/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உள்ளாட்சி தேர்தலில் அரசியல்வாதிகளுக்கு ஏமாற்றம்!உள்ளாட்சி தேர்தலில் அரசியல்வாதிகளுக்கு ஏமாற்றம்!
உள்ளாட்சி தேர்தலில் அரசியல்வாதிகளுக்கு ஏமாற்றம்!
உள்ளாட்சி தேர்தலில் அரசியல்வாதிகளுக்கு ஏமாற்றம்!
உள்ளாட்சி தேர்தலில் அரசியல்வாதிகளுக்கு ஏமாற்றம்!
ADDED : செப் 18, 2011 09:35 PM
திருப்பூர் : சட்டசபை தேர்தல் கூட்டணி, உள்ளாட்சி தேர்தலிலும் நீடிக்கும்
என ஆர்வமாய் காத்திருந்த அரசியல் கட்சிகளுக்கு, பலத்த ஏமாற்றம்
ஏற்பட்டுள்ளது.
தனித்தனியாய் களம் காணும் நிலையில், போட்டியை சமாளிப்பதில்
சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தலைமையில்,
தே.மு.தி.க., - இந்திய கம்யூ., - மா. கம்யூ., உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய
கூட்டணியும், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியும் எதிரெதிர் களத்தில் மோதின.
அ.தி.மு.க., கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெற்றது.
தே.மு.தி.க., கம்யூ., கட்சிகளும் கணிசமான இடங்களை கைப்பற்றின. தி.மு.க.,
கூட்டணி பலத்த தோல்வியை சந்தித்தது; சொற்ப இடங்களிலும் குறைந்த ஓட்டு
வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல்
நெருங்குவதை அடுத்து, கூட்டணி கட்சி நிர்வாகிகள், முக்கிய இடங்களை தங்கள்
கட்சிக்கு பெறுவதில் முனைப்பாக உள்ளனர். இந்நிலையில், தி.மு.க., தனித்து
போட்டியிடும் என அறிவித்ததை தொடர்ந்து, காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., தலைமை, தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள்
பதவிக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளதால், தே.மு.தி.க., - கம்யூ.,
கட்சிகள் ஏமாற்றம் அடைந்துள்ளன. எனி னும், அ.தி.மு.க.,வின் முடிவில்
மாற்றம் ஏற்படும் என கூறப்படுவதால், தே.மு.தி.க., மற்றும் கம்யூ.,
கட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் சில இடங்கள் கிடைக்கும்
எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள
எட்டு தொகுதிகளில், ஏழு தொகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர்கள் நேரடியாக
களமிறங்கினர்; திருப்பூர் தெற்கு மட்டுமே மா.கம்யூ., கட்சிக்கு தரப்பட்டது.
தே.மு. தி.க.,வுக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படாத நிலையில், மாநகராட்சி
தேர்தலில் தே.மு.தி.க.,வுக்கு முக்கியத்துவம் தரப்படும் என
எதிர்பார்க்கப்பட்டது. இந்திய கம்யூ., தரப்பிலும் மேயர் பதவி
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க.,வில் இருந்து மேயர் வேட்பாளராக
விசாலாட்சி அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க., தரப்பில் தற்போதைய மேயர்
செல்வராஜ் மட்டுமே மீண்டும் மேயராக போட்டியிட ஆர்வமாக உள்ளார்; மற்ற
நிர்வாகிகள் தரப்பில் ஆர்வம் இல்லை. காங்கிரஸ் தரப்பில் முந்தைய துணை
மேயர் செந்தில் குமார்,மேயராக போட்டியிட ஆலோசனை கேட்டு வருகிறார்.
அ.தி.மு.க., கூட்டணியில் நீடித்தால் மட்டுமே தே.மு.தி.க., மற்றும் கம்யூ.,
கட்சிகள் தரப்பில் மேயர், துணை மேயர் பதவிக்கு போட்டியிட விருப்பமாக
உள்ளனர். ம.தி.மு.க.,வை பொருத்தவரை ஒருங்கிணைக்கப்பட்ட மாநகராட்சியின் 60
வார்டுகளிலும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திட்டத்தில், நிர்வாகிகள்
முனைப்பாக உள்ளனர். மேயர், துணை மேயர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து
தீவிர ஆலோசனையில் உள்ளனர். முன்னாள் அமைச்சர் சாமிநாதன், முன்னாள்
எம்.எல்.ஏ., கோவிந்தசாமி போன்றோர் உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்குவார்களாக
அல்லது தேர்தல் பணி மட்டுமே செய்வார்களா என்பது தேர்தல் அறிவிப்புக்கு
பின், தெரியவரும்.