Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/"கிங் மேக்கர்'காமராஜர்

"கிங் மேக்கர்'காமராஜர்

"கிங் மேக்கர்'காமராஜர்

"கிங் மேக்கர்'காமராஜர்

ADDED : ஜூலை 15, 2011 12:24 AM


Google News
Latest Tamil News

இந்திய பிரதமராக இருந்தநேருவின் மறைவுக்கு பிறகு அடுத்த தலைமை யார் என்ற கேள்விஎழுந்தது. அப்போது ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை கவர்ந்தவர் காமராஜர். இந்நிலையில் அகிலஇந்திய காங்கிரஸ் காரிய கமிட்டிகூட்டத்தை காமராஜர் உடனேகூட்டினார்.பிரதமரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை காமராஜரிடமேஒப்படைத்தது காரிய கமிட்டி. 15 முதல்வர்கள், 540 காங்கிரஸ் எம்.பி.,க்கள், தலைவர்களை சந்தித்து, மக்களின் விருப்பம், தனது விருப்பம் ஆகியவற்றை தெரிவித்தார்.ஏகப்பட்ட கோஷ்டிகளை ஒன்று படுத்தினார். போட்டி என்பதேஇருக்கக்கூடாது என்று எண்ணினார் காமராஜர்.



இறுதியில் லால்பகதூர் சாஸ்திரியா... மொரார்ஜி தேசாயா... என்ற நிலை உருவானது. காமராஜரும் பார்லிமென்ட் உறுப்பினர்களும் லால்பகதூர் சாஸ்திரியையே ஆதரித்தனர். காமராஜர், இந்த முடிவை மொரார்ஜி தேசாயிடம் தெரிவித்தார். அவரும் காங்கிரசின் முடிவுக்குகட்டுப்பட்டார்.இந்தியாவுக்கு முதல் பிரதமராக நேருவை, காந்திஜி அளித்தார். 2வது பிரதமரை தேர்ந்தெடுத்த பெருமை காமராஜரை சேரும். 1965ம் ஆண்டு டிசம்பர் மாதம் தாஷ்கண்ட் சென்ற சாஸ்திரி அங்கேயே இறந்தார்.இன்னொரு பிரதமரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு, காமராஜர் மீது விழுந்தது.காமராஜரே பிரதமராக வேண்டுமென அதுல்யாகோஷ் போன்றோர் விரும்பினர். காமராஜர் மறுத்துவிட்டார். இந்திரா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை வகித்தவர். உலக தலைவர்களை நன்கறிந்தவர்.அவரையே பிரதமராக்க முடிவெடுத்தார் காமராஜர். மொரார்ஜி தேசாய் இதற்கு சம்மதிக்கவில்லை. பிரதமர் பதவிக்கான போட்டி நடந்தது.1966 ஜனவரி 19ம் தேதி பார்லிமென்ட் உறுப்பினர்கள் கூடினர்.இந்திராவின் பெயரை நந்தா முன்மொழிந்தார். மொரார்ஜி தேசாயின் பெயரை அனுமந்தையா முன் மொழிந்தார். ரகசிய ஓட்டெடுப்பில் 186 ஓட்டு வித்தியாசத்தில் இந்திரா வெற்றி பெற்றார். இந்திராவை பிரதமராக்கிய கையோடு, பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய கோஷ்டி பூசல்களை காமராஜர் தீர்த்து வைத்தார். காமராஜர் சொன்னால் சரி என்ற கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் உருவானது. நாட்டின் இரண்டு பிரதமர்களை தேர்ந்தெடுத்ததாலும், கட்சி தகராறுகளை தீர்த்து வைத்ததாலும்,மக்கள் இவரை, 'கிங் மேக்கர்' என்று புகழாரம் சூட்டி மகிழ்ந்தனர்.



