Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தி.மு.க., "மாஜி' கவுன்சிலர்களுக்கு எதிராக நோட்டீஸ் யுத்தம்!

தி.மு.க., "மாஜி' கவுன்சிலர்களுக்கு எதிராக நோட்டீஸ் யுத்தம்!

தி.மு.க., "மாஜி' கவுன்சிலர்களுக்கு எதிராக நோட்டீஸ் யுத்தம்!

தி.மு.க., "மாஜி' கவுன்சிலர்களுக்கு எதிராக நோட்டீஸ் யுத்தம்!

ADDED : அக் 15, 2011 02:06 AM


Google News
கோவை : ஓட்டுப்பதிவுக்கு இன்னும் இரு நாட்களே இருக்கும் நிலையில், கோவை மாநகராட்சியில் போட்டியிடும் 'மாஜி' தி.மு.க., கவுன்சிலர்களுக்கு எதிராக, நோட்டீஸ் யுத்தம் துவங்கியுள்ளது.

கோவை மாநகராட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக, தி.மு.க.,- காங்., கூட்டணியே அதிகாரத்தில் இருந்தது. மொத்தம் 30 கவுன்சிலர்களுடன் பெரும்பான்மையாக இருந்த தி.மு.க., எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைத்துக்கொண்டு, எட்டு கவுன்சிலர்களைக் கொண்ட காங்.,வசம், ஆளும்கட்சிப் பொறுப்பை ஒப்படைத்தது; இதுவே, பல ஊழல்களுக்கும் அடிப்படையாக அமைந்தது. பாதாளச் சாக்கடைத் திட்டம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், பி.எஸ்.யு.பி., மழை நீர் வடிகால் திட்டம் என எந்த திட்டமும் முழுமையாக முடியாததற்கும், தரமற்று நடப்பதற்கும் இந்த கூட்டணியே முழு முதற்காரணம். ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தில், 1000 கோடி ரூபாய்க்குத் திட்டங்கள் தீட்டியும், எந்தப்பணியுமே இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த ஐந்தாண்டுகளில் நகரம் வளர்ச்சி அடையாவிட்டாலும், தி.மு.க., கவுன்சிலர்கள் சிலரின் வளர்ச்சி, யாராலும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இருந்தது. இவர்கள் யாருக்கும், மீண்டும் வாய்ப்புத் தரக்கூடாது என்று, உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே, 'உடன்பிறப்புகள்' பலரும், தலைமைக்கு 'பெட்டிஷன்' போட்டனர். ஸ்பெக்ட்ரம் ஊழல், நில அபகரிப்பு வழக்குகள், ஜாமின் மறுப்பு என பலவித விவகாரங்களில் அல்லாடும் தி.மு.க., தலைமைக்கு இவற்றையெல்லாம் பார்க்க நேரமில்லை. அதனால், 'ஊழலில் ஊதிய' கவுன்சிலர்கள் பலருக்கும் மீண்டும் அக்கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. இதன் காரணமாக, இந்த வார்டுகளில் உள்ள 'உடன்பிறப்புகள்' பலர் வெறுத்துப்போயுள்ளனர். இந்த 'மாஜி'க்களை தோற்கடிப்பதற்காக, பிற கட்சியினருடனும் இவர்கள் கை கோர்த்துள்ளனர். இவர்களின் ஏற்பாட்டின்பேரில், 'மாஜி' தி.மு.