Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வெள்ளையர்களின் கருப்பு நகரம்

வெள்ளையர்களின் கருப்பு நகரம்

வெள்ளையர்களின் கருப்பு நகரம்

வெள்ளையர்களின் கருப்பு நகரம்

ADDED : ஆக 17, 2011 05:53 PM


Google News
1640 ல் “தொழிற்சாலை’ என்று அழைக்கப்பட்ட தங்கும் வசதி கொண்ட கிடங்கு ஒன்றை

ஆங்கிலேயர்கள் கட்டினார்கள். அதுதான் பின்னாளில் புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டது.

இக் கோட்டையின் வடக்குப் பகுதியில் ஓர் இந்திய நகரம் உருவாக்கப்பட்டது. கருப்பு நகரம் (முத்தியால் பேட்டையும் பெத்தநாயக்கன் பேட்டையும் இணைந்தது) என்று அழைக்கப்பட்ட இந்நகரில்தான் ஆரம்ப காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியுடன் வணிகம் செய்த வணிகர்கள் வாழ்ந்து வந்தனர்.

பிரிட்டிஷாருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் நடந்த பல போர்களில் இந்தப் பகுதி முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இந்த நகரம்தான் பின்னாளில் ஜார்ஜ் டவுன் என்று பெயர் பெற்றது. இந்தியாவுக்கு வந்த மன்னர் ஜார்ஜ் நினைவால் இந்தப் பெயர் வைக்கப்பட்டது.

புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம் வாழ்வதற்கு சவுகர்யமற்றது. இப்பகுதியில் கடல் சீற்றம் மிகுந்து காணப்படும். இங்கு எங்கு தோண்டினாலும் உப்பு நீர்தான் கிடைக்கும். அன்று கோட்டைக்குள்ளும் வெள்ளை டவுனிலும் இருந்த ஆங்கிலேயர்களுக்கு பெத்தநாயக்கன் பேட்டையிலிருந்து மாட்டு வண்டிகளிலும் தலை சுமையாகவும் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

1722 ல் கேப்டன் பேகர் என்பவர் வகுத்துக் கொடுத்த “ஏழு கிணறு தண்ணீர் திட்டத்’<<<<<<தின்படி கோட்டையிலிருந்து இரண்டு மைல் தூரத்திலும் கடற்கரையிலிருந்து ஒரு மைல் தூரத்திலும் பெத்தநாயக்கன்பேட்டைக்கு வடக்கில் நல்ல தண்ணீருக்காக 7 கிணறுகள் வெட்டப்பட்டன. ஏழு கிணறுகள் என்று அழைக்கப்பட்டாலும் அங்கு பத்து கிணறுகள் வெட்டப்பட்டன. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அந்தக் கிணறுகள் நீர் தந்து கொண்டு இருந்தன.

ஜார்ஜ் டவுனுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டி, 1700 ல் ஆங்கிலேய மேலாண்மையால் சில பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏழு ஆண்டுகள் நடந்த முடிந்த பணியில் 17 அடிகள் அகலத்துக்கு சுற்றிலும் பாதுகாப்புச் சுவர் கட்டப்பட்டது. அதன் மேல்பகுதியில் பீரங்கிகள் வைக்க சுவர் ஏதுவானதாய் இருந்தது. இதற்கு உண்டான செலவை பொதுமக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பியது அரசாங்கம்.

அதற்காக கவர்னர் பிட் அனைத்து ஜாதியினரையும் அழைத்துப் பேசி ஜாதி அடிப்படையில் எவ்வளவு கொடுக்க வேண்டுமென பட்டியலிடப்பட்டது.

மைசூர் ஹைதர் அலி, 18 ம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் வலிமை மிகுந்த அரசனாக இருந்த நிலையில், அவ்வரசரின் படை சாந்தோமையும், மதராசபட்டினத்துச் சுற்றுப்புற இடங்களையும் 1767 ல் தாக்கியது. அத்துடன் அப்படையினர் அங்கிருந்த இடங்களையும் கோயில்களையும் சூறையாடியதைக் கண்டு ஜார்ஜ் டவுன் மக்கள் பீதியடைந்தனர். இதனால், வட பகுதியையும், மேற்குப் பகுதியையும் பாதுகாக்க மூன்றரை மைல் தூரத்துக்கு பாதுகாப்புச் சுவர்கள் கட்டப்பட வேண்டியிருந்தது.

