/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சென்னிமலை யூனியன் தலைவர் வேட்பாளர் யார்?சென்னிமலை யூனியன் தலைவர் வேட்பாளர் யார்?
சென்னிமலை யூனியன் தலைவர் வேட்பாளர் யார்?
சென்னிமலை யூனியன் தலைவர் வேட்பாளர் யார்?
சென்னிமலை யூனியன் தலைவர் வேட்பாளர் யார்?
ADDED : செப் 14, 2011 01:11 AM
சென்னிமலை: உள்ளாட்சி தேர்தலில் சென்னிமலை யூனியன் தலைவர் வேட்பாளர் யார் என்பதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. மாவட்ட செயலாளர் ராமலிங்கம் கடைக்கண் பார்வைக்காக, 'கூல் படுத்தும்' வேலை நடக்கிறது.உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி என்ற இடத்தில் அ.தி.மு.க., உள்ளது. 14 வார்டுகளை கொண்ட சென்னிமலை யூனியனில், தலைவர் பதவி காங்கிரஸ் வசம் உள்ளது. துணைத் தலைவராக அ.தி.மு.க.,வை சேர்ந்த மணிமேகலை உள்ளார். 2001-2006ல் தலைவர் பதவி அ.தி.மு.க., வசம் இருந்தது. அப்போது, சென்னிமலை ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் கோபாலகிருஷ்ணன் சேர்மனாக இருந்தார். துணைத் தலைவராக அ.தி.மு.க.,வை சேர்ந்த கருப்புசாமி இருந்தார். இவர்கள் மூவருமே இப்போது யூனியன் கவுன்சிலராக பதவி வகிக்கின்றனர்.அடுத்த மாதம் நடக்கும் தேர்தலில் யூனியன் தலைவர் பதவியை கைப்பற்றும் முடிவில் இவர்கள் மூவரும் களம் இறங்கி பணியாற்றி வருகின்றனர். இதனால், சென்னிமலை ஒன்றிய அ.தி.மு.க.,வில் பரபரப்பு பேச்சுக்கு பஞ்சம் இல்லை.'ஒன்றிய செயலாளராக 15 ஆண்டுகளுக்கு மேல் இருந்து, கட்சிக்காக சிறை சென்றுள்ளேன். தி.மு.க., ஆட்சியின் தொந்தரவுகளை சமாளித்து கட்சியை வழி நடத்தி, ஒன்றிய கவுன்சிலராகவும் இருக்கிறேன். எனக்கு தான் யூனியன் தலைவர் பதவி வழங்க வேண்டும்' என, அமைச்சர் ராமலிங்கத்திடம் வாதிட்டுள்ளார் ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன். கருப்புசாமி 15 ஆண்டுகளாக யூனியன் கவுன்சிலராக உள்ளார். இவருக்கென அ.தி.மு.க.வில் ஆதரவாளர்களும் உள்ளனர். 'கே.ஏ.கே., அணி' என உருவாக்கி அதை வழிநடத்தி வருகிறார். காங்கேயத்தில் தேங்காய் ஆலை நடத்தி வந்தாலும், தினமும் மாலையில் சென்னிமலை வந்து, கட்சியினரை சந்தித்து, 'உற்சாகமூட்டி' செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த முறை துணைத் தலைவராகவும் இருந்தார். இம்முறை யூனியன் தலைவர் பதவியை நழுவ விடக் கூடாது என முழு வீச்சில் பணியாற்றி வருகிறார்.சென்னிமலை யூனியன் துணைத் தலைவராக பதவிவகித்து வரும் மணிமேகலை, 2006ல் காங்கிரஸ் - தி.மு.க.,வினரின் எதிர்ப்புகளை பலவாறாக சமாளித்து, துணைத் தலைவர் பதவியை கைப்பற்றியவர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சின்னுசாமிகவுண்டரை யூனியன் தலைவராக்கியத்திலும் பெரும் பங்கு இவருக்கு உண்டு. கட்சியில் மாவட்ட துணைச் செயலாளரகவும் பதவி வகிக்கிறார்.
சென்னிமலை நகரில் வசித்தாலும், ஓட்டுகளை தனது பூர்வீகம் பசுவபட்டி பஞ்சாயத்தில் வைத்துள்ளார். கடந்த முறை ஈங்கூர் பகுதியில் நின்று யூனியன் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அப்பகுதிக்கு நன்றி அறிவிப்புக்கு சென்றதோடு சரி; அதன்பின் வார்டு பக்கம் தலைகாட்டவில்லை. அதனால் எதிர்ப்பு இருக்கும் என கருதி, தற்போது, தனது பசுவபட்டி பகுதியில் யூனியன் கவுன்சிலர் பதவிக்கு கட்சியில் பணம் கட்டியுள்ளார்.'அனைத்து தகுதிகளும் உள்ள எனக்கு, அமைச்சர் ராமலிங்கம் எப்படியும் சென்னிமலை யூனியன் தலைவர் பதவி வாய்ப்பை தருவார்' என, கூறி வருகிறார்.இவர்கள் மூவருமே, மாவட்ட செயலாளர் அமைச்சர் ராமலிங்கம் கடைக்கண் பார்வைக்காக, அவரை, 'கூல் படுத்தும்' வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னையிலேயே முகாமிட்டுள்ளனர். இவர்கள் தவிர வேறு சிலரும் இப்போட்டியில் மறைமுகமாக ஈடுபட்டுள்ளனர்.