Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வட மாவட்ட பள்ளிகளை புறக்கணிக்கும் ஆசிரியர்கள்: சொந்த ஊர்களிலேயே பணியாற்ற விருப்பம்

வட மாவட்ட பள்ளிகளை புறக்கணிக்கும் ஆசிரியர்கள்: சொந்த ஊர்களிலேயே பணியாற்ற விருப்பம்

வட மாவட்ட பள்ளிகளை புறக்கணிக்கும் ஆசிரியர்கள்: சொந்த ஊர்களிலேயே பணியாற்ற விருப்பம்

வட மாவட்ட பள்ளிகளை புறக்கணிக்கும் ஆசிரியர்கள்: சொந்த ஊர்களிலேயே பணியாற்ற விருப்பம்

ADDED : செப் 26, 2011 11:03 PM


Google News
Latest Tamil News

கல்வித் தரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தும், இந்த இடங்களைத் தேர்வு செய்ய ஆசிரியர்கள் ஆர்வம் காட்டாதது, அம்மாவட்ட மாணவர்களை பாதிப்படையச் செய்துள்ளது.



பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்க கல்வித் துறையில் உள்ள ஆசிரியர்களுக்கான பொதுப் பணியிட மாறுதல் கவுன்சிலிங், சமீபத்தில் மாநிலம் முழுவதும் நடந்தது.

ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பதற்கு முன், பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடக்கும். சமச்சீர் கல்வி பிரச்னை காரணமாக, இந்த ஆண்டு கால தாமதமாக நடந்தது. கவுன்சிலிங்கில், திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில், ஒவ்வொரு பாடத்திலும் 200, 300 காலிப் பணியிடங்கள் இருந்தும், இம்மாவட்டங்களில் உள்ள பணியிடங்களை ஆசிரியர்கள் தேர்வு செய்யவில்லை. மாறாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பணியிட மாறுதல் பெறுவதற்கே ஆசிரியர்கள் தீவிர ஆர்வம் காட்டினர். மாநிலம் முழுவதும் பணியாற்றும் ஆசிரியர்களில் கணிசமான பேர், தென் மாவட்டங்களை பூர்வீகமாகக் கொண்டவர்களாக இருப்பது தான் இதற்கு காரணம்.



புதிதாகத் தேர்வாகும் ஆசிரியர்கள் அனைவரும், வட மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். பணியிட மாறுதல் பெறுவதற்கு, பணி புரியும் பள்ளியில் ஒரு ஆண்டு பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பது விதி. அதன்படி, ஒரு ஆண்டு முடிந்ததும், யாரையாவது பிடித்து, சொந்த மாவட்டங்களுக்கு சென்று விடுகின்றனர். இதனால், வட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்ட நிலவரம்: பள்ளிக் கல்வி அமைச்சர் சண்முகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில், முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 59, கணிதத்தில் 43 இடங்கள், வேதியியலில் 41 இடங்கள், தாவரவியல், விலங்கியலில் தலா 3 இடங்கள், உயிரியலில் 16 இடங்கள், வரலாறு பாடத்தில் 23 இடங்கள், பொருளியல் பாடத்தில் 23 இடங்கள், வணிகவியல் பாடத்தில் 21 பாடங்கள் என, 232 இடங்கள் காலியாக உள்ளன. இதர பாடங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் தொடக்க கல்வித் துறை பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களையும் சேர்த்தால் 500க்கும் மேல் போகும். தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர், வேலூர் போன்ற மாவட்டங்களிலும் கணிசமான இடங்கள் காலியாகத் தான் இருக்கின்றன. இந்த காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்புவதுடன், தொடர்ந்து காலிப் பணியிடங்கள் ஏற்பட்டால் உடனே நிரப்பவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், கல்வியில் பின்தங்கியுள்ள வட மாவட்டங்களின் தலையெழுத்தை என்றைக்குமே மாற்ற முடியாது.



ஐந்தாண்டுகள் கட்டாயம்: விழுப்புரம் மாவட்டத்தைப் பற்றி நன்கு அறிந்த கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிதாகத் தேர்வாகும் ஆசிரியர்களில், பெரும்பாலானோர் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பது ஒரு முக்கிய காரணம். முதலில் வேலை கிடைத்தால் போதும் என்று சேர்ந்து விடுகின்றனர். அதன் பின், யாரையாவது பிடித்து, சொந்த மாவட்டத்திற்கு மாறுதல் பெற்று சென்று விடுகின்றனர். புதிய நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், குறைந்தது ஐந்தாண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், இந்த பிரச்னையை ஒழிக்க முடியும். ராணுவத்தில், மொழி தெரியாத மாநிலங்களில் பார்டரில் இரவு, பகலாக வீரர்கள் வேலை பார்க்கின்றனர். இங்கே, சொந்த மாநிலத்தில், சகல வசதிகளுடன், மத்திய அரசுக்கு இணையான சம்பளத்துடன் வேலை பார்ப்பதில் ஆசிரியர்களுக்கு என்ன பிரச்னை? இவ்வாறு அவர் கூறினார்.



மாணவர்கள் பாதிப்பு உண்மை தான்...: கல்வித் துறை அதிகாரி குறிப்பிட்டதாவது: ஆசிரியர் காலிப் பணியிடங்களால், கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவது உண்மை தான். வட மாவட்டங்களில் பணியில் சேரும் ஆசிரியர்கள், தங்களது பிள்ளைகளை, அந்தப் பகுதியில் உள்ள நல்ல பள்ளியில் சேர்த்துவிட்டு, குடும்பத்துடன் அப்பகுதியில் வசிக்கலாம். ஆனால், சொந்த மாவட்டத்தில் அல்லது சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பெரிய பள்ளிகளில் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால், பல ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்று சென்று விடுகின்றனர். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.



- ஏ.சங்கரன் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us