பாலாற்றில் மணல் குவாரியை தடுக்க என்ன நடவடிக்கை: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
பாலாற்றில் மணல் குவாரியை தடுக்க என்ன நடவடிக்கை: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
பாலாற்றில் மணல் குவாரியை தடுக்க என்ன நடவடிக்கை: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : செப் 26, 2011 10:08 PM
சென்னை: 'வேலூர் மாவட்டத்தில், பாலாற்றில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதைத் தடுக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என, மாவட்ட கலெக்டர், போலீஸ் அதிகாரி பதிலளிக்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வாலாஜா தாலுகாவில் உள்ள சாத்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர், தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: பாலாறு படுகையில், எங்கள் கிராமம் உள்ளது.
700 ஏக்கர் நிலத்தில், பாலாறு தண்ணீரை பயன்படுத்தி, பாசனம் செய்கின்றனர். சில கான்ட்ராக்டர்கள் அனுமதி பெற்று, எங்கள் கிராமத்தில் மணல் குவாரி செய்கின்றனர். மூன்று அடி வரை தான் தோண்ட வேண்டும்; ஆனால், 30 அடி வரை தோண்டுகின்றனர். அனுமதிக்கப்பட்ட அளவை விட, கூடுதலாக மணல் எடுப்பதால், நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, மணல் குவாரிக்கு அளித்த அனுமதியை, ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. சட்டவிரோதமாக மணல் எடுத்து, அதைக் கொண்டு செல்வதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து, வேலூர் மாவட்ட கலெக்டர், போலீஸ் கண்காணிப்பாளர் பதிலளிக்க வேண்டும் என, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது. விசாரணையை, மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தது.


