வெளிநாட்டு பணமதிப்பில் "பேக்கிங் கிரெடிட்' : திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை
வெளிநாட்டு பணமதிப்பில் "பேக்கிங் கிரெடிட்' : திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை
வெளிநாட்டு பணமதிப்பில் "பேக்கிங் கிரெடிட்' : திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை
ADDED : செப் 17, 2011 12:56 AM
திருப்பூர்: 'வங்கி வட்டியில் சலுகை பெறும் வகையில், ஏற்றுமதியாளர்களுக்கான 'பேக்கிங் கிரெடிட்'டை, வெளிநாட்டு பணமதிப்பில் வழங்க வேண்டும்,' என, மத்திய அரசுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய ரிசர்வ் வங்கி, 2011-12ம் நிதியாண்டுக்கான இரண்டாவது காலாண்டுக்கான நிதிக்கொள்கையை நேற்று வெளியிட்டுள்ளது. நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாக, ரிசர்வ் வங்கி வழங்கும் வங்கிக்கடனுக்கான வட்டியை (ரெப்போ ரேட்) 0.25 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதனால், வங்கி கடன் மீதான வட்டி விகிதம், 8 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல், பிற வங்கிகளிடம் ரிசர்வ் வங்கி பெறும் மிக குறுகிய கால கடன்களுக்கான வட்டியும் அதே அளவு உயர்ந்துள்ளது. கடந்த காலாண்டில் வட்டியை உயர்த்தியுள்ள நேரத்தில், ரிசர்வ் வங்கி 'ரெப்போ ரேட்' உயர்த்தப்பட்டுள்ளதால், 45க்கும் அதிகமான வங்கிகள், இத்தகைய வட்டி உயர்வை, வாடிக்கையாளர்கள் மூலமாக சரிக்கட்ட திட்டமிட்டுள்ளன. மேலும், சில மாதங்களில் மீண்டும் வட்டி விகிதம் உயரும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு போட்டியாக உள்ள சில நாடுகளில், 6.5 சதவீத வட்டியில் வங்கி கடன் எளிதாக கிடைக்கிறது. அந்நாட்டு நிறுவனங்களின் நிதி தேவைகள் பூர்த்தியாகின்றன. சாய ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், ஏற்கனவே பல்வேறு வகையில் சோதனைக்கு ஆளாகியுள்ள ஏற்றுமதியாளர்கள், வட்டி உயர்வால் மென்மேலும் பாதிக்கப்படுவர். எனவே, பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பயனடையும் வகையில், ஏற்றுமதியாளர்களுக்கான 'பேக்கிங் கிரெடிட்'டை, வெளிநாட்டு பணமதிப்புகளாக (அமெரிக்க டாலர் அல்லது யூரோ) வழங்க வேண்டும். அப்போது, 'லிபர்' வட்டியுடன் இரண்டு சதவீதம் சேர்த்து, மொத்தமாக 4.5 சதவீத வட்டிக்குள் கடனுதவி பெற முடியும். கடனை திருப்பிச் செலுத்தும்போதும், அதே பண மதிப்பில் செலுத்த முடியும். பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நிரந்தரமாக பயனடையும் வகையில், ஜவுளி ஏற்றுமதி பிரிவுக்கென தனி நிதிக்கொள்கையை உருவாக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.