குழந்தைகளை ஈர்த்த மதிய உணவு திட்டம்:''வயிறாற ஒருவேளை உணவருந்த முடியாத ஏழை எப்படி தன் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவான்... குழந்தைகளுக்கு ஒரு வேளையாவது உணவு அளித்தால், பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பும் ஆசை பெற்றவர்களுக்கு வரும்,'' என்று கூறிய காமராஜர், அதை செயலிலும் காட்டினார். இத்திட்டம், லட்சக்கணக்கான குழந்தைகளை, பள்ளிக்கு வரச்செய்தது. உலக நாடுகள் பலவும் இத்திட்டத்தை பாராட்டின. 1956 ஜூலை12 ம் தேதி கோவில்பட்டியில் இத்திட்டம் முறையாகஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு அரசு மானியம் முதல் முறையாக வழங்கப்பட்டது. 14லட்சம் சிறுவர்களுக்கு அதிகமானோர் இத்திட்டத்தால் பயன்பெற்றனர்.அரசு அளிக்கும் உதவியோடு, 1961-62ல் அமெரிக்க 'கேர்' நிறுவனத்தின் உதவியும் இத்திட்டத்துக்கு கிடைத்தது. பால் பவுடர், சோளமாவு, தாவர எண்ணெய் ஆகிய பொருள்களை 'கேர்' நிறுவனம் ஆரம்பப்பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கியது. தமிழகமெங்கும் பள்ளி வளர்ச்சி சீரமைப்பு இயக்க மாநாடுகள் நடத்தப்பெற்றன. 133 மாநாடுகளின் மூலம் 6.47 கோடி ரூபாய் பெறுமான நன்கொடைகள் கிடைத்தன. ரொக்கமாக மட்டும்சுமார் 4 கோடி ரூபாய்நன்கொடை அளித்தனர் மக்கள்.குழந்தைகள் மத்தியில் ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு ஏற்படாமல் தடுக்க ஏதாவது வழிசெய்ய வேண்டுமென காமராஜர் சிந்தித்தார். அதன் பயன்தான் இலவச சீருடை திட்டம். இதனால் குழந்தைகள் மத்தியில் ஏற்றத்தாழ்வு எண்ணம் தலைகாட்டாது என்று எண்ணினார். சிறுவர், சிறுமியர் சீருடைதிட்டத்தால் பல லட்சம் குழந்தைகள் பயனடைந்தனர். இவரது காலத்தில் தான், தமிழகத்தில் கல்வி, அமோக வளர்ச்சி அடைந்தது.



என்றும்எளிமை:அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் காமராஜர். சிறந்தஅரசியல் தலைவர் என்பதற்கான இலக்கணத்துக்கு அவர் ஒருவரே பொருத்தமானவர். பதவியில் இருந்த போதும், அதனால் தானோ, தன்னை சார்ந்தவர்களோ ஆதாயம் அடையாமல் பாதுகாத்து, உரியவர்களுக்கு தேவையானது கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்ட மாமனிதர்.



அவர் வாழ்ந்த காலத்திலும் சரி, இன்றைய காலகட்டத்திலும் சரி,அரசியல்வாதிகளுக்கு ஆடம்பரம் புதிதல்ல. பதவியின் அதிகாரம், அதன் மீதான மாறாத பிடிப்பு அன்றும்இன்றும் உள்ளது. ஆனால்,இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட காமராஜர், தன் மீது பற்று வைக்காமல் பொதுமக்கள் நலனே பெரிதென வாழ்ந்தவர்.பெரிய சிக்கல்களுக்கு கூடஎளிமையான தீர்வுகள் உள்ளன என்பதில் அதிக நம்பிக்கை கொண்டவர் காமராஜர். கல்வி தான் நாட்டை முன்னேற்றும், குழந்தைகள் தான்நாட்டின் எதிர்காலம் என்று சிந்தித்ததால்தான் அவர் பள்ளிக்கூடங்களையும் மதிய உணவுத் திட்டங்களையும் அறிமுகப்படுத் தினார். அணைகள், தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை கொடுத்தார்.அரசு அதிகாரிகளாக இருந்தாலும் சரி, அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, பொது வாழ்வில் நேர்மையை கடைபிடிக்க வேண்டும், பொதுமக்களின் சேவகர்கள் என்ற மனப்பான்மை வேண்டும். பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் இந்த பதவியில் அமர்ந்திருக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும் எனவலியுறுத்தியவர்.



