/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரை நாள் ரேஷன் கடைகளின் வேஷம் கலையுது : மதியமே மூடினால் நடவடிக்கைஅரை நாள் ரேஷன் கடைகளின் வேஷம் கலையுது : மதியமே மூடினால் நடவடிக்கை
அரை நாள் ரேஷன் கடைகளின் வேஷம் கலையுது : மதியமே மூடினால் நடவடிக்கை
அரை நாள் ரேஷன் கடைகளின் வேஷம் கலையுது : மதியமே மூடினால் நடவடிக்கை
அரை நாள் ரேஷன் கடைகளின் வேஷம் கலையுது : மதியமே மூடினால் நடவடிக்கை
ADDED : ஜூலை 11, 2011 09:40 PM
கோவை : மாவட்டத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகள் மதியத்துடன் பொருட்கள்
வழங்குவதை நிறுத்திக் கொள்கின்றன. இதனால், பகல் 12.00 மணிக்குள் அடித்துப்
பிடித்து பொருட்கள் வாங்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர்.
இது போன்ற கடைகளில் ஆய்வு நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம்
முடிவு செய்துள்ளது. கோவையில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகள் பிற்பகலில்
மூடப்பட்டு விடுகின்றன. காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வேலை நேரமாக
அறிவிக்கப்பட்டிருந்தாலும், கடை ஊழியர்களில் பலர் பின்பற்றுவதில்லை. ரேஷன்
அரிசியை நம்பியுள்ள ஏழை கூலித் தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்;
காலையில் வேலைக்கு செல்வதை தவிர்த்து ரேஷன் கடையின் முன் வரிசையில்
காத்துக் கிடக்கின்றனர். பெரும்பாலான ரேஷன் கடை ஊழியர்கள் காலையில் கடையை
திறந்து, வேகமாக ரேஷன் பொருட்களை வழங்கி விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இதனால் கடைகளின் முன் காலை நேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பல
ஆண்டுகளாக இதே நிலைமை உள்ளதால், 'மதியத்துக்கு மேல் ரேஷன் கடைகளில்
பொருட்கள் கிடைக்காது' என அனைவரும் நம்பி வருகின்றனர். இதை தங்களுக்கு
சாதகமாக எடுத்துக் கொண்டு, பகல் 12.00 மணியுடன் ரேஷன் பொருள் வினியோகத்தை
கடை ஊழியர்கள் நிறுத்திக் கொள்கின்றனர்.
பிற்பகலில் பல கடைகள் திறக்கப்படுவதில்லை. சில கடைகளில் ஷட்டரை பாதி
திறந்து வைத்துக் கொண்டு ஊழியர்கள் ஜாலியாக அரட்டை அடித்து வருகின்றனர்.
மளிகை கடைகளுக்கு ரேஷன் அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள் அதிக விலைக்கு
விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வருகின்றன. பல நாட்களாக ரேஷன் பொருட்கள்
வாங்காதவர்களின் கணக்கில், அவர்கள் வாங்கியதாக கணக்கு எழுதி அவற்றை அதிக
விலைக்கு ஓட்டல், கடைகளுக்கு விற்பனை செய்கின்றனர். சில கடை ஊழியர்கள்,
அதிகாரிகள் வந்தால் காண்பிக்க தனி பதிவேடும், பொதுமக்களிடம் காண்பிக்க தனி
பதிவேடும் பராமரிக்கின்றனர். இது தொடர்பான பொய் கணக்கு வழக்குகளை சரி
செய்ய, மதிய நேரத்தை ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். மாவட்ட வழங்கல்
அலுவலர் சங்கரபாண்டியன் கூறுகையில், ''ரேஷன் கடைகள் காலை 9.00 மணி முதல்
மதியம் 1.00 மணி வரையும், பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையும்
செயல்பட வேண்டும். இந்த நேரத்தில் வரும் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க
வேண்டும். வேலை நேரம் குறித்து அனைத்துக் கடைகளின் முன்பும், அறிவிப்பு
பலகை எழுதி வைக்க வேண்டும். பிற்பகலில் கடையை மூடி, ரேஷன் வழங்காத கடைகள்
குறித்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.ரேஷன் கடை
ஊழியர்களின் இந்த தில்லுமுல்லு, அதிகாரிகள் சிலரின் ஆசியுடன்தான்
நடக்கிறது. திடீர் ஆய்வுகள் குறித்து இவர்கள் முன்னரே தகவல் தெரிவித்து
விடுவதால், முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்கள் தப்பி வருகின்றனர்.
பிற்பகலில் கலெக்டர் ஆய்வு நடத்தினால், கடைகளில் நடக்கும் அத்தனை
மோசடிகளும் வெளிச்சத்துக்கு வரும்.