ஈரோடு: முதல்வர் ஜெயலலிதா, ஈரோட்டில் இன்று உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதை முன்னிட்டு, மூன்று எஸ்.பி.,க்கள் தலைமையில் மொத்தம் 752 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
ஹெலிபேடு மற்றும் சித்தோடு நால்ரோடு பகுதியை மேற்கு மண்டல ஐ.ஜி., வன்னியபெருமாள் நேற்று முன்தினம் மதியம் ஆய்வு செய்து சென்றார். நேற்று மாலை 5 மணியளவில் டி.ஐ.ஜி., பாலநாகதேவி ஆய்வு செய்தார். ஈரோடு எஸ்.பி., பன்னீர் செல்வம் உடனிருந்தார். ஈரோட்டில் முதல்வரின் பாதுகாப்பு பணியில், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி ஆகிய மூன்று மாவட்ட எஸ்.பி.,க்கள் தலைமையில் பலத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் எஸ்.பி., பிரவேஸ்குமார் தலைமையில் ஹெலிபேடுக்கு 100க்கும் மேற்பட்ட போலீஸாரும், தர்மபுரி எஸ்.பி., அமீத்குமார்சிங், ஈரோடு எஸ்.பி., பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில், இரு ஏ.டி.எஸ்.பி.,க்கள், 12 டி.எஸ்.பி.,க்கள் என மொத்தம் 752 போலீஸார், சித்தோடு நால்ரோடு பகுதியிலும் குவிக்கப்படவுள்ளனர். போச்சம்பள்ளி சிறப்பு காவல்படையின் மூன்று கம்பெனி போலீஸார் 150 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். போலீஸாருக்கு, மதியம் சாப்பாடு மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்க, ஈரோடு ஆயுதப்படை கேன்டீனில் 2,000 பாக்கெட் தக்காளி சாதம் தயார் செய்யப்படவுள்ளது.


