேர்தல் கமிஷன் மிகவும் விழிப்புடன் உள்ளது. இடைத்தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் முடிவு செய்துள்ளார்.

செப்., 15ம் தேதி (நாளை) திருச்சி வரும் பிரவீன்குமார், அனைத்து கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்பது கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ., தேசியவாத காங்கிரஸ், இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், பகுஜன் சமாஜ் கட்சி, அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., ஆகிய கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.ஒவ்வொரு கட்சியுடனும் தனித்தனியாக, 15 நிமிடங்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. ஒவ்வொரு கட்சியிலும் ஐந்து பேருக்கு மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதி உண்டு.பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அறிவுரை வழங்க உள்ளார். தவிர, போலீஸ் கமிஷனருடன் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். கூட்டத்தை முடித்துக் கொண்டு பதட்டமான ஓட்டுச்சாவடி சிலவற்றை நேரில் சென்று பார்வையிடுவார் என தெரிகிறது.

1,562 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 'ரெடி' :இடைத்தேர்தலை முன்னிட்டு, 240 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 236 ஓட்டுச்சாவடிகள் பொதுவானவை. ஆண்களுக்கு இரண்டு, பெண்களுக்கு இரண்டு என தனித்தனியாக நான்கு ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம், 1,562 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் (பேலட் யூனிட்), 555 கன்ட்ரோல் யூனிட்களும் தயார் நிலையில் உள்ளன.இவை அனைத்தும், கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 240 பூத்களுக்கும் தலா ஒரு பேலட், கன்ட்ரோல் யூனிட் அனுப்பி வைக்கப்படும்.

தேர்தல் பார்வையாளர் வரும் 16ல் நியமனம்:திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இரண்டு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தேர்தல் செலவு பார்வையாளர் மற்றும் தேர்தல் பார்வையாளர் என இரண்டு பேர் நியமிக்கப்படுவர். அநேகமாக, வரும் 16ம் தேதி தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, திருச்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us