ADDED : ஆக 07, 2011 02:51 AM
திருமங்கலம்:மதுரையை ரவுடியை ஆட்டோவில் கடத்தி வந்து, ஆஸ்டின்பட்டி அருகில்
வைத்துகொலை செய்துவிட்டு, தப்பி ஓடிவிட்டனர். மதுரை சோலையழகுபுரத்தைச்
சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் வெற்றிவேல்(26). பிரபல ரவுடி. இவர் மீது
ஜெய்ஹிந்த்புரம் உட்பட பல்வேறு போலீஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், நேற்று மாலை வெற்றிவேலை டி.என்., 59 ஏ.இ., 2527 எண்ணுள்ள
ஆட்டோவில் 8 பேர் கொண்ட கும்பல் அழைத்து வந்துள்ளது. தென்பழஞ்சியில்
இருந்து கரடிக்கல் செல்லும் ரோட்டில், ஆஸ்டின்பட்டி அருகே, கழுத்தை
அறுத்தும், உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளனர்.
பின், வெற்றிவேல் உடலை சிறிது தூரத்தில் உள்ள பள்ளத்தில் போட்டுவிட்டு,
அனைவரும் மது அருந்தியுள்ளனர். அங்கு சந்தேகப்படும்படி இவர்கள் இருப்பதை
பார்த்த, தோட்டக்காரர்கள் பிச்சை மற்றும் காமாட்சி ஆகியோர் ஆஸ்டின்பட்டி
போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர்.
அவர்கள் வருவதை பார்த்ததும் 8 பேரும் தப்பி ஓடியுள்ளனர். அப்போது ஆட்டோ
டிரைவர் ஆனந்தன், ஆட்டோவை எடுத்துக் கொண்டு தப்ப முயன்றுள்ளார். குண்டும்
குழியுமான ரோட்டில் ஆட்டோ வேகமாக செல்ல முடியவில்லை. அவரை போலீசார்
மடக்கிப் பிடித்தனர். சம்பவ இடத்தை எஸ்.பி., ஆஸ்ராகர்க் மற்றும்
டி.எஸ்.பி., முருகேசன் பார்வையிட்டனர்.