பாலியல் வழக்கில் சிக்கிய தலைமை ஆசிரியர் வாதம்
பாலியல் வழக்கில் சிக்கிய தலைமை ஆசிரியர் வாதம்
பாலியல் வழக்கில் சிக்கிய தலைமை ஆசிரியர் வாதம்
மதுரை: மதுரையில் மாணவியை பாலியல் கொடுமை செய்த வழக்கில், தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமியை, போலீஸ் காவலில் விடக்கோரிய மனு மீது இன்று முடிவு அறிவிக்கப்படுகிறது.
மதுரை புதூரை சேர்ந்த ஆரோக்கியசாமி, 53, பொதும்பு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். இவர், பள்ளி மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. மாணவி ஒருவரின் தாயார் புகார்படி, ஆரோக்கியசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் முன் ஜாமின் கோரிய மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. ஆரோக்கியசாமி கோர்ட்டில் சரணடைந்தார். அவரை, ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி உத்தரவிட்டார். இவ்வழக்கில், நான்கு நாட்கள் போலீஸ் காவலில் விடக்கோரி, இன்ஸ்பெக்டர் சூரியகலா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆரோக்கியசாமியை போலீசார் ஆஜர்படுத்தினர். அரசு தரப்பில் வக்கீல் ஜான்சிராணி ஆஜரானார்.
கோர்ட்டில் நடந்த வாதம்;
மாஜிஸ்திரேட் சுஜாதா: உங்களை போலீஸ் காவலில் விடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபம் இருக்கிறதா?
ஆரோக்கியசாமி: எனது வக்கீல் வரவில்லை. இதுவரை சிறு புகார் கூட என் மீது இல்லை. எனது முயற்சியால் இந்தாண்டு முதல் பொதும்பு பள்ளி மேல் நிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது. என்னை, கண்டிப்பான ஆசிரியர் எனக் கூறுவர். எனது முயற்சியால் கடந்தாண்டு பத்தாம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். யாரையும் நான் தொட்டது கூட கிடையாது. இந்தப்பள்ளியில் எனக்கு தனி அறை இல்லை. மாணவர் ஒருவரை பத்தாம் வகுப்பில் சேர்க்க என்னிடம் கோரினர். அட்மிஷன் கொடுத்தேன். அந்த மாணவர் 24 நாட்கள் மட்டுமே பள்ளிக்கு வந்தார். அவரை கண்டித்தேன். இதனால், என் மீது சிலருக்கு விரோதம் ஏற்பட்டது. மாணவிகளுக்கு யோகா வகுப்பு நடத்தினேன். அதை மொபைல் போனில் போட்டோ எடுத்து, அன்றைய தினத்திலேயே சி.இ.ஓ., அலுவலகத்திற்கு அனுப்பினேன். இதை நான், மாணவிகளை தவறாக போட்டோ எடுத்து வருவதாக பரப்பினர். என்னை திட்டமிட்டு பழிவாங்கி விட்டனர்.
மாஜிஸ்திரேட்: நீங்கள் கூறியதையே ஆட்சேபமாக தெரிவிப்பதாக இருந்தால் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம். போலீஸ் காவலில் விடுவது குறித்த முடிவை இன்று அறிவிப்பதாக மாஜிஸ்திரேட் தெரிவித்தார். ஆரோக்கியசாமியை போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர்.