மருத்துவக் கழிவில் இறந்த சிசுக்கள் திருச்சி அருகே பெரும் பரபரப்பு
மருத்துவக் கழிவில் இறந்த சிசுக்கள் திருச்சி அருகே பெரும் பரபரப்பு
மருத்துவக் கழிவில் இறந்த சிசுக்கள் திருச்சி அருகே பெரும் பரபரப்பு
ADDED : ஜூலை 25, 2011 12:16 AM

திருச்சி : திருச்சி அருகே, மாநகராட்சி கழிவுநீர்க் குளத்தில் கொட்டப்பட்ட
மருத்துவக் கழிவுகளுடன், கருக்கலைப்பு செய்யப்பட்ட குறைவளர்ச்சி சிசுக்கள்
கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அருகே, பஞ்சப்பூரில்
திருச்சி மாநகராட்சி கழிவுநீர்க் குளம் உள்ளது. இந்தக் குளத்தில்
கொட்டப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகளுடன், இறந்த சிசுக்கள், கருக்கலைப்பு
செய்யப்பட்ட சிசுக்கள், மருத்துவ பரிசோதனைக்காகப் பயன்படுத்தப்பட்ட இறந்த
சிசுக்களும் கிடந்தன. அந்தக் கழிவுகளில் இருந்து இறந்த சிசுவை, ஒரு நாய்
கவ்விக் கொண்டு பஞ்சப்பூர் கிராமத்துக்குள் நுழைந்தது. கிராமத்தில்
விளையாடிய சிறுவர்கள் அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பதறியடித்துக்
கொண்டு வீட்டுக்கு ஓடிய சிறுவர்கள், அது பற்றி பெரியவர்களிடம்
தெரிவித்தனர். இதையடுத்து, மாநகராட்சி கழிவுநீர்க் குளத்தில் இருந்து,
சிசுவை கவ்வி வந்ததை கிராம மக்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, 39வது
வார்டு கவுன்சிலர் தங்கராஜ் மற்றும் கிராம மக்கள் அந்தக் குளத்துக்குச்
சென்றனர். அங்கு, மருத்துவக் கழிவுகளுடன் பத்துக்கும் மேற்பட்ட இறந்த
சிசுக்கள் டப்பாவில் அடைக்கப்பட்டுக் கிடந்ததைப் பார்த்து
அதிர்ச்சியடைந்தனர். அந்த டப்பாக்களில் 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டிருந்தது.
தவிர, சில அட்டைப் பெட்டிகள் மீது தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றின்
முகவரியும் இடம் பெற்றிருந்தது. இதுகுறித்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த
ஆனந்த்பாபு,25, கூறியதாவது: இந்தக் கழிவுநீர்க் குளத்தில் மருத்துவக்
கழிவுகள் மலை போல் கொட்டப்பட்டுள்ளன. அவற்றை முறையாக எரித்து அழிக்காமல்,
கழிவுநீர்க் குளத்தில் கொட்டியுள்ளனர். அவற்றை நாய்கள் கிராமத்துக்குள்
இழத்து வந்து போடுவதால், சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு, சிறுவர்கள், பெண்கள்
பயப்படுகின்றனர். இதுகுறித்து முறையாக விசாரித்து, மருத்துவக் கழிவுகள்
கொட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். தகவலறிந்த
எடமலைப்பட்டி போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். அவற்றை
கைப்பற்றி புதைத்தனர். 39வது வார்டு சுகாதார ஆய்வாளர் ராஜாகண்ணு
கூறுகையில், ''அது மருத்துவக் கழிவுதான். அதை, போலீசார் எடுத்து புதைத்து
விட்டனர். கொட்டியது யாராக இருந்தாலும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை
எடுக்கப்படும்,'' என்றார்.