அமைச்சர்களிடம் அவர் கூறும் போது, 'பிரச்னைகளை எதிர்கொள்ளுங்கள். அதிலிருந்து தப்பிக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். அதற்கு சிறிய அளவிலேனும் தீர்வு காணுங்கள். நீங்கள் ஏதாவதுசெய்தால்தான் மக்கள் திருப்திஅடைவார்கள்' என்பார்.முதல்வர் என்பதற்காகவோ, கட்சித் தலைவர் என்பதற்காகவோ அவர் சிறிதும், தனக்கென வசதி செய்து கொள்ளாத தியாக உள்ளம் படைத்தவர். பதவிகளை மறுத்த காந்தியடிகள் ஒருவேளை பதவிக்கு வந்திருந்தால் எப்படி செயல்பட்டிருப்பாரோ அதுபோல் திகழ்ந்தார், தென்னகத்து காந்தி என்று போற்றப்படும் காமராஜர்.







இந்தக் காலத்தில் சாதாரண திட்டத்தை செயல்படுத்திய தலைவர்கள் கூட தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர். ஆனால் வறண்ட பூமியாக தமிழகத்தின் மண்ணை, அணைகள் கட்டி வளம் கொழிக்க வைத்தவர் காமராஜர் ஒருவரே. அவர் மட்டும் இல்லை என்றால் தங்கத் தமிழகம், மங்கிய தமிழகமாகி இருக்கும். முதல்வராக இருந்து அவர் நிறைவேற்றிய முக்கிய திட்டங்கள்:அணைகள்



* தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மணிமுத்தாறு அணை கட்டப்பட்டது. இதனால் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.



* மேட்டூர் அணையில் ரூபாய் 2.5 கோடியில் பாசன கால்வாய்கள் அமைக்கப்பட்டன. இதனால் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்பெறுகிறது.



* அமராவதி அணை 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.இதனால் 47 ஆயிரம் ஏக்கர் நிலம் பயனடைகின்றன.



* 2.5 கோடி ரூபாய் செலவில் வைகை அணை கட்டப்பட்டது. இதனால் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்பெறுகிறது.



* 2.5 கோடி ரூபாய் செலவில்சாத்தனூர் அணை கட்டப்பட்டது. இதனால் 20 ஆயிரம் ஏக்கர்



நிலங்கள் பயன் öறுகிறது.



* வாலையாறு அணை 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.இதனால் 6,500 ஏக்கர் நிலம்பயன் பெறுகிறது.



* மங்கலம் அணை 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது.இதனால் 6 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.



* ஆரணி அணை, 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இதனால் 1,100 ஏக்கர் நிலங்கள் பயன் பெறுகிறது.



* காவிரி டெல்டா பகுதியில் 30 லட்சம் ரூபாய் செலவில் கால்வாய்கள் புதுப்பிக்கப்பட்டன.



* கிருஷ்ணகிரி அணை, 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இதனால் 7,500 ஏக்கர் நிலங்கள் பயன் பெறுகின்றன.



* 10 கோடி ரூபாய் செலவில் கீழ்பவானித் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதனால் 2 லட்சம் ஏக்கர் நிலம் பயன் பெறுகின்றன.



* புள்ளம்பாடி திட்டம் 1.5 கோடிரூபாயில் உருவாக்கப்பட்டது.இதனால் 22 ஆயிரம் ஏக்கர்நிலங்கள் பயனடைகின்றன.



* கோமுகி ஆற்றுத்திட்டம், 75 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. இதனால் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன் பெற்றன.



