வழிப்பறி: சஸ்பெண்ட் போலீஸ் தலைமறைவு
வழிப்பறி: சஸ்பெண்ட் போலீஸ் தலைமறைவு
வழிப்பறி: சஸ்பெண்ட் போலீஸ் தலைமறைவு
ADDED : ஜூலை 17, 2011 01:51 AM
அழகர்கோவில் : கல்லுப்பட்டி அருகே நத்தப்பட்டியை சேர்ந்தவர் செல்வம்.
மதுரை சிறையில் போலீசாக பணியாற்றிவர், நான்கு ஆண்டுகளுக்கு முன் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இவரது நண்பர் பரவையை சேர்ந்தவர் பாரதிராஜா, லோடுமேன். இருவரும் அழகர்கோவில் மலைப் பகுதியில் பல நாட்களாக போலீஸ் எனக் கூறி பக்தர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பலர் அப்பன்திருப்பதி போலீசில் புகார் செய்தனர். வழிப்பறியில் ஈடுபடுபவர்களை கைது செய்யும்படி எஸ்.பி., ஆஸ்ராகர்க் உத்தரவிட்டார். அதன்படி டி.எஸ்.பி., பாண்டி மற்றும் போலீசார் அழகர்கோவில் மலைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மதுரையில் ஒரு கல்லூரியில் படிக்கும் சிவகங்கையை சேர்ந்த ராஜபாண்டி, தனது கல்லூரி காதலியுடன் நேற்று பகலில் அழகர்கோவில் சென்றார். மலையில் காட்டுப் பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த செல்வம், பாரதிராஜா ஆகியோர் தாங்கள் போலீஸ் எனக் கூறி, ஸ்டேஷனுக்கு வரும்படி அழைத்தனர். தயங்கிய காதலர்களிடம் இருந்து 1500 பணம் இரண்டு மொபைல் போன்களை பறித்து சென்றனர். வழிப்பறி சம்பவம் பற்றி அங்கு வந்த ரோந்து போலீசிடம் பக்தர்கள் கூறினர். போலீசார் தேடியபோது பாரதிராஜா பிடிபட்டார். பணம் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர். தலைமறைவான சஸ்பென்ட் போலீசை, அப்பன்திருப்பதி போலீசார் தேடி வருகின்றனர்.