ADDED : ஆக 01, 2011 10:42 PM
கோவை : ''கோவையில் தொழில்துறையின் அதீத வளர்ச்சியால், வீடு, நிலம் தொடர்பான தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இதனால் எதிர்காலத்தில் வீட்டு மனைகளின் விலை குறைய வாய்பில்லை'' என, கோவை கிரடாய் துணை தலைவர் ஓம்கர் சங்கர் தெரிவித்தார்.கோவை கிரடாய் (கான்பெடரேஷன் ஆப் ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா) சார்பில், பேர்ப்ரோ-2011 எனும் தலைப்பில், மூன்றாவது வீட்டுமனை கண்காட்சி, வரும் 5 முதல் 7ம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் நடக்கிறது. இது தொடர்பான சந்திப்பு நேற்று, ரத்னா ரீஜன்ட் ஓட்டலில் நடந்தது.கிரடாய் துணை தலைவர் ஓம்கர் சங்கர் கூறியதாவது: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து பெரிய நகரமாக விளங்கும் கோவையில், தொழில்துறையின் அதீத வளர்ச்சி காரணமாக, வீடு, நிலம் தொடர்பான தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து மருத்துவத் துறை, தொழில்நுட்பம், கல்வி ஆகிய துறைகளும் வளர்ந்து வருகின்றன. இதனால், எதிர்காலத்தில் வீட்டு மனைகளின் விலை குறைய வாய்ப்பில்லை. ஆகவே, அனைத்து தரப்பு மக்களுக்கும் வீடுகள் நியாமான விலையில், ஒளிவு மறைவில்லாத வெளிப்படையான அணுகுமுறையில், சிக்கல் இல்லாத எளிய வழிமுறையில் கிடைக்க செய்வதே இக்கண்காட்சியின் நோக்கமாகும். கண்காட்சியில், கோவை மாநகர் மற்றும் சுற்றுப்புறங்களில் விற்பனைக்குள்ள 1000க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிட நிறுவனங்களால் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. மேலும் 32 கிரடாய் உறுப்பினர் நிறுவனங்களுடன், 4 வங்கிகள் மற்றும் வீட்டு கடன் வசதி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. வீடு வாங்குபவர்களுக்கு உடனடி வீட்டு கடன் உதவி வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறைந்த முதலீட்டில் வீடு வாங்கும் திட்டம் உள்ளவர்களுக்கு ரூ.20 லட்சம் முதல் வீடுகள் உள்ளன. அதிகமாக ரூ.2 கோடி வரை மதிப்பிலான வீடுகள் இதில் இடம்பெறுகின்றன.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.