Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/யூனியன் சேர்மன் பதவியையும் மக்கள் தேர்வு செய்ய வேண்டும்

யூனியன் சேர்மன் பதவியையும் மக்கள் தேர்வு செய்ய வேண்டும்

யூனியன் சேர்மன் பதவியையும் மக்கள் தேர்வு செய்ய வேண்டும்

யூனியன் சேர்மன் பதவியையும் மக்கள் தேர்வு செய்ய வேண்டும்

ADDED : செப் 22, 2011 12:09 AM


Google News
செய்துங்கநல்லூர் : யூனியன் சேர்மன் பதவிக்கு நேர்முகமாக மக்கள் ஓட்டு மூலம் தேர்வு செய்ய வேண்டும் என பல தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பஞ்., தலைவர் நகராட்சி தலைவர், கார்ப்பரேஷன் மேயர் போன்ற பதவிகளுக்கு மக்கள் தேர்ந்தெடுப்பது போல யூனியன் சேர்மன் பதவிக்கும் மக்கள் ஓட்டு முறையே அரசு அமல்படுத்த வேண்டும் என பல தரப்பு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். யூனியன் சேர்மன் பதவி என்பது முக்கியமானதாகும். நமது தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ள கூடிய உள்ளாட்சி அமைப்பு தகவல்களில் யூனியன் சேர்மன் ஒருவராக உள்ளார். அனைத்து மக்களும் சேர்ந்து அவரை தேர்வு செய்ய உரிமை தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அப்போது தான் அவரது அறிமுகம் அனைவருக்கும் கிடைக்கும் என்றும், ஏதாவது தேவைகள் என்றால் எளிதில் அவரை அணுகி தங்கள் பிரச்னைகளை தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். யூனியன் சேர்மன் பதவிக்கு போட்டியிட்ட யூனியன் கவுன்சிலர் ஒருவர் கூறுகையில், சேர்மன் பதவிக்கு மக்கள் ஓட்டு முறை தான் எளிதாகும். நேரடியாக மக்களிடம் வாக்குகளை சேகரித்து விடலாம். போக்குவரத்து மற்றும் சாப்பாடு போன்ற செலவுகள் தான் ஆகும். ஆனால் கவுன்சிலர்கள் முறை என்றால் அதிகமான செலவு ஆகும். கவுன்சிலர்கள் தங்கள் தகுதிக்கு அதிகமான அளவு பணம் கேட்பர். மேலும் அவர்களை சேர்மன் தேர்தல் வரை நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். நகர்புறங்களில் உள்ள நல்ல லாட்ஜில் ரூம் எடுத்து அவர்களை தங்க வைக்க வேண்டும், தினமும் சாப்பாடு மட்டும் அல்ல டாஸ்மாக் வியாபாரத்தையும் வாங்கி கொடுக்க வேண்டும். இது போன்ற பல செலவுகளை செய்ய வேண்டும். இங்கு வந்ததும் ராயல் ஆகிவிடுவார்கள். இப்படிப்பட்ட செலவுகள் மட்டுமல்ல மன உளைச்சல்களும் அதிகமாகி விடுகின்றது. எதிர் வேட்பாளர் கவுன்சிலர்களை கடத்தி சென்று விடக்கூடாது என்று அவர்களுக்கு பாதுகாப்பு போட வேண்டும். இன்னும் பல காரியங்களை செய்ய வேண்டும். அத்தனையும் செய்து தான் சேர்மன் பதவிக்கு வரமுடிகிறது. ஆனால் மக்கள் ஓட்டு என்றால் டீசன்டாக போய்விடும். எனவே மக்கள் ஓட்டு முறையே அரசு கொண்டு வர வேண்டும் இவ்வாறு கூறினார். யூனியன் சேர்மன் பதவி தேர்தல் குறித்து அரசியல் பிரமுகர்கள் கூறுகையில், உள்ளாட்சி தேர்தல் சேர்மன் பதவி என்பது மக்கள் ஓட்டு மூலம் தான் தேர்வு செய்ய வேண்டும். அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், சுயேட்சைகள் யார் வேண்டுமானாலும் நின்று வெற்றி பெறலாம். ஆனால் கவுன்சிலர் மூலம் தேர்வு என்றால் அதற்கான வேட்பாளர்களை கட்சி தேர்வு செய்து அந்தந்த கவுன்சில் தொகுதியில் நிறுத்த வேண்டும். ஒரு கவுன்சில் தொகுதி என்பது இரண்டு அல்லது மூன்று பஞ்.,களை கொண்டதாகும். அங்கு யார் மக்களுக்கு அதிக சேவை செய்கிறார்களோ அவர்களை மக்கள் தேர்வு செய்வார்கள். அங்கு கட்சி வேட்பாளர் என்று அவர்கள் பார்ப்பது இல்லை. எனவே கட்சி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை. அதற்கு மாறாக வேறு நபர்கள் வெற்றி பெற்று விடுகிறார்கள். எனவே சேர்மன் பதவிக்கு வர விரும்புவோர் அவர்களை விலைக்கு வாங்க வேண்டும். எம்எல்ஏ.,தொகுதியில் ஆகும் செலவை விட சேர்மன் பதவி செலவு அதிகமாகிறது. அவ்வளவு செலவு செய்து பதவியை பிடித்து மக்களுக்கு சேவை செய்ய முடியுமோ என்று தான் எங்கள் கேள்வி இவ்வாறு அவர் கூறினர். ஆகவே பெரும்பாலானோர் சேர்மன் பதவிக்கு மக்கள் ஓட்டு முறைதான் வேண்டும் என்று கூறுகின்றனர். இதனை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us