பத்தோடு பதினொன்றாக கூடாது சிறப்பு மருத்துவமனை
பத்தோடு பதினொன்றாக கூடாது சிறப்பு மருத்துவமனை
பத்தோடு பதினொன்றாக கூடாது சிறப்பு மருத்துவமனை

சென்னையில், நெரிசல் மிக்க அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்டப்படுவதை சென்னை மக்கள் மட்டுமல்ல, பெரும்பாலான தமிழக மக்களும் விரும்பவில்லை என்பதற்கு, தேர்தல் முடிவுகளே சாட்சி.
ஆனால், புதிதாக அமையவிருக்கும் மருத்துவமனைக்கு, பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவும் ஒன்று என்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பது, பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.இந்தியாவின் மருத்துவத் தலைநகர் எனச் சொல்லும் அளவுக்கு, அதி நவீன சிகிச்சை வசதிகளைக் கொண்ட தனியார் மருத்துவமனைகள், சென்னையில் ஏராளம் உள்ளன. ஆனால், அரசு மருத்துவமனைகளில், நவீன மருத்துவ வசதிகள், பெரளவில் தான் உள்ளன. ஒரு சில நவீன வசதிகள் இருந்தாலும், அவை சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை.
பல தனியார் மருத்துவமனைகள், நட்சத்திர ஓட்டல்கள் போல், 'பளிச்' என பராமரிக்கப்படுகின்றன. ஆனால், அரசு மருத்துவமனைகளின் அவலத்தை, சொல்லித் தெரிய வேண்டியதில்லை. திரும்பிய திசையெல்லாம், சுவர்களில் எச்சில் கறை; ஒரு வித துர்நாற்றம். கொடுப்பதைக் கொடுத்தால் தான், கிடைப்பது கிடைக்கும் என்ற, கையூட்டு கலாசாரம். இலவசமாகத் தானே பெறுகின்றனர் என, ஊழியர்களின் அலட்சியம். இவையெல்லாம், இன்றைய அரசு மருத்துவமனைகளின் அடையாளச் சின்னங்கள். ஆசியாவில் உள்ள சிறந்த அரசு மருத்துவமனைகளில் ஒன்று என, பெருமை கொண்டது, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை. முன்பெல்லாம், அரசியல் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் சிகிச்சை பெற, அரசு பொது மருத்துவமனைக்கு வருவர். இன்று, அது பழங்கதையாகி விட்டது.கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளிலும், இதே நிலைதான்.
அரசு மருத்துவமனைகளில், பரிசோதனைக் கருவிகள் அவ்வப்போது மக்கர் செய்வது, வாடிக்கையான ஒன்று. பல லட்சம் செலவில் வாங்கப்படும் உபகரணங்கள், ஊழியர்களின் கவனக் குறைவால் பாழடையும் பரிதாபம். ஆள் பற்றாகுறை, தேவையான அளவு மருத்துவ உபகரணங்கள் சப்ளை இல்லாதது, இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
எனவே, புதிதாக அமையவிருக்கும் அரசு மருத்துவமனையும், பத்தோடு பதினொன்று என்றாகி விடக் கூடாது. டில்லியில் உள்ள, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை (ஏ.ஐ.ஐ.எம்.எஸ்.,) போல், புதிய மருத்துவமனை அமையும் என்ற முதல்வரின் அறிவிப்பு, நிஜமாக வேண்டும். டில்லியில் அரசியல், தலைவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டால் ஏ.ஐ.ஐ.எம்.எஸ்., மருத்துவமனைக்குச் செல்கின்றனர். இந்த நிலை, சென்னைக்கும் வர வேண்டும்.
தற்போது, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள, பல சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள், புதிய மருத்துவமனைக்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அரசு மருத்துவமனைக்கு, தற்போது தினமும் 10 ஆயிரம் பேர், வெளி நோயாளிகளாக வருகின்றனர். அங்கு, எல்லா சிகிச்சைப் பிரிவுகளிலும் நெரிசல். எனவே, நெரிசலைக் குறைக்க, புதிய மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள், புதிதாகத் துவக்க வேண்டும். சிறப்பு சிகிச்சைகளோடு, மருத்துவ ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது, மூத்த டாக்டர்களின் விருப்பமாக உள்ளது.