Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/போலீசுக்கு இணையான ஊதிய நிர்ணயம், பதவிஉயர்வு சிறைக்காவலர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறுமா

போலீசுக்கு இணையான ஊதிய நிர்ணயம், பதவிஉயர்வு சிறைக்காவலர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறுமா

போலீசுக்கு இணையான ஊதிய நிர்ணயம், பதவிஉயர்வு சிறைக்காவலர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறுமா

போலீசுக்கு இணையான ஊதிய நிர்ணயம், பதவிஉயர்வு சிறைக்காவலர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறுமா

ADDED : செப் 03, 2011 02:43 AM


Google News
நாள் முழுவதும் வேலை.... தாங்க முடியாத பணிப்பளு... உயர் அதிகாரிகள், கைதிகள் அளிக்கும் 'டார்ச்சர்'... என போலீசாருக்கு இணையாக அத்தனை கஷ்டங்களை அனுபவித்தாலும் ஒரே மாதிரியான ஊதிய நிர்ணயம், பதவி உயர்வு இல்லையே என குமுறுகின்றனர் சிறைக்காவலர்கள்.தமிழகத்தில் 10 மத்திய சிறைகள், 129 கிளைச்சிறைகள் உள்ளன. இச்சிறைகளில் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், ஜெயிலர், துணை ஜெயிலர், உதவி ஜெயிலர் என 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ள மத்திய சிறைகளிலும் நூற்றுக்கணக்கான காவலர்களே பணியில் உள்ளனர். 'ஒருபுறம் பணிப்பளு அதிகரிக்கிறது, சிறைகளில் காவலர் பணிக்காலியிடங்கள் அதிகமாகி வருகின்றன, தகுந்த ஊதியம், பதவிஉயர்வு கிடைப்பதில்லை, பணியாற்றிய திருப்தி, நிம்மதி சுத்தமாக இல்லை' என சிறைக்காவலர்கள் புலம்புகின்றனர்.அவர்கள் மேலும் கூறும்போது, ''1998ம்ஆண்டு பணியில் சேர்ந்தவர்கள் 14 ஆண்டுகளாக இரண்டாம் நிலை காவலர்களாக பணியாற்றி வருகிறோம். பணிநியமனம் செய்யப்படும் போது போலீஸ் துறை இரண்டாம் நிலைக்காவலர்களுக்கு இணையான ஊதியம் அளிக்கப்பட்டது.

1996-2001ல் ஆட்சியில் இருந்த திமுக அரசு 1999ல் நியமித்த ஒரு நபர் குழு போலீஸ் துறை இரண்டாம் நிலை காவலர்களுக்கு 3050-75-3800-80-4900 என ஊதிய நிர்ணயம் செய்தது. அப்போது சிறைக்காவலர்களுக்கு 2750-70-3800-75-440 என முரண்பாட்டுடன் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது.இந்த முரண்பாட்டை சரிசெய்ய அரசை தொடர்ந்து வலியுறுத்தினோம். ஊதிய முரண்பாட்டை நீக்க கோர்ட் பரிந்துரை செய்தது. எனினும் திமுக அரசு ஊதிய முரண்பாட்டை சரிசெய்யவில்லை. இதற்கு பின் போலீசாருக்கும், சிறைக்காவலர்களுக்கும் ஊதிய வேறுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஆறாவது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடு பிரச்னை தீரும் என எதிர்பார்த்தோம். 2009ல் ஆறாம் ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்திய திமுக அரசு மீண்டும் சிறைக்காவலர்களுக்கு துரோகம் செய்து ஊதிய நிர்ணயம் செய்தது. போலீசாருக்கு 5,200-20,200 மற்றும் தர ஊதியம் 1,900 ரூபாய், சிறைக்காவலர்களுக்கு 5,200-20,200 மற்றும் தர ஊதியம் 1,800 ரூபாய் என மீண்டும் முரண்பாடு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது.சிறைத்துறை தலைவர் பரிந்துரை, கோர்ட் உத்தரவு காரணமாக தர ஊதியம் 100 ரூபாய் மட்டும் உயர்த்தி போலீஸ் துறைக்கு இணையான ஊதியத்தை சிறைக்காவலர்களுக்கு வழங்குவதாக கடந்த திமுக அரசு நாடகமாடியது. முரண்பாடு நீக்கப்படவில்லை என்பதே உண்மை.

