ADDED : செப் 28, 2011 05:36 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், அ.தி.மு.க.வினர் வெடித்த பட்டாசில் இருந்து எழுந்த தீப்பொறி சாலையில் சென்ற மினி ஆட்டோ மீது விழுந்ததில், பஞ்சு பேல் முற்றிலும் எரிந்து நாசமானது.திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் பதவிக்கு, அ.தி.மு.க.,வின் பொதுக்குழு உறுப்பினர் பொன் சரஸ்வதி அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவர், ஆதரவாளர்களுடன் சென்று நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக, திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தார்.தொடர்ந்து, ஊர்வலமாக சென்று நகராட்சி சேர்மன் (பொறுப்பு) ரவியுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார். வருவாய் துறை அமைச்சர் தங்கமணி, முன்னாள் எம்.பி., சரோஜா, நகரச் செயலாளர் மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். அப்போது, அ.தி.மு.க., வேட்பாளரின் ஆதரவாளர்கள் ஆர்வமிகுதியால் நகராட்சி அலுவலகம் முன், பட்டாசு வெடித்தனர். அதிலிருந்து சிதறிய தீப்பொறி திருச்செங்கோட்டில் இருந்து சித்தாளந்தூருக்கு பருத்தி பஞ்சு பேல் ஏற்றிச்சென்ற மினி ஆட்டோ மீது விழுந்து தீப்பிடித்தது. மளமளவென பரவிய தீ கொளுந்துவிட்டு எரிந்தது.அங்கிருந்த, அ.தி.மு.க.,வினர் உள்ளிட்ட பலரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து, தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில், பஞ்சுபேல் முழுவதும் எரிந்து நாசமானது. டி.எஸ்.பி., சுஜாதா, இன்ஸ்பெக்டர் கருணகரன் விசாரணை நடத்தி வருகின்றனர்.