ADDED : ஆக 11, 2011 11:14 PM
திருப்பூர் : 'டூரிஸ்ட் மற்றும் கல்வி விசாவில் வரும் நைஜீரியர்கள் முறைகேடான செயல்களில் ஈடுபடுவதோடு, பினாமி பெயர்களில் பனியன் கம்பெனி நடத்தி வருவதால், சிறு, குறு நடுத்தர பின்னலாடை தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்,' என, 'சிஸ்மா' புகார் தெரிவித்துள்ளது.
செகன்ட்ஸ் காலர் சர்ட் மற்றும் உள்ளாடை சிறு தொழில் முனைவோர் சங்கம் (சிஸ்மா), தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: சிறு, குறு, நடுத்தர தயாரிப்பாளர்களை நசுக்கும் செயலாக, 'செகன்ட்ஸ் பீஸ்' துணிகளை நைஜீரியர்கள் அதிக விலை கொடுத்து எத்தனை டன்களாக இருந்தாலும் கொள்முதல் செய்து கொள்கின்றனர். பினாமி பெயரில் பனியன் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இதனால், சிறு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதோடு, சில இடங்களில் நைஜீரியர்களால் தாக்கப்படும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. டூரிஸ்ட் விசாவில் வரும் இவர்கள் பல ஆண்டுகளாக தங்கி, இந்திய சட்டத்தை மீறி, முறைகேடாக தொழில் செய்து வருகின்றனர். கல்வி கற்பதாக விசா பெற்று, வர்த்தகம் செய்து தவறாக பயன்படுத்துகின்றனர். பின்னலாடை துறையில் நுழைந்து, பின்னலாடை நகரை மையமாக வைத்து பின்னலாடைகள் ஏற்றுமதி மூலம் போதை பொருட்கள் கடத்தியதாகவும் போலீசாரால் நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசா மோசடியில் வந்த, காலக்கெடு முடிந்தும் வசித்து வந்த நைஜீரியர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக திருப்பூரில் நைஜீரியர்கள் வருகை அதிகரித்துள்ளது. எனவே, நைஜீரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தொழில் பாதுகாப்பு அளிக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.