முறையான சிகிச்சை அளிக்காததால் சிறுவன் பலி : பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு நஷ்டஈடு
முறையான சிகிச்சை அளிக்காததால் சிறுவன் பலி : பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு நஷ்டஈடு
முறையான சிகிச்சை அளிக்காததால் சிறுவன் பலி : பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு நஷ்டஈடு
ADDED : செப் 17, 2011 12:20 AM
சென்னை: சாலை விபத்தில் பலத்த காயமடைந்து, முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் இறந்த சிறுவனின் பெற்றோருக்கு, நஷ்டஈடு வழங்க, தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு, நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. முகப்பேர் மேற்கு, வளையாபதி சாலையைச் சேர்ந்தவர் குழந்தையன். இவர், அண்ணா மேற்கு மற்றும் சாந்தி காலனியில் இயங்கிவரும், சுந்தரம் மருத்துவ நிறுவனத்தின், டாக்டர் ரங்கராஜன் நினைவு மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனர்களுக்கு எதிராக, நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: கடந்த, 2006, மார்ச் 27ல், குடும்பத்துடன் திருப்பதி சென்றுவிட்டு, காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். கார், பொன்னேரி அருகே வந்தபோது, விபத்தில் சிக்கியது. அந்த விபத்தில், என் மகன் லட்சுமணனின் தலை மற்றும் வலது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவன், அன்றிரவு 10.45 மணிக்கு, சாந்தி காலனியில் உள்ள, எதிர்மனுதாரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு, தொடை எலும்பு முறிவுக்கு மட்டும் அறுவை சிகிச்சை செய்தனர். தலையில் அடிப்பட்டதற்கு உரிய சிகிச்சை அளித்ததாக தெரியவில்லை. ஏப்ரல் 1ம் தேதி, 'டிஸ்சார்ஜ்' செய்தனர். வீடு திரும்பிய ஒரு வாரத்திற்குள், அவனுக்கு கடும் தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டது.
உடனே, அண்ணா நகரில் உள்ள எதிர்மனுதாரர் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான். அங்கு செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை அளிக்கப்பட்டும், நினைவிழந்த நிலையில், ஏப்ரல் 14ல், என் மகன் இறந்தான். தலை காயத்திற்கு உரிய சிகிச்சை அளிக்காததால், என் மகனை இழக்க நேரிட்டது. இதற்கு நஷ்டஈடாக, ஐந்து லட்சம் ரூபாய் தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த சென்னை(வடக்கு) நுகர்வோர் கோர்ட் நீதிபதி மோகன்தாஸ், உறுப்பினர் கமலகண்ணன் பிறப்பித்துள்ள உத்தரவில், 'எதிர்மனுதாரர்களின் சிகிச்சை குறைப்பாட்டால், மனுதாரரின் மகன் இறந்துள்ளது விசாரணையில் தெரிகிறது. இதற்கு நஷ்டஈடாக, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளின் நிர்வாகங்கள், மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடும், வழக்கு செலவாக, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, தெரிவித்துள்ளனர்.