/உள்ளூர் செய்திகள்/சேலம்/சுகாதார சீர்கேட்டில் சிக்கித்தவிக்கும் மேயர் வார்டுசுகாதார சீர்கேட்டில் சிக்கித்தவிக்கும் மேயர் வார்டு
சுகாதார சீர்கேட்டில் சிக்கித்தவிக்கும் மேயர் வார்டு
சுகாதார சீர்கேட்டில் சிக்கித்தவிக்கும் மேயர் வார்டு
சுகாதார சீர்கேட்டில் சிக்கித்தவிக்கும் மேயர் வார்டு
சேலம் : சேலம் மாநகராட்சியின், 12வது வார்டு, மேயரின் வார்டாக இருந்தும், அங்கு சுகாதார சீர்கேட்டில், பொதுமக்கள் சிக்கித்தவிக்கின்றனர்.
பிள்ளையார் நகர் பகுதியை சேர்ந்த அம்பிகா கூறுகையில்,''இப்பகுதிகளில் சாக்கடை தூர் வாரி, ஆறு மாதங்கள் இருக்கும். துப்புரவு பணியாளர்கள் யாரும் வராததால், மக்களே சாக்கடை அள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர். குப்பை அள்ளுவதற்கும் ஆட்கள் வராததால், மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் ஈ, கொசுத்தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது,'' என்றார். வார்டு பிரச்னை குறித்து மரகதம் கூறுகையில், ''குடிநீர் பிரச்னையும் அதிக அளவில் உள்ளது. பெரும்பாலானோர் பொதுக்குழாய் குடிநீர் பைப்புகளில் தண்ணீர் பிடிக்கின்றனர். வீடுகளில் இருப்போர் மோட்டார் வைத்து உறிஞ்சுவதால், பொதுக்குழாய்களில் குடிநீர் வருவதில்லை. மூன்று மணி நேரம் வரை குடிநீர் வந்தாலும், வீட்டுக்கு நான்கு குடம் நீர் கூட கிடைப்பதில்லை. ஒரு வாரத்துக்கு ஒருமுறைதான் குடிநீர் கிடைக்கிறது. இதனால், குடிநீர் காசு கொடுத்து வாங்கும் நிலை காணப்படுகிறது,'' என்றார்.
கோர்ட் ரோடு காலனி பகுதியை சேர்ந்த சங்கர் கூறுகையில், ''இப்பகுதியில், 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பரும்பாலான வீடுகளில், தனிக்கழிப்பிட வசதி இல்லை. சுடுகாட்டு காம்பவுண்ட் ஓரத்தில் கட்டப்பட்ட கட்டணக்கழிப்பிடத்தையே அனைவரும் பயன்படுத்துகின்றனர். முன்பு உபயோகத்தில் இருந்த பொதுக்கழிப்பிடம் உரிய பராமரிப்பின்றி, பூட்டி கிடக்கிறது. இதை திறக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், கட்டண கழிப்பிடங்களில் வரிசையில் நிற்கும் நிலையும், திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்தும் நிலையும் காணப்படுகிறது. இதனால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு அதிக அளவில் காணப்படுகிறது,'' என்றார். கண்ணன் என்பவர் கூறுகையில், ''தில்லை நகர் ரோடில், ஐந்தடி ஆழ குழி கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக உள்ளது. போக்குவரத்து நிறைந்த இந்த சாலையின் மையத்தில் உள்ள குழியால், பலரும் விபத்துக்குள்ளாகின்றனர். மரவனேரி ரோட்டில் உள்ள சமூக நலக்கூடத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர், சாலையோரத்தில் குட்டையாக நிற்பதால், கொசுத்தொல்லை அதிகரித்து, பலவித நோய்கள் பெருகி வருகிறது,'' என்றார்.
இந்த வார்டில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மேயராக இருந்தம், முதல் இரண்டு ஆண்டில் ஒரு சில மேம்பாட்டு பணிகள் நடந்துள்ளது. அதன் பின், யாரும் கண்டு கொள்ளாததால், இப்பகுதி மக்கள் மேயர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். 'இப்பகுதியில் குடியிருந்து பார்த்தால் தெரியும், அவருக்கு எங்களது பிரச்னை' என, பலரும் வெடிக்கின்றனர்.