சிறைத்துறை என்றாலே திமுக அரசு அலர்ஜி தான். 1999ல் சிறைக்காவலர் சம்பள முரண்பாடு குறித்து கேட்ட போது முதல்வர், 'காயங்கள் ஆறிவிட்டன, தழும்புகள் மாறவில்லை' என சிறை ஊழியர்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்தினார்.சிறைத்துறையில் 1998ம்ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட காவலர்களை விட போலீஸ் துறையில் 1999ம்ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட போலீசாருக்கு தற்போது அடிப்படைச்சம்பளம் 1,120 ரூபாய் அதிகம். தற்போது புதிதாக சிறைத்துறையில் ஒருவர் பணியில் சேர்ந்தால் போலீஸ் துறையில் சேருபவரை விட 500 முதல் 700 ரூபாய் குறைவாக பெற வேண்டியுள்ளது. சிறைத்துறையில் 10, 15 ஆண்டுகள் வரை பணியாற்றிய சீனியர்கள் அதே ஆண்டுகள் பணியாற்றிய போலீசாரை விட 2 ஆயிரம் ரூபாய் குறைவாக பெறும் சூழல் உள்ளது.

பதவிஉயர்வு வாய்ப்பு இல்லை

போலீஸ் துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களுக்கு முதல்நிலைக்காவலர் பதவிஉயர்வு, அடுத்த 5 ஆண்டுகளில் தலைமைக்காவலர் (ஏட்டு), அடுத்த 10 ஆண்டுகளில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பதவிஉயர்வு, உரிய தர ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது. சிறைத்துறையில் அப்படி இல்லை.

சிறைத்துறையில் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு 3 சதவீத ஊதிய உயர்வு மட்டும் அளிக்கப்படுகிறது. தர ஊதிய உயர்வு கிடையாது. சிறைக்காவலராக 35 ஆண்டுகள் பணியாற்றி பதவிஉயர்வு இன்றி ஓய்வு பெற்றவர்களும் உள்ளனர். 15 ஆண்டுகளுக்கு மேல் பதவிஉயர்வு இன்றி பணியாற்றுவதால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். பதவிஉயர்வு எங்களுக்கு எட்டாக்கனி தான். 2001-2005ம்ஆண்டு அதிமுக ஆட்சியில் 24 ஆண்டுகளுக்கு மேல் இரண்டாம் நிலைக்காவலர்களாக பணியாற்றிய 1,200 பேருக்கு முதல்நிலைக்காவலர் பதவிஉயர்வு அளிக்கப்பட்டது. அதன் பின் முறையான பதவிஉயர்வு இல்லை.

சிறைத்துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முதல்நிலைக்காவலர், அடுத்த 5 ஆண்டுகளில் தலைமைக்காவலர், 25 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களுக்கு சிறப்பு உதவி சிறை அலுவலர் பதவிஉயர்வு வழங்கப்பட வேண்டும். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நேரடித்தேர்வு நடக்கும் போது போலீசாருக்கு அளிக்கப்படும் சலுகைகளை சீருடைப்பணியாளர்களான எங்களுக்கும் அளிக்க வேண்டும்.

அதிகாரிகளும்பரிதாபம் தான்

சிறைத்துறை அதிகாரிகளும் அவரவர் தகுதிக்கு இணையான போலீஸ் அதிகாரிகள் பெறும் ஊதியத்தை பெறும் நிலையில்லை. மொத்தத்தில் திமுக ஆட்சியில் சிறைத்துறை... ஆட்சியாளர்களுக்கு 'கிள்ளுக்கீரை'யாக, ஆகாத துறையாக இருந்தது. ஊதிய முரண்பாடு, பதவிஉயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்க வேண்டும்'' என்றனர்.

முதல்வர் நடவடிக்கைஎடுக்க வேண்டும்

ஊதிய நிர்ணயம், பதவிஉயர்வு குறித்து சிறைக்காவலர்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மனு அனுப்பியுள்ளனர். 7, 8 தேதிகளில் சட்டசபையில் சிறைத்துறை மானியக்கோரிக்கையின் போது ஊதிய முரண்பாடு நீக்குவது, பதவிஉயர்வு குறித்து முதல்வர் அறிவிப்பார் என சிறைக்காவலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

செ. ராமசாமி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us