சுங்கத்துறையில் தொடுதிரை வசதி அறிமுகம்
சுங்கத்துறையில் தொடுதிரை வசதி அறிமுகம்
சுங்கத்துறையில் தொடுதிரை வசதி அறிமுகம்
தூத்துக்குடி : தூத்துக்குடி சுங்கத்துறை அலுவலகத்தில், சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான ஆவணங்களின் நிலை குறித்து தெரிந்து கொள்ள, தொடுதிரை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இனி, அந்த ஆவணங்களின் மேல், நடவடிக்கை என்ன நிலையில் உள்ளது என்பதை, பில் எண் அல்லது சரக்கு ஏற்றுமதி, இறக்குமதிக்கான குறியீட்டு எண் அல்லது சுங்க முகவருக்கான பான் எண் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை சுங்க அலுவலகத்திலுள்ள தொடுதிரையில் பயன்படுத்தி சம்மந்தப்பட்டவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வசதியை நேற்று துவக்கிவைத்து கமிஷனர் ராஜேந்திரன் பேசும்போது,'' மாதத்திற்கு 3,000 இறக்குமதி ஆவணங்களும், 18,500 ஏற்றுமதி ஆவணங்களும், ஊக்கத்தொகை வழங்கவேண்டிய சரக்குகள் தொடர்பான 10,000 ஆவணங்களும் கையாளப்படுகின்றன. 2011 -2012ம் நிதியாண்டிற்கான எங்களின் வருவாய் இலக்கு 2,730 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த நிதியாண்டு வருவாயான 2,190 கோடியை விட, 24.71 சதவீதம் அதிகமாகும். கடந்தமாதம் வரை 1,096 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நிலக்கரி, இயந்திரங்கள், பழைய இரும்பு போன்றவை கையாளப்பட்டுள்ளதால், வருவாய் உயர்வு ஏற்பட்டுள்ளது'' என்றார். சுங்கத்துறை கூடுதல் கமிஷனர் குமரேஷ், அதிகாரிகள், சுங்க முகவர்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் கலந்து கொண்டனர்.