* பேச்சிப்பாறை, அழியாறு, பரம்பிக்குளம் மற்றும் குந்தா ஆகியஅணைகள் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டன.தொழிற்சாலைகள்அவரது ஆட்சிக் காலத்தில் சென்னை கிண்டியிலுள்ள தொழிற்பேட்டைகள், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், எண்ணூர் அனல் மின் நிலையம், தூத்துக்குடி துறைமுகம் ஆகியவை முக்கியமானவை.சிமென்ட் ஆலைகள், காகித உற்பத்தி ஆலைகள், அலுமினிய உற்பத்தி நிறுவனங்கள், மாக்னசைட்,சுண்ணாப்பு சுரங்கங்கள், ரப்பர் தொழிற்சாலைகள் ஆகியவற்றையும் காமராஜர் ஏற்படுத்தினார்.நூல் நூற்பு, கார் உற்பத்தி, கார் உதிரிபாகம், சைக்கிள், என்ஜின், மோட்டார் வாகனம், தட்டச்சு பொறிகள், சுவிட்சு கியர்கள், எலக்ட்ரிக் கேபிள்கள், மருத்துவ அறுவை சிகிச்சை கருவிகள், தொடர்வண்டிப் பெட்டிகள், ராணுவவாகனங்கள் ஆகியவைதயாரிக்கும் தொழிற்சாலைகளையும் காமராஜர் நிறுவினார்.



வங்கி பாலன்ஸ் ரூ.100:காந்தியை பின்பற்றியகாமராஜர் இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிப்பவர் காமராஜர் தான் என்று வெளிநாட்டு ராஜதந்திரிகள் யூகித்த காலம். அமெரிக்க துணை ஜனாதிபதி ஹம்ப்ரி, காமராஜரை நேரில்சந்தித்து அமெரிக்காவுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்தார். உடனே ரஷியத் தூதர் ஓடோடிவந்து தம் நாட்டிற்கும் வருகை தருமாறு கேட்டுக்கொண்டார். சோவியத் ரஷியாவின் முன்னேற்றத்தை நேரில் கண்டறிய விரும்பிய காமராஜர் அந்நாட்டிற்குத்தான் விஜயம் செய்தார். காந்தியடிகள் 1931ல் வட்ட மேஜை மாநாட்டில், கலந்து கொள்வதற்கு பிரிட்டன் சென்ற போது, தனது வழக்கமான எளிய உடையிலே, சர்ச்சிலின் கூற்றுப்படி 'அரை நிர்வாணபக்கிரியாகத் தான்' இருந்தார். உடை விஷயத்தில் காந்தியடிகளைப் பின்பற்றிய ஒரே இந்தியத் தலைவர் காமராஜர்தான். வழக்கமான வேட்டி, சட்டையில் தான் மாஸ்கோவை வலம் வந்தார். காந்தியடிகளின் அகிம்சை, சத்தியம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டு தியாக உணர்வுடன் தேச சேவையில் ஈடுபட்ட காமராஜர், காந்தியடிகள் பிறந்தநாளன்று அமரர் ஆனது, காந்திய ஜோதியில் காமராஜர் ஆன்மா கலந்துவிட்டதையே காட்டுகிறது. பொதுவாழ்வில் தூய்மையை கடைப்பிடித்த காமராஜர்' மறைந்த நாளன்று, அவரது வங்கி பேலன்ஸ் நூறு ரூபாய்தான். ஆனால்அவரது புகழ் பேலன்ஸ், மதிப்பில் அடங்காது.



