
புதுடில்லி:ஸ்பெக்ட்ரம் வழக்கில், தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) ஆவணங்களை, சி.பி.ஐ., வேண்டுமென்றே தாக்கல் செய்யாமல் உள்ளது என, முன்னாள் அமைச்சர் ராஜா, டில்லி கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.
டில்லி சி.பி.ஐ., கோர்ட்டில், ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
நான் டிராய் விதிமுறையை மீறி விட்டதாக, சி.பி.ஐ., குற்றம் சாட்டியுள்ளது. நான் இந்தத் துறை அமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே, ரோமிங் வசதி ஏற்படுத்தப்பட்டு விட்டது. ரோமிங் வசதி விஷயத்தில், நான் டிராய் விதிமுறையை மீறியதாகக் குற்றம் சாட்டும் சி.பி.ஐ., இந்த நிமிடம் வரையில், இது தொடர்பாக டிராய் ஆவணங்களை, சி.பி.ஐ., கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை.
இன்னும் சொல்லப்போனால், தற்போது டில்லி திலக் மார்க் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர், இந்த விஷயம் தொடர்பாக, எந்த புகாரையும் எழுதவில்லை. தவறான எண்ணத்துடன் தான், என் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நான் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்னதாக, ரோமிங் வசதியில்லை என்பதை, சி.பி.ஐ., நிரூபிக்க வேண்டும். நான் அமைச்சராவதற்கு முன்பே, ரோமிங் வசதி இருந்தது. இதற்கு, டிராயும் அனுமதியளித்துள்ளது என்பதை, நான் நிரூபித்தால் என் மீது எந்தக் குற்றமும் சொல்ல முடியாது. இது தொடர்பாக, யார் என் சார்பில் வாதாடுவது?
டிராயை உதாரணம் காட்டி, என் மீது குற்றம் சாட்டும் சி.பி.ஐ., வேண்டுமென்றே டிராய் ஆவணங்களை, இந்த கோர்ட்டில் தாக்கல் செய்யாமல் உள்ளதாக, அதன் மீது நான் குற்றம் சாட்டுகிறேன். விரைவில், டிராய் ஆவணங்களை, சி.பி.ஐ.,இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, ராஜா வாதாடினார்.