Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நேரு இன்று விடுதலை: தி.மு.க.,வினர் எதிர்பார்ப்பு

நேரு இன்று விடுதலை: தி.மு.க.,வினர் எதிர்பார்ப்பு

நேரு இன்று விடுதலை: தி.மு.க.,வினர் எதிர்பார்ப்பு

நேரு இன்று விடுதலை: தி.மு.க.,வினர் எதிர்பார்ப்பு

ADDED : அக் 10, 2011 06:15 AM


Google News
திருச்சி: நில அபகரிப்பு வழக்குகளில் ஜாமின் பெற்றுவிட்ட முன்னாள் அமைச்சரும், திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளருமான நேரு, இன்று சிறைவாசம் முடிந்து வெளியே வருவார் என்று, தி.மு.க.,வினர் எதிர்பார்த்துள்ளனர்.திருச்சி மாவட்டம், துறையூர் டாக்டர் சீனிவாசன், ஈரோடு அ.தி.மு.க., பிரமுகர் கருணாநிதி ஆகியோர் கொடுத்த நில அபகரிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம், துணைமேயர் அன்பழகன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு, பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.கடந்த 3ம் தேதி, ரியல் எஸ்டேட் அதிபர் மொரைஸ் கொடுத்த கொலை மிரட்டல் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் இருக்கும் மூவரையும் கைது செய்வதற்கான ஆவணங்களை மாநகர குற்றப்பிரிவு போலீசார், சிறைத்துறையினரிடம் அளித்தனர்.

இரண்டு நில அபகரிப்பு வழக்குகளிலும் கடந்த 4ம் தேதி, முன்னாள் அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம், துணைமேயர் அன்பழகன், சவுந்திரபாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி, லஷ்மி சில்க்ஸ் உரிமையாளர் சுந்தர்ராஜுலு ஆகியோருக்கு மதுரை ஐகோர்ட் கிளை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.அதன்பேரில், கடந்த 7ம் தேதி சவுந்திரபாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி, லஷ்மி சில்க்ஸ் உரிமையாளர் சுந்தர்ராஜுலு ஆகிய மூவரும் சிறையிலிருந்து விடுதலையாகினர்.அதே நாளில், கொலைமிரட்டல் வழக்குக்காக நேரு, ராமஜெயம், அன்பழகன் ஆகிய மூவரும், திருச்சி ஜே.எம்., 4 மாஜிஸ்திரேட் புஷ்பராணி (பொறுப்பு ஜே.எம்., 5) முன்னிலையில், போலீசார் ஆஜர்படுத்தினர்.

அப்போது, கொலை மிரட்டல் வழக்கில் தொடர்புடைய மூவரையும் சிறையிலடைக்க போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால், நேரு தரப்பு வழக்கறிஞரோ, கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் ரிமாண்ட் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அது சட்ட விரோதம்; மனித உரிமை மீறிய செயல் என்று வாதிட்டார்.அதை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட், நேரு, ராமஜெயம், அன்பழகன் ஆகிய மூவரையும் ரிமாண்ட் செய்ய மறுத்து, 10ம் தேதி (இன்று) ஜே.எம்., 5 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து, மூவரும் முறையே கடலூர், பாளையங்கோட்டை, சேலம் சிறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.மூன்றாவது வழக்கில் ரிமாண்ட் செய்யப்படாததால், அவர்கள் மூவரையும் ஜாமின் அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்று நேற்று முன்தினம் (சனி) நேரு தரப்பு வழக்கறிஞர்கள், கடலூர், பாளையங்கோட்டை, சேலம் சிறைகளில் சென்று, சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டனர். ஆனால், அதற்கு சிறைத்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

எவ்வித கைது உத்தரவும் இல்லாமல் நேருவையும், அவரது தம்பி ராமஜெயம் மற்றும் துணைமேயர் அன்பழகனை சிறையில் அடைத்துள்ள சிறைத்துறையினர் மீது வழக்கு தொடரப்போவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.இன்று மதியம் 1 மணியளவில் நேரு, ராமஜெயம், அன்பழகன் ஆகிய மூவரும் திருச்சி ஜே.எம்., 5 நீதிமன்றத்தில்ஆஜராகின்றனர்.மற்ற வழக்குகளில் ஜாமின் பெற்றுவிட்ட மூவரும், இன்று விடுதலை செய்யப்படலாம் என்று வழக்கறிஞர்களும், தி.மு.க.,வினரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us