Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் கருகும் நெல், வாழை பயிர்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும்

தூத்துக்குடி மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் கருகும் நெல், வாழை பயிர்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும்

தூத்துக்குடி மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் கருகும் நெல், வாழை பயிர்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும்

தூத்துக்குடி மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் கருகும் நெல், வாழை பயிர்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும்

ADDED : ஜூலை 26, 2011 01:06 AM


Google News

ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் தண்ணீர் இல்லாமல் கருகி கொண்டிருக்கும் நெல், வாழை பயிர்களுக்கு போர்க்கால அடிப்படையில் தண்ணீர் வழங்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட அமைப்பாளர் நயினார் குலசேகரன் அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனம் 46 ஆயிரத்து 107 ஏக்கர் நஞ்சை நிலங்களில் 2011ம் ஆண்டிற்கு ஏ குரூப் நஞ்சைகளான வடகால் பாசனத்தில் 1 மற்றும் 3ம் நம்பர் மடைபாசனங்கள், ஆறுமுகமங்கலம்குளம், தென்கால்பாசனத்தில் கடம்பாகுளம் மற்றும் ஆத்தூர் குளங்களை சேர்ந்த பாசன பகுதிகளுக்கு மட்டும் 8 ஆயிரத்து 124 ஏக்கர் நஞ்சை நிலங்களுக்கு முன்கார் சாகுபடிக்கு அனுமதி கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி வழங்கப்பட்டது.



மீதமுள்ள 37 ஆயிரத்து 983 ஏக்கர்களுக்கு முன்கார் சாகுபடியும் வழங்கவில்லை. அத்துடன் முன்கார்சாகுபடிக்கு வழங்கபட்ட அனுமதியில் 61 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்கப்படும் என்று கூறி மீதி 43 நாட்களுக்கு தண்ணீர் உத்திரவாதம் செய்யப்படவில்லை. இவ்வாறு விவசாயிகளை மாற்றான் தாய் பிள்ளையாக நடுத்தெருவில் பொதுப்பணிதுறை விட்டுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி பாசன சாகுபடியில் 46 ஆயிரத்து 107 ஏக்கரில் தரிசாக கிடப்பது போக மீதமுள்ள நிலங்களில் நெல் பயிர்களும், வாழைகளும் தண்ணீர் இல்லாமல் கருகி வாடி வதங்கி அழியும் நிலைக்கு வந்துள்ளது. இப்படி வாடி வதங்கிய பயிர்களை பார்த்து விவசாயிகள் ரத்த கண்ணீர் வடிக்கின்றனர்.



இந்நிலையில் பயிர்களை காப்பாற்ற தூத்துக்குடி மாவட்டத்திற்கு 800 கன அடி தண்ணீர் விடப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. இது யானைப்பசிக்கு சோளப்பொறி போட்டது போலாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் அழிந்து கொண்டிருக்கும் நெல், வாழைப்பயிர்களை காப்பாற்ற வேண்டுமானால் நாள் ஒன்றுக்கு 1600 கன அடி வீதம் 20 நாட்களுக்காவது குறைந்தது தண்ணீர் விட வேண்டும்.



தற்போது ஜூலை மாத நிலவரப்படி 22ம் தேதி வரை மணிமுத்தாறு அணையில் 54.5 அடியும், பாபநாசம் அணையில் 52.90 அடியும், சேர்வலாறு அணையில் 64.30 அடியும் உள்ளது. இதில் மணிமுத்தாறு அணை தண்ணீர் முழுவதும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பாத்தியப்பட்டது. ஆகவே மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளில் இருந்து தற்போது எடுக்கும் 1400 கன அடி தண்ணீரை கூட்டி குறைந்தபட்சம் 2000 கன அடி தண்ணீராவது எடுக்க வேண்டும். இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணை வடகாலில் மூலம் 20 எம்ஜிடி திட்டத்தில் நாள் 1க்கு 20 மில்லியன் காலன் தண்ணீரை தூத்துக்குடி பகுதியிலுள்ள 8 தொழிற்சாலைகளுக்கு பொதுப்பணித்துறை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழங்கி வருகிறது.



அதனை தற்போது ஸ்ரீவைகுண்டம் அணைக்கு மேலிருந்து 20 எம்ஜிடி யை 23 எம்ஜிடியாக மாற்றி நாள் ஒன்றுக்கு 23 மில்லியன் காலன் தண்ணீரை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நீரை தொழிற்சாலைகளுக்கு எடுத்து கொள்கிறது. ஆகவே கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதியில் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கோடை காலங்களில் தொழிற்சாலைகளுக்கு அடிப்படை அளவில் மட்டுமே தண்ணீர் வழங்க வேண்டும்.



அத்துடன் நிலைப்பயிர்களுக்கு பாசனநீர் பற்றாக்குறை ஏற்படும் போது கலெக்டரின் அனுமதி பெற்றபின்னரே 20 எம்ஜிடி திட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த முடிவுகளை பொதுப் பணித்துறையும், குடிநீர் வடிகால் வாரியமும் தற்போது உள்ள நிலையில் கடைபிடிக்கவில்லை. உடனடியாக கலந்தாய்வு கூட்ட முடிவுகளை அமுல்படுத்த வேண்டும். விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த ஆபத்தான நிலையை மாற்றி பாதுகாக்க மாவட்ட நிர்வாகம், அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் குலசேகரன் தனது மனுவில் கூறியுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us