இவர்பற்றிஅவர்கள்:எதிரிகளும் போற்றும் ஏற்றமிகு தலைவராய் விளங்கியதுகாமராஜரின் மற்றொரு பண்பு. அதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உள்ளன. 1952 பொதுத்தேர்தலில் காமராஜர், ஸ்ரீவில்லிபுத்தூர் லோக்சபா தேர்தலில் நின்றபோது அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களுள் விஞ்ஞானி என்ற புகழ்பெற்ற ஜி.டி.நாயுடு. அதே ஜி.டி.நாயுடு, காமராஜர் முதல்வரான பின், அவர் புரிந்த சாதனைகளை வியந்து, காமராஜர் தான் என்றென்றும் தமிழக முதல்வராக இருக்க வேண்டும்என்றார். காமராஜரையும், காங்கிரசையும் கடுமையாகத் தாக்கிய ஈ.வே.ரா., 'பச்சைத் தமிழன்' என காமராஜரைப் பாராட்டினார்.அவரது சாதனைகளை காங்கிரஸ்காரர்களைவிட அதிகம் போற்றினார்.காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைமயையும் தொடக்க காலத்தில் கடுமையாக விமர்சித்தவர் எம்.ஜி.ஆர்., ஆனால் பின்காமராஜர் என் தலைவர் என்றுபகிரங்கமாக அறிவித்தார். அதுமட்டுமன்று மதுரைப்பல்கøக்கழகத்திற்கு காமராஜர் என்று பெயர் சூட்டியதும் அவர் தான்.1969ல் நாகர்கோவில் லோக்சபா தேர்தலில் காமராஜர் நின்றபோது திமுகவினர் அவருக்கு எதிராகத் சுதந்திராக் கட்சித் தலைவர் டாக்டர்மத்தியாசை நிறுத்தி கடுமையாக எதிர்ப்பிரச்சாரம் செய்தனர். அப்போது தி.மு.க., தலைவர் அண்ணாதுரை உடல்நலக்குறைவினால்பிரச்சாரத்திற்கு வரமுடியவில்லை. அவரது பேச்சு ரிக்கார்டு செய்யப்பட்டும், திரைப்படமாக்கப்பட்டும் தொகுதியெங்கும் காட்டப்பட்டது. அதில் காமராஜர் பற்றி கூறும்போது, 'காங்கிரஸ் என்னும் கிழச்சிங்கத்தின் கையிலுள்ள 'தங்க வளையல்' எனக் குறிப்பிட்டார். தங்கத் தவைனான காமராஜரைக் காட்டி காங்கிரஸ் ஓட்டுகளைசேகரிக்க முயல்கிறது என்றுதானே அதற்குப்பொருள். அதேபோல் காமராஜரும் எதிர்க்கட்சியினரைஎதிரிகள் என்று கருதவில்லை. அரசியலில் எதிர்க்கருத்து கொண்டோர் என்று தான் கருதினார். 1954ல் ராஜாஜி முதல்வர் பதவியிலிருந்து விலகியதும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் காமராஜர் பெயர்முதல்வர் பதவிக்கு முன்மொழியப்



பட்டது. அப்போது அவரை எதிர்த்து நின்றவர் சுப்ரமணியம். அவரை முன் மொழிந்தவர் பக்தவத்சலம். காமராஜர் வெற்றிபெற்றதும் அவ்விருவரையும் தம் அமைச்சரைவையில் சேர்த்துக்கொண்டார். தம்மை எதிர்த்தவர்களைப் பகைமை உணர்வு கொண்டு நோக்காத பரந்த உள்ளம் கொண்ட அவர் திறமைக்கு உரிய மதிப்பளித்தார்.



காண வேண்டிய காமராஜர் நினைவு இல்லம்:விருதுநகர் சுலோசன நாடார் தெருவில் காமராஜர் பிறந்த வீடு உள்ளது. அந்த இல்லத்தை அரசு புதுப்பித்தது. காமராஜர் சிலை அமைக்கப்பட்டு, இருபுறம் உள்ள சுவர்களில் காமராஜர், பல்வேறு அரசியல் கட்சித்



