Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சிறுவலூர் பஞ்., தலைவர் மீது முறைகேடு புகார்

சிறுவலூர் பஞ்., தலைவர் மீது முறைகேடு புகார்

சிறுவலூர் பஞ்., தலைவர் மீது முறைகேடு புகார்

சிறுவலூர் பஞ்., தலைவர் மீது முறைகேடு புகார்

ADDED : செப் 21, 2011 01:23 AM


Google News
கோபிசெட்டிபாளையம் : சிறுவலுர் பஞ்சாயத்து தி.மு.க., தலைவர் மீது முறைகேடு புகார் எதிரொலியாக, கோபி தாசில்தார் நேற்று விசாரணை நடத்தினார்.

உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் தலைவர் மீது எழுந்த புகாரால் சிறுவலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோபி யூனியன், சிறுவலூர் பஞ்சாயத்தில் 12 வார்டுகள் உள்ளன. தி.மு.க.,வுக்கு ஒன்பது கவுன்சிலர்கள், அ.தி.மு.க.,வுக்கு மூன்று கவுன்சிலர்கள் உள்ளனர். பஞ்சாயத்து தலைவராக முருகன் உள்ளார். பஞ்சாயத்து மீது எழுந்த முறைகேடு புகார்கள் குறித்து, பஞ்சாயத்து உதவி இயக்குனர் ஆய்வு செய்ததில், முறைகேடு கண்டறியப்பட்டு, பஞ்சாயத்து எழுத்தர் ராஜாமணி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். சிறுவலுர் பஞ்சாயத்து தலைவர், பதில் விளக்கம் அளித்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனிடையே, 'பஞ்சாயத்து தலைவர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை; அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கினர். பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்யலாமா என்பது குறித்து, விசாரணை நடத்த அனைத்து கவுன்சிலர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. சிறுவலூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று, கோபி தாசில்தார் முருகன் தலைமையில், கவுன்சிலர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. தணிக்கை அதிகாரி சம்பந்தம் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்களிடம் தனித்தனியாக ரகசியமாக விசாரணை நடந்தது. விசாரணைக்கு பின், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது: தி.மு.க., கவுன்சிலர்கள் ஒன்பது பேரும், பஞ்சாயத்து தலைவர் முருகனுக்கு சாதகமான கருத்துகளையே தெரிவித்து இருப்பர். அ.தி.மு.க.,வை சேர்ந்த நாங்கள் மூவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். பொது மக்களிடம் கருத்து கேட்டால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியும். இவ்வாறு அவர்கள் கூறினர். கவுன்சிலர்களிடம் கேட்கப்பட்ட கருத்து குறித்த அறிக்கை, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அறிக்கையின் முடிவில் தலைவர் மீதான நடவடிக்கை விபரம் தெரியவரும். உள்ளாட்சி தேர்தலில் சிறுவலுர் பஞ்சாயத்தில் தி.மு.க., சார்பில் போட்டியிட மீண்டும் முருகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இவ்வேளையில் அவர் மீதான புகாரால், சிறுவலூர் பஞ்சாயத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us