Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழா

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழா

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழா

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழா

ADDED : ஆக 05, 2011 02:45 AM


Google News

திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த, புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 11ம் ஆண்டு ஆடித் திருவிழா கோலாகலமாக நடந்தது.ஆடித் திருவிழா, 26ம் தேதி காலை 6 மணிக்கு, காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

தொடர்ந்து, 108 பால் குடம் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 31ம் தேதி அம்மனுக்கு கூழ் வார்த்தல் நடந்தது. தினசரி காலை, மாலை என இரு வேளையும் அம்மன் கரகம் வீதியுலா வந்தது.இறுதி நாளான நேற்று முன்தினம் வாண வேடிக்கையுடன் அம்மன் திருவீதியுலா நடந்தது. விழாவையொட்டி உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தினசரி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பக்தர்கள் பலர், தங்களது உடலில் அலகுகள் குத்தி, தங்களது நேர்த்திக் கடனை அம்மனுக்கு செலுத்தினர். இவ்விழாவில் புட்லூர், ராமாபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை, கோவில் திருப்பணிக் குழுத் தலைவர் மகேஷ், மனோகரன், ராஜசேகரன் தலைமையில், விழாக் குழுவினர் செய்தனர்.



லாட்டரி விற்ற இருவர் கைது



திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த, மணவாளநகர் பகுதியில், லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து, மணவாளநகர் எஸ்.ஐ., முத்துக்குமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.அப்போது ரயில் நிலையம் செல்லும் சாலையில், லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த, திருவள்ளூர் எஸ்.குமார், 47 மற்றும் கே.குமார், 39 ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, வெளி மாநில லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.



விவசாயிகள் தின விழா பாங்க் ஆப் இந்தியா கொண்டாட்டம்



பொன்னேரி : 'விவசாயம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிரமங்களால், அடுத்த தலைமுறையினரை, விவசாயத்தில் ஈடுபடுத்த விவசாயிகள் தயாராக இல்லை' என பொன்னேரி ஆர்.டி.ஓ., கந்தசாமி பேசினார்.பாங்க் ஆப் இந்தியா, பொன்னேரி கிளை சார்பில் விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது. தேசிய வங்கி மண்டல மேலாளர் கோபாலகிருஷ்ணா தலைமை வகித்தார். மார்க்கெட்டிங் துறைத் தலைவர் டாக்டர் சிதம்பரகுமார் முன்னிலை வகித்தார்.பொன்னேரி ஆர்.டி.ஓ., கந்தசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, விவசாயிகளிடம் பேசியபோது, 'விவசாயம் செய்வதில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் அடுத்த தலைமுறையினரை வேறு துறைகளில் ஈடுபடுத்தவே விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாயிகளுக்கு தேவையான கடனுதவிகளை அளித்து, விவசாய வளர்ச்சியை முன்னற்ற வேண்டும். பொன்னேரியை சுற்றியுள்ள பகுதிகள் விவசாயத்தையே நம்பியுள்ளதால் விவசாயிகளுக்கு உதவி செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்,'' என்றார்.கிளை மேலாளர் திருநாவுக்கரசு வரவேற்று, வங்கி கிளையின் முதல் காலாண்டு கடன்கள் குறித்து பேசினார். விழாவில், 18 மாணவர்களுக்கு கல்விக்கடனாக 45 லட்சம் ரூபாய், 60 விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்க 30 லட்சம் ரூபாய், நான்கு விவசாயிகளுக்கு பயிர்கடன் நான்கரை லட்ச ரூபாய், இரு சுயஉதவிக்குழுக்களுக்கு ஒரு லட்ச ரூபாய் மற்றும் நிலஅடமானக்கடன், அறுவடை இயந்திரம் வாங்க கடன் என, மொத்தம் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு வங்கிக்கடன் வழங்கப்பட்டது.அழிந்துவரும் தமிழர்களின் பாரம்பரிய சிலம்பாட்ட கலையை ஊக்குவிக்கும் வகையில், தேசிய அளவில் வெற்றி பெற்ற சிலம்பாட்ட வீரர்களை வங்கி மண்டல மேலாளர் கோபாலகிருஷ்ணா பாராட்டினார். அவர்கள் உலகளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க ஒரு லட்சம் ரூபாய் வங்கி வரையோலையை, சுப்ரமணிய ஆசான் சோஷியல் வெல்பர் அகடமி தலைவர் ஹரிதாஸிடம் வழங்கினார்.பொன்னேரி வங்கி முகவர் சுப்ரமணி நன்றி கூறினார். விழாவில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகளுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.



மிஸ்டர் சென்னை - 2011 ஆணழகன் போட்டி



திருவள்ளூர் : முதல்வர் ஜெயலலிதாவின், 63வது பிறந்த நாளையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயான, 'மிஸ்டர் சென்னை - 2011' ஆணழகன் போட்டி சென்னையில் நடந்தது.இதில் திருவள்ளூர் அடுத்த, மணவாளநகர்புத்தர் உடற்பயிற்சி கூடத்தின் மாணவர்சுகுமார், 80 கிலோ எடை பிரிவில் இரண்டாம் இடத்தையும், ராஜேஷ், 70 கிலோ எடை பிரிவில் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.இவர்களுக்கு புத்தர் உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர் முன்னாள் 'தமிழ்நாடு ஆணழகன்' சீனிவாசன் வாழ்த்து தெரிவித்தார்.இவ்விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் நீலகண்டன், வெற்றிவேல், பிரபாகரன், பொன்.ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்ட ஆணழகர்களுக்கு, பாராட்டுகளையும், பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தனர்.



மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி



திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த, விளாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மரம் நடும் விழா, மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி, பேரிடர் மேலாண்மை பயிற்சி ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றன.பள்ளி தலைமை ஆசிரியர் இரா.தாஸ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, திருவள்ளூர் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் சி.முத்துகிருஷ்ணன் பள்ளி வளாகத்தில மரக்கன்று நட்டு, மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி, கிராம வீதிகளில் பேரணியினர் கோஷமிட்டு சென்றனர்.பின்னர் மழை, வெள்ளம், தீ விபத்து நேரங்களில் முதலுதவி செய்வது பற்றி, பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு விளக்கினார். ஆசிரியை லாவண்யா வரவேற்றார்.ஆசிரியை அஜிதாரெஜி நன்றி கூறினார்.



ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவர்களுக்கு பரிசு



திருவள்ளூர் : ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஏழைக்குழந்தைகளுக்கு, கல்வியறிவு கொடுக்க நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில், திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவர்கள், பல பரிசுகளை பெற்றனர்.சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில், நலந்தாவே குழுமத்தார் படிக்கவே வழியில்லாத ஏழை மாணவர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வியறிவு கொடுக்க உதவும் விதத்தில் பல்வேறு போட்டிகள் நடந்தன.இதில் திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். பல்சுவை போட்டியில் இரண்டாம் பரிசும்,பாட்டுப் போட்டியில் நான்காம் பரிசும் பெற்றனர். பொம்மலாட்டம் நிகழ்வில், 200 மாணவர்களும், பொம்மைகள், குழந்தைகள் திரைப்படம் காண தலா, 52 மாணவர்களும், நடனத்தைக் காண, 72 மாணவர்களும், ஆசிரியர்களுக்கான கதைக் கூறும் போட்டியில், 14 ஆசிரியர்களும் கலந்துக் கொண்டனர்.பட்டிமன்றம், நாடகம், பாடல் மற்றும் ஓவியம் போன்ற போட்டிகளில் கலந்துக் கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us