/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கேரளாவில் தேவையால் கருப்பட்டி விலை உயர்வுகேரளாவில் தேவையால் கருப்பட்டி விலை உயர்வு
கேரளாவில் தேவையால் கருப்பட்டி விலை உயர்வு
கேரளாவில் தேவையால் கருப்பட்டி விலை உயர்வு
கேரளாவில் தேவையால் கருப்பட்டி விலை உயர்வு
ADDED : ஆக 11, 2011 11:51 PM
கோபிசெட்டிபாளையம்: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவுக்கு கருப்பட்டி அனுப்புவது அதிகரித்துள்ளதால், கருப்பட்டி விலை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கள் இறக்க தடை விதிக்கப்பட்டதால், கோபி வட்டாரத்தில் கருப்பட்டி காய்ச்சி விற்பதை ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் செய்து வருகின்றனர். மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பனை மரங்களில் இருந்தும், ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தென்னை மரங்களில் இருந்தும் பதநீரை இறக்கி, கருப்பட்டி தயார் செய்யப்படுகிறது. சில வாரங்களுக்கு முன் பனையில் பதநீர் சீஸன் முடிவுற்றது. தற்போது, தென்னை மரங்களில் மட்டுமே பதநீர் இறக்கப்படுகிறது. ஒரு தென்னை மரத்தில் நாள் ஒன்றுக்கு ஆறு லிட்டர் வரை பதநீர் கிடைக்கும். 18 லிட்டர் பதநீரை காய்ச்சினால்தான் 10 கிலோ கருப்பட்டி கிடைக்கும். சில நாட்களாக கோபி சுற்று வட்டாரத்தில் மழை பெய்வதால் பதநீர் இறக்குவது குறைந்துள்ளது. இதன் காரணமாக, கருப்பட்டி உற்பத்தியும் குறைந்து விட்டது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவுக்கு கருப்பட்டி அனுப்புவது அதிகரித்துள்ளது. அதன் காரணமாக கருப்பட்டி விலை 10 கிலோவுக்கு 18 ரூபாய் அதிகரித்துள்ளது.
கருப்பட்டி உற்பத்தியாளர்கள் கூறியதாவது: கோபி, நம்பியூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் நடப்பாண்டு அதிகளவில் புகையிலை பயிரிடப்பட்டுள்ளது. புகையிலையை பதப்படுத்தி, காய வைக்க, கருப்பட்டி அவசியம் தேவை. மேலும், ரம்ஜான் பண்டிகை பண்டிகை முன்னிட்டு கேரளாவுக்கு அதிகளவில் கருப்பட்டி அனுப்பி வைக்கப்படுகிறது. வழக்கமாக ஒரு லோடு கருப்பட்டி செல்லும் இடத்தில், தற்போது மூன்று லோடு அனுப்பி வைக்கப்படுகிறது. தேவை அதிகரித்தன் காரணமாக, சென்ற வாரம் 10 கிலோ கருப்பட்டி 380 ரூபாய்க்கு விற்கப்பட்டது, நடப்பு வாரம் 398 ரூபாயாக உயர்ந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.