போலீசாரின் தொலைபேசி எண்களை உடனே வெளியிடவேண்டும்: தேர்தல் கமிஷன் உத்தரவு
போலீசாரின் தொலைபேசி எண்களை உடனே வெளியிடவேண்டும்: தேர்தல் கமிஷன் உத்தரவு
போலீசாரின் தொலைபேசி எண்களை உடனே வெளியிடவேண்டும்: தேர்தல் கமிஷன் உத்தரவு
சென்னை: 'கள்ள ஓட்டுப்போடுவதை தடுக்க வேண்டும்.
அடுத்த மாதம் 17 மற்றும் 19ம்தேதிகளில் இரு கட்டமாக நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் கமிஷன் அலுவலகத்தில், நேற்று காலை நடந்தது. மாநில தேர்தல் கமிஷனர் அய்யர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், தமிழக டி.ஜி.பி., ராமானுஜம், உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஜார்ஜ், வடக்கு மண்டல ஐ.ஜி., சைலேந்திரபாபு, தேர்தல் பிரிவு ஐ.ஜி., அலெக்சாண்டர் மோகன், தேர்தல் பிரிவு எஸ்.பி., மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும் நடத்த வேண்டிய முன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஓட்டுச்சாவடி மற்றும் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு செய்யவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், ஓட்டுச்சீட்டுகளை அச்சடிக்கும் அரசு அச்சகங்களுக்கும், அங்கிருந்து ஓட்டுச்சீட்டுகளை விநியோக மையங்களுக்கும் எடுத்து செல்லும்போதும், கூடுதல் பாதுகாப்பு அளித்தல், ஓட்டுச் சாவடிகளுக்கான தளவாட பொருட்களை விநியோகிக்கும் மையங்கள், ஓட்டுசீட்டுகள் உள்ள பெட்டிகளை வைக்கும் அறை ஆகியவற்றில், பாதுகாப்பை பலப்படுத்துல் குறித்தும் முடிவு செய்யப்பட்டது. பதட்டமான ஓட்டுச்சாவடிகளை கண்டறிவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பொதுமக்கள் புகார் கொடுக்க வசதியாக, மாவட்டங்களில் உள்ள போலீசாரின் தொலைபேசி எண்கள் வெளியிடுதல், தேர்தல் நடத்தை விதிகளை முறையாக அமல்படுத்துதல், வேட்பாளர்களுக்கு பாதுகாப்பளித்தல், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் போன்றவற்றிற்கு அனுமதி வழங்குவதை முறைப்படுத்துதல், ஒலிபெருக்கி மற்றும் வாகனங்களை பயன்படுத்த அனுமதி வழங்குதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கள்ள ஓட்டுபோடுவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் தேர்தலுக்கு முன் அதை போலீசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தல், மாநில முழுவதும் தேர்தல் பிரசார பயணம் செய்யும் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல், தேர்தல் நேரத்தில் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளை கண்காணித்தல், தேவையான இடங்களில் வாகன சோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ளுதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் மது விற்பனையை கண்காணித்தல், அரசு வாகனங்கள் முறையற்ற வகையில் பயன்படுத்துவதை தடுத்தல், மாநில எல்லைகளில் பாதுகாப்பை அதிகரித்து கண்காணித்தல், தேர்தல் பணிக்கு செல்லும் போலீசாருக்கு பயிற்சி அளித்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தின் இறுதியில் பொதுமக்கள் அறிந்துக்கொள்ளும் வகையில், போலீசாரின் தொலைபேசி மற்றும் மொபைல்போன் எண்களை உடனடியாக வெளியிட வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.