/உள்ளூர் செய்திகள்/சென்னை/புதிய பஸ் நிலையம் அமைக்க திட்டம் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் நிதிக்காக காத்திருப்புபுதிய பஸ் நிலையம் அமைக்க திட்டம் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் நிதிக்காக காத்திருப்பு
புதிய பஸ் நிலையம் அமைக்க திட்டம் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் நிதிக்காக காத்திருப்பு
புதிய பஸ் நிலையம் அமைக்க திட்டம் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் நிதிக்காக காத்திருப்பு
புதிய பஸ் நிலையம் அமைக்க திட்டம் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் நிதிக்காக காத்திருப்பு
ADDED : ஆக 23, 2011 01:59 AM
சென்னை : சென்னை கண்ணகி நகர், பாடியநல்லூர் உள்ளிட்ட இடங்களில் பயணிகளின்
வசதிக்காக, புதிய பஸ் நிலையங்கள் அமைக்க திட்ட மதிப்பீடு தயாராகியும்,
எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் நிதி கிடைக்காததால் பணிகள் துவங்கவில்லை.சென்னை
மற்றும் புறநகர்ப் பகுதியில் தினமும் 3,300க்கும் அதிகமான மாநகர பஸ்கள்
இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களை பராமரிக்க மற்றும் பாதுகாக்க வடசென்னை,
மத்திய சென்னை, தென்சென்னை என சில இடங்களில், மாநகர பஸ் பணிமனை
அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிமனைகள் தற்போது போதுமானதாக இல்லை. மேலும்,
பணிமனைகளில் இரவு நேரத்தில் நிறுத்தப்படும் மாநகர பஸ்களை இயக்க,
விடியற்காலையில் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் நீண்ட தூரத்திலிருந்து
வருகின்றனர். பின், அந்தந்த பஸ் நிலையங்களில் உள்ள பஸ்களை ஓட்டிச்சென்று,
பயணிகளை ஏற்றுகின்றனர்.இந்த வீண் அலைச்சலை குறைக்கவும், பயணிகளுக்கு
விரைந்து சேவையை கொடுக்கும் வகையில், முக்கிய பஸ் நிலையங்களுடன் புதிதாக
பணிமனையும் அமைக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், சென்னை மற்றும்
புறநகர்ப் பகுதியில் அடிப்படை வசதியின்றி செயல்படும் பஸ் நிலையங்களின்
தரத்தை உயர்த்தவும், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்து
வருகிறது. இதுதவிர அதிகளவில் பஸ்கள் இயக்கப்படும் இடங்களில் புதிதாக பஸ்
நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.கோயம்பேடு எம்.எம்.டி.ஏ., காலனி
பஸ் நிலையம், 40 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இங்கு
பஸ்கள் நிறுத்த கான்கிரீட் பிளாட்பாரம், பயணிகள் இருக்கைகளுக்கு மேற்கூரை,
கழிவறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. வில்லிவாக்கம் பஸ் நிலையம் மிகவும்
தாழ்வாக உள்ளது. எனவே இரண்டடி ஆழத்திற்கு சமப்படுத்துவது; கான்கிரீட்
தளம்;டிரைவர்களுக்கு ஓய்வறை உள்ளிட்ட பணிகளுக்காக, 60 லட்சம் ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்டினப்பாக்கம் பஸ் நிலையத்தில், குண்டும் குழியுமாக இருக்கும் மண் தரையை
கான்கிரீட் தளமாக மாற்றவும் மேற்கூரை, பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து
தர, 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாள்
கோரிக்கைக்கு பின், ஸ்ரீபெரும்புதூரில் ஊராட்சி நிர்வாகம் கொடுத்த
இடத்தில், புதிதாக பஸ் நிலையம் 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கும் பணி
துவங்கியுள்ளது. புதுப்பிக்கப்படும் பஸ் நிலையத்தில், ஒரே நேரத்தில் 50
பஸ்கள் வரை நிறுத்த மேற்கூரைகள் அமைக்கப்படுகிறது.தமிழ்நாடு குடிசை மாற்று
வாரியத்திற்கு சொந்தமாக பெரும்பாக்கம், செம்மஞ்சேரியில் உள்ள ஐந்து ஏக்கர்
இடம் உள்ளது. இந்த இடத்தில் ஒன்றேகால் கோடி ரூபாய் செலவில், புதிய பஸ்
நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவடைந்ததும்,
மாநகர போக்குவரத்து கழகத்திடம் பஸ் நிலையம் ஒப்படைக்கப்படும்.அதன்
பராமரிப்பு முழுவதும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மேற்கொள்ளும்.
பெரம்பூர் பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய பஸ் நிலையங்களை, பணிமனையுடன்
அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பாடியநல்லூர், கண்ணகி நகரில்
நீண்ட நாட்களாக பஸ் நிலையம் அமைக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த
இடங்களில் புதிதாக பஸ் நிலையம் அமைப்பதற்காக, தலா 50 லட்ச ரூபாய் செலவில்
திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பல மாதங்களாகிவிட்டது.இது குறித்து பேசிய
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர், ''பொதுவாக, பஸ் நிலையம்
அமைப்பதற்கு எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில்
இருந்து நிதி பெறுவது வழக்கம். எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களிடம்
நிதி கிடைக்காததால், இந்த பஸ் நிலையம் அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது''
என்றார்.
ஜி.எத்திராஜுலு