தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம்
தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம்
தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம்
ADDED : ஜூலை 15, 2011 04:33 AM
ஐதராபாத்:ஆந்திராவைப் பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரி, தெலுங்கானா ஆதரவாளர்கள் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.ஆந்திராவைப் பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, அங்கு வலுத்து வருகிறது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பா.ஜ., தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் தனித் தெலுங்கானா கோரி, நேற்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
தெலுங்கானா பகுதியின் பல்வேறு இடங்களில், கோஷங்களை எழுப்பியபடி ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்தனர்.ஐதராபாத் அருகே, காட்கேசரில் தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு தலைவர் கோதண்டராம் தலைமையில், ரயில் மறியலில் ஈடுபட்ட ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர். அப்போது, கோதண்டராம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தனித் தெலுங்கானா மாநிலத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு விரைவாகவும், உறுதியாகவும் மேற்கொள்ளும் என நம்புகிறோம்,'' என்றார்.செகந்திராபாத் ரயில் நிலையத்தில், பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பண்டரு தாத்ரேயா தலைமையில், மறியலில் ஈடுபட்ட பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதன் மூலம், தெலுங்கானா கோரிக்கையை அடக்கிவிட முடியாது. மத்திய அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று, தனி மாநிலம் அமைக்க வேண்டும்,'' என தெரிவித்தார்.வாரங்கல் மாவட்டத்தில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ., வினய் பாஸ்கர் தலைமையில், அக்கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், காக்கிநாடா - ஐதராபாத் கவுதமி எக்ஸ்பிரஸ் ரயில் முன் அமர்ந்து மறியல் செய்தனர். அந்த ரயிலில், ஆந்திர அமைச்சர் தோட்டா நரசிம்மம் பயணம் செய்தார். போராட்டக்காரர்களால் ரயில் மறிக்கப்பட்டதால், அவர் ரயிலிலிருந்து இறங்கி, சாலை வழியாக ஐதராபாத்திற்கு புறப்பட்டுச் சென்றார். எனினும் அவர் சென்ற வாகனம், போராட்டக்காரர்கள் தாக்குதலில் சிக்கி சேதமடைந்தது.முன்னதாக, ரயில் மறியல் போராட்டத்தின் காரணமாக, தெலுங்கானா வழியாகச் செல்லும் 116 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக, தெற்கு மத்திய ரயில்வே நேற்று முன்தினம் அறிவித்தது. அதன்படி, தெலுங்கானா பகுதி வழியாக, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன;
சில ரயில்கள் தடம் மாற்றி இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.ரயில் பயணிகள் வசதிக்காக, ஆந்திர மாநில சாலை போக்குவரத்து நிறுவனம், 200க்கும் அதிகமான சிறப்பு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்கின. ரயில் மறியல் போராட்டத்தை முன்னிட்டு, பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தன.இதனிடையே, ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமே நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தெலுங்கானா அல்லாத பகுதிகளில் நேற்று போராட்டம் நடந்தது. இதனால், நேற்று ஆந்திர மாநிலத்தில் பதட்டம் நிலவியது.