ADDED : ஆக 03, 2011 10:36 PM
திருப்பூர் : பண்டிகை தினங்களில் அமோகமாக விற்பனையாகும் கடலை எண்ணெய் மற்றும் ரீபைண்ட் ஆயில் விற்பனை தற்போது மிகவும் குறைந்துள்ளது.
பண்டிகை கால வர்த்தகம் குறைந்துள்ளதால், எண்ணெய் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.ஈரோடு, காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் உள்ள ஆயில் மில்களில் இருந்து திருப்பூர் மார்க்கெட்டுக்கு எண்ணெய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வியாபாரிகள் ஒன்றிணைந்து, தேவைக்கு ஏற்ப ஆர்டர் செய்து லாரிகளில் எண்ணெய் கொண்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, எண்ணெய் கொண்டு வரும் போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. டின் ஒன்றுக்கு 10 ரூபாயாக இருந்த வாடகை, தற்போது 12 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.'வாட்' வரி உயர்வு, போக்குவரத்து செலவுகளை அடுத்து மொத்த மார்க்கெட்டில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. தேங்காய் எண்ணெய் கிலோ ரூ.100; நல்லெண்ணெய் 90; கடலை எண்ணெய் 104; விளக்கெண்ணெய் 140; பாமாயில் 62; சன் பிளவர் ஆயில் 86 ரூபாய் என ஏற்றம் பெற்றுள்ளன. செலவு அதிகரித்துள்ள நிலையில், மார்க்கெட்டில் எண்ணெய் விற்பனை குறைந்துள்ளது. குறிப்பாக, பண்டிகை காலங்களில் அதிகம் விற்பனையாகும் கடலை எண்ணெய், ரீபைண்ட் ஆயில் விற்பனை கூட, பெருமளவு சரிந்துள்ளது.எண்ணெய் வியாபாரிகள் கூறியதாவது: விலை ஏறினாலும் எண்ணெய் வர்த்தகம் எப்போதும் சீராகவே இருக்கும். பண்டிகை காலங்களில் எண்ணெய் பலகாரங்கள் செய்வதற்கு உபயோகிக்கும், கடலை எண்ணெய், ரீபைண்ட் ஆயில் விற்பனை அமோகமாக இருக்கும்; சில நேரங்களில்தட்டுப்பாடு கூட ஏற்படும். தொழில் பிரச்னை, எண்ணெய் ரகங்களில் விலை ஏற்றத்தால், திருப்பூரில் பொதுமக்களின் நுகர்வு திறன் பாதிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் எண்ணெய் பலகாரங்கள் செய்வதையும் குறைத்துள்ளனர். விசேஷ தினங்களில் லாபம் ஈட்டித்தரும் கடலை எண்ணெய், ரீபைண்ட் ஆயில் விற்பனை சரிவு, எண்ணெய் வர்த்தகத்துக்கு பெரும் இழப்பாக உள்ளது, என்றனர்.