Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோர்ட்களில் 2,000 வாரன்ட்கள் குவிந்தன : வழக்குகளை முடிக்க திணறல்

கோர்ட்களில் 2,000 வாரன்ட்கள் குவிந்தன : வழக்குகளை முடிக்க திணறல்

கோர்ட்களில் 2,000 வாரன்ட்கள் குவிந்தன : வழக்குகளை முடிக்க திணறல்

கோர்ட்களில் 2,000 வாரன்ட்கள் குவிந்தன : வழக்குகளை முடிக்க திணறல்

ADDED : ஆக 01, 2011 10:26 PM


Google News

கோவை மாஜிஸ்திரேட் கோர்ட்களில் செக்மோசடி, விபத்து மற்றும் அடிதடி வழக்குகளில் ஆஜராகாமல் 'டிமிக்கி' கொடுக்கும் நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட 2,000க்கும் @மற்பட்ட வாரன்ட்களால், கோர்ட் நடைமுறைகள் தாமதமாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கோவையில் எட்டு மாஜிஸ்திரேட் கோர்ட்களும், மாவட்டத்தின் பிற பகுதிகளான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் திருப்பூர் பல்லடம், அவினாசி, உடுமலை என 15 மாஜிஸ்திரேட் கோர்ட்களும்செயல்படுகின்றன. மாஜிஸ்திரேட் கோர்ட்களில் மூன்றாண்டுகள் வரை தண்டனை விதிக்கும் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் இக்கோர்ட்களில் அடிதடி, திருட்டு, செக்மோசடி, விபத்து வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இவ்வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்கள், போலி முகவரியுடன் கூடிய உத்தரவாத பத்திரம் கொடுத்து, சிறையில் இருந்து விடுதலையாகின்றனர். பின்னர், இவர்கள் தலைமறைவாகி, சொந்த ஊருக்கு சென்று விடுகின்றனர். இதனால், சாட்சி விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள், சாட்சிகள், கோர்ட்டில் ஆஜராகாமல் ஒத்தி வைக்கப்படுகின்றன. அடுத்தடுத்து ஆஜராகாமல் இருக்கும் இவர்களுக்கு, பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.செக்மோசடி வழக்குகள் அனைத்து மாஜிஸ்திரேட் கோர்ட்களிலும் தற்போது விசாரிக்கப்படுகின்றன. இவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு, கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பியதும் ஆஜராக வேண்டும். இந்த சம்மன்களை போலீசார் தான், சம்பந்தப்பட்டவர்களின் முகவரியில் சேர்க்க வேண்டும். ஆனால், கோர்ட்டில் ஆஜராகும் போலீசாருக்கு கூடுதல் பணி இருப்பதால், பெரும்பாலும் சம்மன்களை பெற்றுச் செல்வதில்லை. அடுத்த முறை வழக்கு விசாரணைக்கு வரும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த வாரன்ட் பிறப்பிக்கப்படுகிறது. இந்த வாரன்டையும், கோர்ட் போலீஸ்காரர் தான் செயல்படுத்த வேண்டும். போலீசாரிடம் கேட்டபோது,''கோர்ட் பணி அதிகமாக இருக்கிறது. இதையும் பார்த்து, வாரன்டில் இருப்பவர்களை தேடிப் பிடித்து, கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்பது இயலாத காரியம். ''ஏற்கனவே இருந்தது போல, வாரன்ட்டில் இருப்பவர்களை தேடிப் பிடிக்க தனிப்படை அமைக்க வேண்டும். அப்போது தான் வழக்குகள் விரைந்து முடிவடையும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான தீர்ப்பும் கிடைக்கும்,'' என்றனர். கோர்ட் ஊழியர்கள் கூறுகையில், 'செக்மோசடி வழக்குகள் அனைத்து மாஜிஸ்திரேட் கோர்ட்களிலும் அதிகரித்துள்ளன. இந்த வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட வாரன்ட்களும் அதிகம். ஒவ்வொரு கோர்ட்டிலும் 150 முதல் 200 வாரன்ட்கள் உள்ளன. இவற்றை செயல்படுத்தாமல் 'ஆதாயத்துக்காக' போலீஸ்காரர்கள் இழுத்தடிக்கின்றனர்,' என குற்றம் சாட்டுகின்றனர். விபத்து வழக்குகளில் குற்றம் சாட்டப்படும் அரசு பஸ் டிரைவர்களுக்கும் சம்மன், வாரன்ட்களை சேர்ப்பதில்லை. இதனால், வழக்குகளை முடிக்க முடியாமல், கோர்ட் ஊழியர்கள் திணறி வருகின்றனர். விரைந்து தீர்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்கள், ஏமாற்றமடைந்துள்ளனர்.மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள கோர்ட்களிலும் வாரன்ட்கள் அதிகரித்துள்ளன. இதற்கு காரணம் போலீஸ் தட்டுப்பாடு என கூறப்படுகிறது. கோவை மாநகர போலீஸ் கமிஷனரும், மாவட்ட எஸ்.பி.,யும் தீவிர நடவடிக்கை எடுத்தால், கோர்ட் வாரன்ட்களில் உள்ளவர்களை தேடிப்பிடித்து, ஆஜர்படுத்த முடியும். வழக்குகளை விரைந்து முடித்து, தேக்கத்தை தவிர்க்க முடியும். இல்லையேல், விசாரணையில் தாமதம் என்பது தவிர்க்க முடியாதது ஆகிவிடும், என, வக்கீல்கள் எச்சரிக்கை விடுத்தனர்.



-நமது நிருபர்-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us