கலவரங்களில் ஈடுபடுவதை தவிர்க்க மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
கலவரங்களில் ஈடுபடுவதை தவிர்க்க மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
கலவரங்களில் ஈடுபடுவதை தவிர்க்க மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
ADDED : செப் 20, 2011 11:41 PM
ராமநாதபுரம்: அமைதி பேணுதல், நாட்டுப்பற்று, நல்லொழுக்க நெறிகளை பள்ளிகளில் பிரார்த்தனை கூட்டங்களில் நினைவூட்டி, வருங்காலத்தில் கலவரங்களில் ஈடுபடாத வகையில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கலவரங்கள் பெருகி வரும் நிலையில், வருங்கால இளைஞர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடாமல், முன்னேற்ற பாதையில் மட்டும் செல்வதற்காக பள்ளி பருவத்திலேயே மனமாற்றம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கலெக்டர் மூலம் சிறப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் சுகாதார வசதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். பள்ளிகளில் பயன்படுத்தி, வெளிவரக்கூடிய நீரை மறுசுழற்சி அடிப்படையில் காய்கறி, பூந்தோட்டங்கள் அமைக்க வேண்டும். பள்ளிகளை சுற்றி இயற்கையான செடிகளை கொண்டு, பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். மாணவர்களிடம் நாட்டுப்பற்று, அமைதி பேணுதல், நல்லொழுக்க நெறிகளை பிரார்த்தனை கூடங்களில் மீண்டும் மீண்டும் நினைவூட்ட வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி முதன்மை கல்வி அலுவலர் போஸ் கூறியதாவது: மாணவர்கள் கட்டுப்பாடுடன் இருக்க, இதுபோன்ற அறிவுரைகளை வழங்கி அவர்களை வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன, என்றார்.