/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ராட்சஸ அலையில் அரையன்தோப்பு கடற்கரை கிராமம் துவம்சம் : தேங்காப்பட்டணம் - இனயம் ரோடு துண்டிப்புராட்சஸ அலையில் அரையன்தோப்பு கடற்கரை கிராமம் துவம்சம் : தேங்காப்பட்டணம் - இனயம் ரோடு துண்டிப்பு
ராட்சஸ அலையில் அரையன்தோப்பு கடற்கரை கிராமம் துவம்சம் : தேங்காப்பட்டணம் - இனயம் ரோடு துண்டிப்பு
ராட்சஸ அலையில் அரையன்தோப்பு கடற்கரை கிராமம் துவம்சம் : தேங்காப்பட்டணம் - இனயம் ரோடு துண்டிப்பு
ராட்சஸ அலையில் அரையன்தோப்பு கடற்கரை கிராமம் துவம்சம் : தேங்காப்பட்டணம் - இனயம் ரோடு துண்டிப்பு
ADDED : ஆக 08, 2011 03:34 AM
புதுக்கடை : தேங்காப்பட்டணம் கடலில் ஏற்பட்ட ராட்சஸ அலையினால் தேங்காப்பட்டணம் - இனயம் ரோடு துண்டிக்கப்பட்டது. 10க்கும் மேற்பட்ட படகுகள் மாயமானதுடன், தடுப்புச்சுவர்களையும் கடலலை இழுத்து சென்றது.கன்னியாகுமரி மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் தேங்காப்பட்டணம் கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையை அடுத்து முள்ளூர்துறை, ராமன்துறை, இனயம்புத்தன்துறை, இனயம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்கள் உள்ளன. இந்த கடற்கரை கிராமங்களை சேர்ந்த பெரும்பாலான மக்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர்.மீன்பிடித்தொழிலுக்காக பைபர் படகுகள், கட்டுமரங்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இவர்கள் பிடித்து வரும் மீன்களை உள்ளூர் மீனவர்கள் வாங்கி தேங்காப்பட்டணம், முக்காடு, சக்திநகர், புதுக்கடை போன்ற கரையோர பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.குமரியின் தென்மேற்கில் உள்ள கடற்கரை கிராமங்களில் ஆண்டுதோறும் மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சோதனை காலங்களாக இருந்து வருகிறது. இந்த காலங்களில் கடலில் ராட்சஸ அலை எழும்புவதும், கடற்கரையோரத்தில் காணப்படும் வீடுகள், மீன்பிடி உபகரணங்களை கடலலை இழுத்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது.
இக்காலங்களில் பாதிக்கப்படும் மீனவர்கள் அருகில் உள்ள பள்ளிக்கூடங்கள், ஆலயங்களில் செயல்படும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்படுவர். இதனால் மீனவர்கள் இந்த மாதங்களை சோதனையும், வேதனையும் நிறைந்த மாதங்களாவே கருதுகின்றனர். இதுபோன்ற தொடர் பாதிப்புகளில் இருந்து விடுபட கடற்கரையோரங்களில் தடுப்புச்சுவர் எழுப்ப வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர்.இதனையடுத்து ராமன்துறையில் இருந்து தேங்காப்பட்டணம் வரை தடுப்புச்சுவர் போடப்பட்டது. இதில் அரையன்தோப்பு அருகே சுமார் 10 மீட்டர் தூரம் வரை தடுப்புச்சுவர் போடப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தேங்காப்பட்டணத்தில் மீன்பிடி துறைமுகப்பணி நடந்து வருகிறது. இப்பணியை தொடர்ந்து துறைமுக பகுதியில் ராட்சஸ கற்கள் போடப்பட்டது.இதனால் இந்த ஆண்டு தேங்காப்பட்டணம் மற்றும் அருகில் உள்ள கடற்கரை கிராமங்களில் ராட்சஸ அலையின் தாக்கம் குறைவாக இருந்தது. மீனவர்களும் நிம்மதியுடன் காணப்பட்டனர். இந்நிலையில் நேற்று காலை திடீரென தேங்காப்பட்டணம் கடலில் ராட்சஸ அலை எழும்பியது. இந்த அலைகள் அரையன்தோப்பு அருகே தடுப்புச்சுவர் போடாத பகுதியில் புகுந்து பெருத்த சேதத்தை விளைவித்தது.
அரயன்தோப்பு அருகே தேங்காப்பட்டணம் - இனயம் ரோடு துண்டிக்கப்பட்டது. ரோட்டில் கடல்நீர் தேங்கியுள்ளதால் இந்த தடத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த தடத்தில் இயங்கி வந்த தடம்எண் 87ஏ, 46டி அரசு பஸ்கள் மற்றும் மினிபஸ்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.இந்த ரோட்டின் மறுகரையில் 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இவர்கள் ரோடு முழுமையாக கடல்நீரால் சூழ்ந்துள்ளதால் வெளியே வரமுடியாமல் தவித்தனர். மேலும் கடல் சீற்றத்தின் போது படகில் தொழிலுக்கு சென்ற ராமன்துறையை சேர்ந்த பாபுவின் கால் துண்டானது. ஐந்து படகுகள் அலையின் வேகத்தில் சேதமடைந்தது. 10க்கும் மேற்பட்ட படகுகளை காணவில்லை எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.ராட்சஸ அலை தொடர்ந்து எழும்புவதால் தடுப்புச்சுவர்களை தாண்டி கடல்நீர் கரைப்பகுதிகளை ஆக்ரமிக்கிறது. அரயன்தோப்பு அருகே போடப்பட்ட ராட்சஸ கற்களையும் கடலலை இழுத்து சென்றது. ராட்சஸ அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பணி நேற்று நிறுத்தப்பட்டது.அரையன்தோப்பில் சேதமடைந்த மற்றும் தடுப்புச்சுவர் போடப்படாத பகுதிகளில் உடனடியாக தடுப்புச்சுவர் போட வேண்டுமென குமரி மாவட்ட மீனவர் பேரவை தலைவர் ஜோர்தான் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


