உண்ணாவிரதம் வாபஸ்: ஜெ., வாக்குறுதியை ஏற்றது போராட்டக்குழு
உண்ணாவிரதம் வாபஸ்: ஜெ., வாக்குறுதியை ஏற்றது போராட்டக்குழு
உண்ணாவிரதம் வாபஸ்: ஜெ., வாக்குறுதியை ஏற்றது போராட்டக்குழு

சென்னை: 'கூடங்குளத்தில் அணு மின் நிலையப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவோம்' என, முதல்வர் ஜெயலலிதா அளித்த உறுதிமொழியை அடுத்து, கூடங்குளம் அருகே இடிந்தகரையில் நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, போராட்டக் குழுவினர் அறிவித்தனர்.
நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இடிந்தகரை கிராமத்தில் 127 பேர், கடந்த 11 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர்.
இது பற்றி நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது: எங்களது கோரிக்கைகளை முதல்வர் அமைதியாகவும், பொறுமையாகவும் கேட்டார். முதல்வர் அளித்த உறுதிமொழியை ஏற்று, உண்ணாவிரதத்தை பின்வாங்கிக் கொள்கிறோம். இது பற்றி, உண்ணாவிரதம் இருக்கும் 127 பேரின் உணர்வுகளை மதிக்கும் வகையில், அவர்களை சந்தித்து, பேச்சுவார்த்தை விவரங்களைத் தெரிவித்து, முறைப்படி உண்ணாவிரதத்தை பின் வாங்கிக் கொள்வோம். எதிர்காலத்தில், மத்திய அரசுக்கு எதிராகவே எங்களது போராட்டங்கள் இருக்கும். அமைச்சர்கள் செந்தூர் பாண்டியன், செல்லபாண்டியன், பச்சைமால் ஆகியோர் மிகுந்த ஒத்துழைப்பு அளித்தனர். அவர்களுடன் ஆலோசித்து, வருங்காலத்தில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை மேற்கொள்வோம். மாநில அரசின் உதவியுடன், தமிழகத்தில் அணு மின் நிலையத்தை விரட்டுவோம். போராட்டத்தில் ஈடுபட்ட பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை வாபஸ் பெற வேண்டுமென முதல்வரிடம் தெரிவித்தோம். அதற்கு ஒத்துழைப்பதாக முதல்வர் தெரிவித்தார். எங்களது போராட்டம் மாநில அரசுக்கு எதிரானது அல்ல. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பிரதமர் இறுதி முடிவு: முதல்வரை சந்தித்த பின், நிருபர்களிடம் பேசிய நாராயணசாமி, ''பிரதமரின் தூதராக வந்தேன். பிரதமர் கூறிய கருத்துக்களை முதல்வரிடம் கூறியுள்ளேன். இப்பிரச்னையில் முதல்வர் கூறியுள்ள சில கருத்துக்களை பிரதமரிடம் தெரிவிப்பேன். இறுதி முடிவை பிரதமர் தான் எடுப்பார்,'' என்றார்.