தலைவர் களுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள், காமராஜர் இறுதி யாத்திரைப்படம், காமராஜரின்உடலுக்கு இந்திரா அஞ்சலி செலுத்தும் படம் ஆகியவை வைக்கப்பட்டன.நினைவு இல்லத்தின்வலதுபுறம் உள்ள அறையில் தான் காமராஜர் பிறந்தார். அந்த அறையில் காமராஜர் அணிந்திருந்த கதர்சட்டை, கதர் துண்டு, கதர்வேட்டி, ஷேவிங் செட், உபயோகித்த பேனாக்கள், போர்த்திய பொன்னாடைகள் கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன. காமராஜர், ரஷ்யாவுக்கு செல்லும் போது அணிய கோட் தைத்திருந்தார். ஆனால் நான் கதர் சட்டை கதர் வேட்டியுடன் தான் சென்று வருவேன் எனக் கூறி சென்று வந்தார். அவர்



பயன்படுத்தாமல் விட்ட கோட்டும் புதிதாக வைக்கப்பட்டுள்ளது.இல்லத்துக்குள் நுழைந்ததுமே, அறையின் மையத்தில் காமராஜரின் சிலைகம்பீரமாக உள்ளது. இல்லத்தை பார்வையிட வருவோர், காமராஜர் சிலையை பார்த்ததுமே தங்களையும் அறியாமல் கையெடுத்து கும்பிடுகின்றனர். மாடியில், அவர் பயன்படுத்தியகட்டில், போர்வை, பாத்திரங்கள், படித்த புத்தகங்கள், பூட்ஸ் போன்ற பொருட்கள் உள்ளன. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நினைவகத்தை பார்வையிடலாம். பிறந்த நாளில் மட்டும் காலை 6 மணிக்கே நினைவு இல்லம் திறக்கப்படுவது வழக்கம்.







'கர்ம வீரர்' கதை:'கர்ம வீரர்' என அன்பாகஅழைக்கப்பட்ட காமராஜரின் வாழ்க்கை வரலாறு,அனவருக்கும் ஒரு பாடம்:1903 ஜூலை 15: இன்று விருதுநகராக வளர்ந்திருக்கும் அன்றையதிருநெல்வேலி மாவட்டம்விருதுபட்டியில் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மாள் தம்பதிக்குமகனாக பிறந்தார்.



1914 : ஆறாம் வகுப்புடன் பள்ளிசெல்வதை நிறுத்திக் கொண்டார்.



1919 : ரவுலட் சட்டத்தை எதிர்த்துகாந்திஜியின் அழைப்பை ஏற்று, காங்கிரசின் முழு நேர ஊழியரானார்.



1920 : ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கு கொண்டார். திருமண பேச்சை தாயார் தொடங்கிய போது மணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.



1922 : சாத்தூர் தாலுகா, காங்கிரஸ் மாநாட்டில் வரவேற்புச் செயலாளராக பணியாற்றினார்.



1923 : நாகபுரி கொடி போராட்டத்தில் பங்கு கொண்டார். மதுரையில்கள்ளுக்கடை மறியலில்ஈடுபட்டார்.



1925 : கடலூரிலிருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



1927 : சென்னையில் கர்னல் நீல் சிலையை அகற்றும் போராட்டத்தை நடத்த காந்திஜியிடம் அனுமதி பெற்றார். (போராட்டம் நடப்பதற்குள் நீல் சிலையை அரசே அகற்றியது)



1928 : சைமன் குழுவை எதிர்த்து,மதுரையில் காமராஜர் போராட்டம்.



1930 : வேதாரண்யத்தில் நடந்தஉப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதால், இரண்டு ஆண்டு அலிபூர் சிறையில் அடைக்கப்பட்டார்.



1931 : காந்தி-இர்வின் ஒப்பத்தம்காரணமாக காமராஜர் விடுதலை செய்யப்பட்டார். விருதுநகரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ராமநாதபுரத்திலிருந்து சென்னை மாகாண காங்கிரஸ் செயற்குழுவுக்கு



தேர்ந்தெடுக்கப்பட்டார்.



