சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளுக்கும் மகுடமாக விளங்குவது மவுண்ட் ரோடு என்று முன்பு அழைக்கப்பட்ட, தற்போதைய அண்ணா சாலை.
ஆங்கிலேயர்களது ஆட்சிக் காலத்தில், புனித ஜார்ஜ் கோட்டை அருகே கூவம் ஆறு முதல் பரங்கிமலை (செயின்ட் தாமஸ் மவுண்ட்) வரையிலான 15 கி.மீ., தொலைவில் நீண்ட சாலை அமைக்கப்பட்டு, மவுண்ட் ரோடு எனப் பெயரிடப்பட்டது.
மறைந்த முதல்வர் அண்ணாதுரை நினைவாக இந்த சாலை, அண்ணா சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சிந்தாதிரிப் பேட்டை, புதுப்பேட்டை, எழும்பூர், ராயப்பேட்டை, சேப்பாக்கம், எல்லீஸ் சாலை, ஆயிரம் விளக்கு ஆகிய பகுதிகள் அன்றைய கால மவுண்ட் ரோட்டுடன் இணைந்த 200 ஆண்டுகால வரலாற்றை கொண்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப இரண்டு முக்கிய மற்றும் பெரிய பாலங்களை கொண்டுள்ள தற்போதைய அண்ணா சாலை தீவுத்திடல்முதல் கிண்டி வரையில் சற்று சுருங்கியுள்ளது. அண்ணா சாலைக்கு அடையாளம் தரும் வகையில் எல்.ஐ.சி., கட்டடம் அமைந்துள்ளது.