/உள்ளூர் செய்திகள்/கடலூர்/"கூவமாக' மாறும் "மணிமுக்தா' புண்ணிய நதி :விருத்தாசலத்தில் நிலத்தடி நீர் பாதிப்பு"கூவமாக' மாறும் "மணிமுக்தா' புண்ணிய நதி :விருத்தாசலத்தில் நிலத்தடி நீர் பாதிப்பு
"கூவமாக' மாறும் "மணிமுக்தா' புண்ணிய நதி :விருத்தாசலத்தில் நிலத்தடி நீர் பாதிப்பு
"கூவமாக' மாறும் "மணிமுக்தா' புண்ணிய நதி :விருத்தாசலத்தில் நிலத்தடி நீர் பாதிப்பு
"கூவமாக' மாறும் "மணிமுக்தா' புண்ணிய நதி :விருத்தாசலத்தில் நிலத்தடி நீர் பாதிப்பு
ADDED : ஆக 23, 2011 11:40 PM
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் புண்ணிய நதி என்றழைக்கப்படும் மணிமுக்தா ஆறு தற்போது மினி கூவமாக மாறி துர்நாற்றம் வீசுவதோடு நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் நகரம் மிகப்பெரிய பிரதான நகரமாக விளங்கி வருகிறது. இந்நகரில் புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில், கொளஞ்சியப்பர் கோவிலுக்கு அடுத்தப்படியாக புண்ணிய நதி என்றழைக்கப்படும் மணிமுக்தா ஆறு ஓடுவதும் இந்நகரின் முக்கிய சிறப்பம்சமாகும். விருத்தாசலம் நகரத்திற்குட்பட்ட மணலூர் பகுதியில் தொடங்கி, பூதாமூர் வரை மணிமுக்தா ஆறு ஓடுகிறது. இந்த இடைப்பட்ட துரத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நகரத்தின் அனைத்து கழிவு நீர் கால்வாய்களும் இந்த மணிமுக்தா ஆற்றிலேயே விடப்படுகிறது. இதனால் எப்போதும் ஆற்றில் மழை நீர் ஓடுவதுபோல் கழிவுநீர் ஓடுகிறது. விருத்தகிரீஸ்வரர் கோவில் விழா, பொங்கல் திருவிழா, மாசி மகம் உள்ளிட்ட திருவிழாக் காலங்களில் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆற்றில் கூடுவர். சபரி மலைக்கு மாலை போடுபவர்களும், பங்குனி மாதத்தில் அலகு மற்றும் காவடி எடுக்கும் பக்தர்களும் இந்த மணிமுக்தா ஆற்றையே பயன்படுத்துகின்றனர். ஆனால் கடந்த பல ஆண்டுகளாகவே மழைக் காலத்தை தவிர்த்து மற்ற நாட்களில் ஆற்றில் கழிவுநீர் மட்டுமே ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதற்கே கூச்சப்படுகின்றனர். மணிமுக்தா ஆற்றில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் அடைந்து தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு தன்மை மாறி குடிக்க லாயக்கற்ற கடின நீராக மாறி வருகிறது. இதனால் பொதுமக்கள் மினரல் வாட்டரையே குடிக்கும் நிலையில் உள்ளனர். இந்த சீர்கேட்டை அதிகப்படுத்தும் வகையில் ஆற்றை ஒட்டியுள்ள வியாபாரிகள் தேவையற்ற பிளாஸ்டிக் உள்ளிட்ட மண் வளத்தை பாதிக்கக் கூடிய மக்காத கழிவுகளை ஆற்றில் கொட்டுகின்றனர். வரலாற்றில் புண்ணிய நதியாக கருதப்படும் மணிமுக்தா ஆற்றில் குளித்தால் முக்தி அடையலாம் என்பது ஐதீகம். ஆனால் தற்போது இந்த ஆற்றை பார்க்கவே முடியாமல் மக்கள் முகம் சுளிக்கும் நிலையில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நகரத்தின் நலன் கருதி ஆற்றில் கழிவுநீரை விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஆற்றின் புனிதத் தன்மையையும், ஐதீகத்தையும், நிலத்தடி நீரையும் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.