1932 : போலீஸ் ஸ்டேஷன் மீதுவெடிகுண்டு வீசியதாக சதி வழக்கு, காமராஜர் மீது சுமத்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டார்.



1933 : பிரிட்டனில் நடந்த வட்டமேஜை மாநாடு தோல்வியுற்றதால், நாடெங்கும் கிளர்ச்சி ஏற்பட்டது. பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். காமராஜரும் ஓராண்டு சிறை தண்டனை பெற்றார்.



1934 : காமராஜர் உழைப்பால், பொதுத்தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான வாக்குகள் பெற்று வென்றது.



1935 : டிச.28ம் தேதி காங்கிரஸ் பொன்விழா விருதுநகரில் காமராஜர் தலைமையில் கொண்டாடப்பட்டது.



1936 : காரைக்குடியில் நடந்தகாங்கிரஸ் கமிட்டித் தேர்தலில்சத்தியமூர்த்தி தலைவராகவும், காமராஜர் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



1937 : சட்டசபை தேர்தலில் சாத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். விருதுநகர் நகராட்சி மன்றத்தேர்தலில் 7வது வார்டில் போட்டியிட்டு வென்றார். நகராட்சித் தலைவராகும்படி பலரும் வேண்டியும் மறுத்து விட்டார்.



1940 : தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வென்றார்.



1941 : யுத்த நிதிக்கு பணம் தரவேண்டாம் என மக்களிடையே பிரசாரம் செய்ததால், பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும் போதே மே 31ல் விருது



நகர் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



1942 : ஆகஸ்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, அமராவதி சிறைச்சாலையில் இரண்டு ஆண்டுகள் கழித்த பிறகு, வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.



1945 : இரண்டாவது உலகப்போரில் பிரிட்டிஷார் வெற்றி பெற்றதால், காமராஜர் விடுதலை செய்யப்பட்டார்..



1946 : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தலில் வெற்றி பெற்றார். அதே ஆண்டு சென்னை சட்டசபைக்கும் தேர்ந்தெடுக் கப்பட்டார்.



1947 ஆக.15: சுதந்திரம் கிடைத்ததும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரானார்.



1954 : குலக்கல்வி திட்ட எதிர்ப்புகாரணமாக ராஜாஜி முதல்வர்பதவியை ராஜினாமா செய்யவும், சட்டசபை கட்சி தலைவராக காமராஜர் போட்டியிட்டு வென்றார்.



1954, ஏப்.13: காமராஜர் முதல்வரானார்.



1956 : மொழிவாரி மாநில பிரிவினையின் படி தமிழகம் உருவாவதற்கு ஆதரவு தெரிவித்தார். பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார்.



1957 : பொதுத்தேர்தலில் போட்டியிட்டு, வென்று, இரண்டாவது முறையாக முதல்வரானார்.



1960 : ஏழைக் குழந்தைகளுக்கு 11ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிப்பதற்கு ஆணையிட்டார்.



1962 : பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக முதல்வரானார்.



1963 : எல்லோருக்கும் இலவசகல்வி திட்டத்தை அமல்படுத்தினார். பின் பதவியை ராஜினாமாசெய்தார்.



1964 : அனைத்திந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



1966 : இந்திரா பிரதமர் ஆவதற்கு, காமராஜர் பெரும் முயற்சி செய்தார்.



1967 : பொதுத்தேர்தலில் காமராஜர் தோல்வி.



1969 : நாகர்கோவில் பார்லிமென்ட் இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தாயார் சிவகாமி அம்மையார் மறைவு.



1971 : பொதுத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி. பார்லிமென்ட்உறுப்பினராக காமராஜர் தேர்வு.



1975: அக்.2ம் தேதி எதிர்பாராமல் காமராஜருக்கு உடல் வியர்த்தது. டாக்டர் வருவதற்குள் உயிர் பிரிந்தது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us