/உள்ளூர் செய்திகள்/சேலம்/சி.ஐ.டி.யு., சேலம் மாவட்ட செயலாளர் நீக்கம்சி.ஐ.டி.யு., சேலம் மாவட்ட செயலாளர் நீக்கம்
சி.ஐ.டி.யு., சேலம் மாவட்ட செயலாளர் நீக்கம்
சி.ஐ.டி.யு., சேலம் மாவட்ட செயலாளர் நீக்கம்
சி.ஐ.டி.யு., சேலம் மாவட்ட செயலாளர் நீக்கம்
ADDED : செப் 13, 2011 02:06 AM
சேலம்: சங்கப் பதவியை துஷ்பிரயோகம் செய்து, சட்ட விரோதத்துக்கு துணைப்போன சேலம் மாவட்ட சி.ஐ.டி.யு., செயலாளர் தியாகராஜன், பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக, உதயகுமார் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.சேலம் மாவட்ட சி.ஐ.டி.யு., தொழிற்சங்க செயலாளர் தியாகராஜன். இவரது இளைய மகன் சதீஷ் (30). இவருக்கும், தஞ்சாவூரை சேர்ந்த ராமதாஸின் மகள் கிருஷ்ணவேணிக்கும், 2007 மார்ச் 25ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, 70 பவுன் நகை, 3 லட்சம் ரூபாய் ரொக்கம், டூ-வீலர், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை சீர்வரிசையாக வழங்கப்பட்டன.திருமணம் முடிந்து, ஒன்றரை மாதத்தில், சதீஷ் சிங்கப்பூர் பறந்து விட்டார். அவரது மனைவி கிருஷ்ணவேணியை, சிங்கப்பூர் அனுப்பி வைப்பதாக, போக்குகாட்டி, 2 ஆண்டாக, மாமனார் குடும்பத்தார் அலைகழிப்பு செய்துள்ளனர். இது தொடர்பாக, இரு குடும்பத்தார் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால், ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கிருஷ்ணவேணி, பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.இது பற்றி, சேலம் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்யப்பட்டது. தியாகராஜன், சங்கப் பதவியை பயன்படுத்தி, போலீஸாரின் மேல் நடவடிக்கையை தடுத்துள்ளார். அதோடு, சென்னை உயர்நீதிமன்றத்தில், தனக்கும், தன் மனைவி பரிமளாவுக்கும் முன்ஜாமீன் பெற்று கொண்டார்.இந்நிலையில், சிங்கப்பூர் சென்ற சதீஷ், அங்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, இரண்டாண்டுக்கு பின் ஊர் திரும்பி உள்ளார். இது தொடர்பாக, அப்பெண்ணின் பெற்றோர், சிங்கப்பூர் போலீஸில் புகார் செய்தனர். சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரக உதவியுடன், சிங்கப்பூர் போலீஸார் சேலம் வந்தனர். அவர்களிடம், சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தார் சிக்கவில்லை.தகவல் அறிந்து, கிருஷ்ணவேணியின் பெற்றோர் ராமதாஸ்- முத்துலட்சுமி ஆகியோர், சேலம் மாவட்ட இந்திய கம்யூ., செயலாளர் ஜீவானந்தம் உதவியுடன், மார்க்சிஸ்ட் செயலாளர் ராஜகோபாலிடம் புகார் செய்தனர்.இதையடுத்து, தொழிலாளர் அமைப்புகள், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் தியாகராஜனை கண்டித்து, போஸ்டர்கள் ஒட்டின. எனினும், பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை. அதையடுத்து, கிருஷ்ணவேணியின் பெற்றோர், மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.இது தொடர்பாக, கட்சியின் மாநிலக்குழுவில் கலந்தாலோசிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்ட சி.ஐ.டி.யு., செயலாளர் தியாகராஜன், பதவியில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட செயலாளராக உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் 14ல், சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில், உள்ளாட்சி தேர்தல் தயாரிப்பு குறித்த சிறப்பு பேரவை கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில், மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். அப்போது, மாவட்ட செயலாளர் தியாகராஜன் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக உதயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளது பற்றி அறிவிப்பு செய்யப்பட உள்ளதாக கட்சி பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து உதயகுமார் கூறியதாவது:கடந்த 19ம் தேதி, சி.பி.எம்., ஸ்தாபன கூட்டம் நடத்தப்பட்டு, சேலம் மாவட்ட சி.ஐ.டி.யூ., செயலாளராக என்னை ஒருமனதாக தேர்வு செய்தனர். அதையடுத்து, நான், மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று கொண்டேன் என்றார்.