/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாதிரி பள்ளிகளில் சேர ஆள் இல்லை: 40 இடங்களுக்கு 12 பேர் விண்ணப்பம்மாதிரி பள்ளிகளில் சேர ஆள் இல்லை: 40 இடங்களுக்கு 12 பேர் விண்ணப்பம்
மாதிரி பள்ளிகளில் சேர ஆள் இல்லை: 40 இடங்களுக்கு 12 பேர் விண்ணப்பம்
மாதிரி பள்ளிகளில் சேர ஆள் இல்லை: 40 இடங்களுக்கு 12 பேர் விண்ணப்பம்
மாதிரி பள்ளிகளில் சேர ஆள் இல்லை: 40 இடங்களுக்கு 12 பேர் விண்ணப்பம்
ADDED : ஜூலை 12, 2011 01:26 AM
சேலம்: தமிழகத்தில், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ்
செயல்படும் மாதிரி பள்ளிகளில், ஆறாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு, ஜூலை
8ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு
கடும் போட்டி நிலவிய நிலை மாறி, தற்போது, 40 இடங்கள் உள்ள வகுப்புக்கு, ஒரு
சில மாணவர்களே விண்ணப்பித்துள்ளனர். ஏற்கனவே படித்த மாணவர்களும், வேறு
பள்ளிக்கு செல்வதால், மாதிரி பள்ளிகளில் சேர ஆள் இல்லாத நிலை
உருவாகியுள்ளது. தமிழகத்தில் இடைநிலைக்கல்வியை மேம்படுத்த, அனைவருக்கும்
இடைநிலைக்கல்வி செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஒன்பதாம் வகுப்பு மற்றும்,
10ம் வகுப்பு கல்வியை மேம்படுத்தவும், உயர்நிலைப்பள்ளிகள் தொடங்கவும்
நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் கிராமப்புற மாணவ, மாணவியருக்கு தரமான
ஆங்கில வழிக்கல்வி வழங்க வேண்டும் என்ற குறிக்கோளில், மாதிரி பள்ளிகள்
துவக்க முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில், கல்வியில் பின்தங்கிய
மாவட்டங்களான சேலம், நாமக்கல், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு,
கரூர், சிவகங்கை, திருப்பூர், விழுப்புரம் ஆகிய, 10 மாவட்டங்களில், 18
ஒன்றிய பகுதிகளில் மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டது. கட்டிடம் மற்றும்
பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு பள்ளிக்கும், 3.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டது. கட்டுமான பணிகள் நடக்கும் முன்பே, தற்காலிகமாக அருகில் உள்ள
அரசு பள்ளிகளில் மாதிரி பள்ளிகள் வகுப்புகள் துவங்கப்பட்டது. அரசு
பள்ளியில் இலவசமாக ஆங்கிலவழிக்கல்வி என்பதோடு, அனைத்து அரசு சலுகைகளும்
கிடைக்கும் என்பதால், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவ, மாணவியரும்
ஆர்வத்துடன் இப்பள்ளியில் சேர்ந்தனர். கடந்த ஆண்டில், 40 மாணவர் கொண்ட ஒரு
வகுப்பில் சேர குறைந்த பட்சம், 400 மாணவர் வரை விண்ணப்பித்தனர்.
இதனால், எழுத்துத்தேர்வு மூலம் மாணவர்களை தேர்வு செய்தனர். ஆனால், ஓராண்டு
முடிந்த நிலையிலும், இப்பள்ளிகளுக்கு இன்னும் ஆசிரியர்கள் நியமனம்
செய்யப்படவில்லை. ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஓரிரு ஆசிரியர்களே அனைத்து
வகுப்பு மாணவ, மாணவியரையும் பராமரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு
உள்ளாகியுள்ளனர். தரமான ஆங்கில வழிக்கல்வி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்,
இதில் சேர்ந்த மாணவ, மாணவியருக்கும் பெரும் ஏமாற்றமே கிடைத்துள்ளது. இதனால்
நடப்பாண்டில், மாதிரி பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர் பலரும், அருகில்
உள்ள அரசு பள்ளிகளுக்கு மாறுதல் பெற்றுச் சென்று விட்டனர். இந்நிலையில்,
ஆறாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு, ஜூலை 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
என, அறிவிக்கப்பட்டிருந்தது. பல பள்ளிகளில் வகுப்புக்கு போதுமான
விண்ணப்பங்களே வராத நிலை காணப்படுகிறது. கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ள
மாதிரி பள்ளியில், 40 பேர் சேர்க்க வேண்டிய ஆறாம் வகுப்புக்கு, 12 பேர்
மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். கிராமப்புற மாணவர்களுக்கு தரமான ஆங்கில
வழிக்கல்வியை தர, மத்திய அரசு பல கோடி ரூபாய்களை ஒதுக்கியும், அவற்றை
முறையாக பயன்படுத்தத்தவறிய அரசு அலுவலர்கள் மீது, பெற்றோர் மற்றும்
பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.


