ADDED : ஆக 01, 2011 01:41 AM
சென்னை : சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில், செல்லப் பிராணிகளின் திருவிழா நேற்று நடந்தது.வீட்டில் வளர்க்கக்கூடிய செல்லப் பிராணிகளின் திருவிழா, வேப்பேரியில் உள்ள, கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடந்தது.
கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பிரபாகரன் விழாவை துவக்கி வைத்தார்.இவ்விழாவில், சென்னை மாநகர போலீசில் உள்ள வெடிகுண்டுகளை தேடி எடுக்கும் மோப்ப நாய்களின் அணிவகுப்பு நடந்தது. இதில் நெருப்பு வளையத்தில் பாய்வது, ஒளித்து வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் கைக்குட்டையை கண்டுபிடிப்பது, போலீசாருக்கு மத்தியில் பொதுமக்களை கண்டுபிடிப்பது போன்ற மோப்ப நாய்களின் சுவாரஸ்யமான சாகசங்கள் நடந்தது. அதன் பிறகு செல்லப் பிராணிகள் பற்றிய வினாடி- வினா நடந்தது.பின்னர் நாய்களுக்கான, 'கேட்வாக்'கில் விதவிதமான நாய்கள் கலந்து கொண்டு, அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய் யப்பட்டு, பின்னர் சென்னைவாசிகளால் வளர்க்கப்படும் அரிய வகை நாய்களுக்கான, 'சிரிப்பழகு' போட்டி, நாய்களின், 'சிறப்பான உடை' போட்டி போன்றவை நடந்தது.இப்போட்டியில், பேன்ட்டும், சட்டையும் அணிந்த பல நாய்கள் கலந்து கொண்டன. செல்லப் பிராணிகளை அழகான முறையில் வளர்க்கும் 'சிறந்த பராமரிப்பாளர்களுக்கான போட்டி'யும் நடந்தது.மாலையில் நடந்த விழாவில், ரயில்வே போலீசில் இருக்கும், வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் நாய்களின் சாகசங்கள் நடந்தது. மூன்று நாட்களாக நடைபெறும் இத்திருவிழாவில், நாளை மீன்கள் கண்காட்சி நடைபெறுகிறது.