க., கவுன்சிலர்களுக்கு எதிராக, நோட்டீஸ் யுத்தம் துவங்கியுள்ளது. தனி நபர்களைத் தாக்கி பகிரங்கமாக பிரசாரம் செய்ய முடியாததால், அந்தந்த வார்டு 'மாஜி' கவுன்சிலர் சொத்துக் குவிப்பு பற்றி வீடு. வீடாக நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது. முதலிடம்: மாநகராட்சியில் நகரமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்த 'மாஜி' கவுன்சிலர் ஒருவர் இதில் முதலிடம் பிடிக்கிறார். சேலத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள வணிக வளாகம், வேலாண்டிபாளையத்தில் 'லைன்' வீடுகள், பல இடங்களில் நிலங்கள், 2 ஸ்கார்பியோ கார்கள் என 50 கோடி ரூபாய்க்கு இவர் சொத்து சேர்த்திருப்பதாக புள்ளி விபரம் தருகிறது அந்த நோட்டீஸ். ஒரு காலத்தில் வாடகை ஆட்டோ டிரைவராக இருந்த இவருக்கு இவ்வளவு சொத்துக்கள் குவிந்தது பற்றி, மக்களிடம் இந்த நோட்டீஸ் கேள்வி எழுப்புகிறது. அடுத்ததாக, மண்டலத்துக்குப் பொறுப்பாக இருந்த 'கடவுளின்' பெயரைக் கொண்ட 'மாஜி' கவுன்சிலர் ஒருவரும் இதே அளவுக்குச் சம்பாதித்து இருப்பதாகச் சொல்கிறது மற்றொரு நோட்டீஸ். தொடர்ந்து பத்தாண்டுகளாக, அப்பகுதியின் கவுன்சிலராக இருந்தும், வார்டை எந்த வகையிலும் முன்னேற்றாமல், தானும், தனது நண்பர்களும் விளையாட, மாநகராட்சிப் பணத்தில் 'உள் விளையாட்டு அரங்கம்' அமைத்திருப்பதாக நோட்டீஸ் சுட்டிக்காட்டுகிறது. இவரைத் தோற்கடிக்க, ஓர் இளைஞர் பட்டாளமே, சிங்காநல்லூரில் சுற்றிக் கொண்டிருக்கிறது. மிரட்டும் மீசையுடன் 'செக்யூரிட்டி'யாக இருந்த மற்றொரு 'மாஜி' கவுன்சிலரின் 'வளர்ச்சி' பற்றி, இன்னொரு நோட்டீஸ் ஏகப்பட்ட தகவல்களை அடுக்குகிறது. செட்டிவீதியில் டீக்கடை நடத்தி வந்த 'மாஜி' கவுன்சிலருக்கு 20 கோடி ரூபாய்க்குச் சொத்துக்கள் இருப்பதாக சொல்லும் நோட்டீஸ், தி.மு.க.,ஆட்சியில் அவரது மகன்கள் ஆட்டம் போட்டதாக பட்டியலிடுகிறது. மற்றொரு பகுதியில் மண்டலத்துக்குப் பொறுப்பாக இருந்த 'செல்வாக்கு' படைத்த 'மாஜி' கவுன்சிலர் ஒருவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் கடைகள் போடுவதற்கும், கட்டடம் கட்டுவதற்கும் வசூலில் வாரிக்கொட்டியதாக புகார் வாசிக்கிறது அப்பகுதியில் விநியோகிக்கப்படும் நோட்டீஸ். தி.மு.க., 'மாஜி' பெண் கவுன்சிலரையும் கூட நோட்டீஸ் குற்றச்சாட்டுகள் விட்டு வைக்கவில்லை. பி.எஸ்.யு.பி., திட்டத்தில் தகுதியில்லாத பலருக்கு மானியம் பெற்றுத்தருவதில், பல லட்ச ரூபாய் 'கொள்ளை' அடித்துள்ளதாக பெண் 'மாஜி'யின் கணவர் மீது குற்றம்சாட்டுகிறது அந்த நோட்டீஸ். இதுபோன்ற பல குற்றச்சாட்டுகளுக்கு மேலும் 3 'மாஜி'க்களும் ஆளாகியுள்ளனர். அச்சகத்தில் அச்சிடாமல், கம்ப்யூட்டரில் 'பிரிண்ட் அவுட்' எடுக்கப்பட்டு, நகல்களாக பெருக்கப்பட்டு, இந்த நோட்டீஸ்கள் விநியோகிக்கப்படுகின்றன. தேர்தலுக்கு இன்னும் இரு நாட்களே இருக்கும் நிலையில், தி.மு.க., 'மாஜி'க்களுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள இந்த நோட்டீஸ் யுத்தம், எந்தவிதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தேர்தலுக்கு பின் தெரியவரும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us