எனவே, வெளியார் தாக்குதலின்றி இவ்விடத்தைக் காக்க வேண்டிய பாதுகாப்புக்காக கஜானாவிலிருந்து வேண்டிய முன்பணம் தரவும் அரசு முடிவு செய்தது. அந்த முன்பணத்தை வரி மூலம் வசூலிப்பதற்காக ஹென்றி புரூக் என்பவர் கலெக்டராக நியமிக்கப்பட்டு, அவர் கோடை வரி வசூலிக்கும் கலெக்டர் என்று அறியப்பட்டார்.

இதன்படி சுவர் கட்டுவதற்கான செலவும், பாதுகாப்புச் செலவும் 12 வருடங்களில் திரும்பிப் பெற முடியும் எனவும் கூறப்பட்டது. (இப்படி சுற்றி அமைக்கப்பட்ட சுவரின் உள் பகுதிதான் இன்றும் வால்டேக்ஸ் ரோடு என்று அழைக்கப்படுகிறது)

இத்திட்டத்தின்படி , பீரங்கிகள் வைக்க ஏதுவாக கொத்தளங்கள் அமைக்கப்பட்டன. வடபுறச்சுவர் சற்றே வளைந்து, தண்டையார்பேட்டையை நோக்கியிருந்தது. சுற்றுச்சுவர், கோக்ரேன் கால்வாயான வடக்கு ஆற்றை ஒட்டியிருந்தது. சுவர்களின் வெளிப்புறங்கள், பீரங்கி வைத்துச் சுட ஏதுவாகக் கட்டப்பட்டிருந்தன. அவை நல்ல அகலமாக, நடப்பதற்கு ஏற்றவையாக இருந்ததால் அவை “எஸ்பிளனேடுகள்’ என்று அழைக்கப்பட்டன.

தென்பகுதி 19 -ம் நூற்றாண்டின் மத்தியில், “பீப்பிள்ஸ் பார்க்’ ஆக்கப்பட்டது. அந்த சுவர்களில் பல தலைவாயில்கள் இருந்தன. அப்போது “எலிபென்ட் கேட்’ என்று அழைக்கப்பட்ட தலைவாயில் இருந்த இடம் இப்போது வாயிலில்லாது போனாலும் அப்பெயராலேயே அழைக்கப்படுகிறது.

ஆனால், முன்னர் திட்டமிட்டபடி ஆங்கிலேய மேலாண்மையால் வரி வசூலிக்க முடியவில்லை. அதற்குக் காரணம் வங்காளத்திலிருந்து வந்த கடிதமொன்றுதான் என்றும், கோட்டைக்கு வரி வசூலிக்கும் அதிகாரம் கம்பெனிக்குக் கிடையாதென்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அப்போதைய கவர்னர் ட்யூ ப்ரே தெரிவித்திருக்கிறார். இதனால், இங்கிலாந்தின் அனுமதியின்றி வரி வசூலிக்க முடியாததாயிற்று.

1640 ல் இந்தியாவில் தங்கிவிட்ட போர்த்துகீசியர்களால் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் தேவாலயமான “அஷம்சன் ஆப் அவர் லேடி சர்ச்’ மின்ட் அருகில் கட்டப்பட்டது. இச் சாலை போர்த்துகீசிய சாலை என்றே அழைக்கப்படுகிறது.

கேசவ பெருமாள் கோயில், மல்லீசுவரர் கோயில், கந்தசாமி கோயில் என ஜார்ஜ் டவுனின் ஒவ்வொரு வீதியும் ஒரு கோயிலையும் அதன்பின்னே ஒரு கதையையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஆர்மேனியர்கள் இங்கு தங்கி வணிகம் செய்ததன் அடையாளமாக ஆர்மேரியன் வீதி என்றும் அவர்களது தேவாலயம் ஆர்மேனியன் சர்ச் என்றும் அழைக்கப்படுகிறது.

1862 ல் ராணி விக்டோரியா பிறப்பித்த கடித உரிமத்தின் மூலம் மெட்ராஸ் உயர்நீதி மன்றம் தொடங்கப்பட்டது.

1788 ல் இந்தியாவுக்கு வந்த வணிகர் தாமஸ் பாரியின் நினைவாக பாரி முனை என்று பெயர் வைக்கப்பட்டது.

“மாமரங்கள், தென்னை மரங்கள், கொய்யா மரங்கள் என பல்வேறு மரங்கள் நடப்பட்டிருந்தன... அங்கு யாரும் சுதந்திரமாக நடக்கவும் மலிவான விலையில் பழங்களை வாங்கவும் முடிந்தது ...’ என ஜார்ஜ் டவுனின் அகலமான வீதிகளையும் கணக்கற்ற தோட்டங்களையும் பற்றி 1739 ல் ஒரு பிரிட்டிஷ் எழுத்தாளர் விவரித்திருக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us