சங்கரராமன் கொலை வழக்கு: புதிய, "டேப்' கசிவதாக கோர்ட்டில் மனு : விசாரணைக்கு ஐகோர்ட் தடை
சங்கரராமன் கொலை வழக்கு: புதிய, "டேப்' கசிவதாக கோர்ட்டில் மனு : விசாரணைக்கு ஐகோர்ட் தடை
சங்கரராமன் கொலை வழக்கு: புதிய, "டேப்' கசிவதாக கோர்ட்டில் மனு : விசாரணைக்கு ஐகோர்ட் தடை
சென்னை : புதுச்சேரி முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் நடக்கும், காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த சுந்தரராஜன் என்பவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:தொலைபேசியில் பேசிய பேச்சுக்கள் அடங்கிய, 'டேப்' ஒன்று தற்போது கசிய விடப்பட்டுள்ளது. சங்கராச்சாரியார், அவரது உதவியாளர், செஷன்ஸ் கோர்ட் நீதிபதி, அவரது பிரதிநிதி ஆகியோரின் பேச்சுக்கள் அந்த, 'டேப்'பில் உள்ளது என கூறப்படுகிறது. பணம் சம்பந்தப்பட்ட விஷயம் குறித்து அந்தப் பேச்சு உள்ளது. இந்தப் பேச்சுக்களை, அதில் சம்பந்தப்பட்ட ஒருவர் தான் பதிவு செய்திருக்க வேண்டும். அல்லது உளவுத் துறையினர், இடைமறித்து பதிவு செய்திருக்கலாம்.
இதுகுறித்து, ஐகோர்ட் பதிவாளரை (விஜிலென்ஸ்) அணுகினேன். தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றிருப்பதாகவும், இதுகுறித்து கவனிக்க, நீதித்துறை அதிகாரியை நியமித்திருப்பதாகவும், அவர் கூறினார். இதற்கிடையில், கொலை வழக்கில் வழக்கறிஞரின் வாதத்துக்காக, விசாரணையை, செப்டம்பர் 5ம் தேதிக்கு புதுச்சேரி செஷன்ஸ் நீதிபதி தள்ளிவைத்துள்ளார். எனவே, இச்சம்பவம் குறித்து விசாரிக்க விஜிலென்ஸ் பதிவாளரிடம் புகார் கொடுத்தேன். புதுச்சேரி முதன்மை செஷன்ஸ் நீதிபதி முன், விசாரணையில் உள்ள இவ்வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். எனது புகாரை பதிவு செய்து புலன்விசாரணை துவங்கவும், 'டேப்'பில் விவாதிக்கப்பட்ட பண பரிவர்த்தனை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும். விசாரணை நீதிபதிக்கு பணம் கொடுக்கப்பட்டது என அறிக்கையில் உறுதி செய்தால், வேறு நீதிபதியை கொண்டு மறுவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவை நீதிபதி சுகுணா விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் மணிகண்டன் வதன் ஆஜரானார். மனுவுக்கு எட்டு வாரங்களில் பதிலளிக்க விஜிலென்ஸ் பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பவும், புதுச்சேரி முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் உள்ள வழக்கு விசாரணைக்கு தடை விதித்தும், நீதிபதி சுகுணா உத்தரவிட்டார்.