Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரூ.122 கோடி வருவாய் தரும் கோவை

ரூ.122 கோடி வருவாய் தரும் கோவை

ரூ.122 கோடி வருவாய் தரும் கோவை

ரூ.122 கோடி வருவாய் தரும் கோவை

ADDED : செப் 01, 2011 01:50 AM


Google News
கோவை : கேரள தலைநகரை விட அதிக வருவாய் தரும் கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு, கேரள ரயில்களைத் திருப்ப மறுக்கும் ரயில்வே துறையின் பிடிவாதம் தொடர்கிறது.தெற்கு ரயில்வே அதிகாரிகள், தமிழகத்தில் வரும் வருவாயைக் கொண்டு கேரள மாநிலத்தில் அதிக அளவிலான ரயில்வே திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றி வருகின்றனர் என்பது கால் நூற்றாண்டு புகாராகும். இந்த குமுறல்தான், சேலம் கோட்டம் துவக்க வேண்டுமென்ற கோரிக்கை போராட்டமாக வெடித்தது; அதில் வெற்றியும் கிடைத்தது.ஆனால், சேலம் கோட்டத்திலேயே அதிக வருவாயை ஈட்டித்தரும் கோவை ரயில்வே ஸ்டேஷன் மீதான புறக்கணிப்பு மட்டும் இன்று வரை குறைந்தபாடில்லை. கோவை ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, பெயரளவுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.தினமும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்லும் இந்த ரயில்வே ஸ்டேஷனில், பாதுகாப்பான குடிநீர் வசதியில்லை; வயதான முதியோர், உடல் ஊனமுற்றோர் செல்வதற்கான 'லிப்ட்' மற்றும் சாய்வு தளங்கள் இல்லை; கூரை வசதியும் முழுமையாக இல்லை. ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே இருப்பதால், பல நேரங்களில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.ரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தால், ரோட்டைக் கடப்பதற்கு சுரங்க நடைபாதையோ, நடைபாதை மேம்பாலமோ இல்லை. இப்படியாக, எல்லாமே 'இல்லை' மயமாக இருப்பதற்குக் காரணம், தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் அதிகாரிகளின் பிராந்திய மனப்பான்மையே என்பது தமிழகத்திலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆணித்தரமான குற்றச்சாட்டு.இதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே, ரயில்வே துறையின் செயல்பாடுகளும் உள்ளன. தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரம் மக்கள், கோவையில் வசிக்கின்றனர். அவர்களின் வசதிக்காக, பொள் ளாச்சி - உடுமலை-பழநி-திண்டுக்கல் வரையிலான அகல ரயில் பாதையை விரைவாக முடிக்க வேண்டுமென்ற கோரிக்கை, ஒவ்வொரு பட்ஜெட்டிலும் உதாசினப்படுத்தப்படுகிறது.சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை, மதிக்கப்படவே இல்லை. புதிய ரயில்களை இயக்காவிட்டாலும், போத்தனூர் வழியாக கேரளாவுக்குச் செல்லும் 13 ரயில்களை கோவை ரயில்வே ஸ்டேஷனுக்குத் திருப்ப வேண்டுமென்கிற நியாயமான கோரிக்கையையும் கூட நிறைவேற்ற ரயில்வே அதிகாரிகள் தயாராக இல்லை.இருகூர்-வடகோவை கூடுதல் ரயில் பாதையின் பயன்பாடு, மிகவும் அதிகரித்து விடும் என்று 'சப்பைக்கட்டு' கட்டி வருகின்றனர் இந்த அதிகாரிகள். ஆனால், கேரளாவிலுள்ள ரயில் வழித்தடங்கள் பலவும், இவற்றை விட இரு மடங்கு பயன்பாட்டில் உள்ளன என்பது தகவல் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ள உண்மை.

அதேபோல, கேரளாவிலுள்ள அனைத்து நகரங்களையும்விட, கோவை ரயில்வே ஸ்டேஷன்தான் அதிக வருவாய் தருகிறது என்ற உண்மையும் தற்போது தகவல் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்துள்ளது. கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலர் கதிர்மதியோன், இதுதொடர்பாக சில விபரங்களை இச்சட்டத்தின் அடிப்படையில் வாங்கியுள்ளார்.கோவையின் வருவாயைக்கொண்டு வளம் கொழித்து வந்த பாலக்காடு சந்திப்பு, ஆண்டுக்கு 38 கோடி ரூபாய் வருவாயும், கேரளாவின் பெரு நகரமான எர்ணாகுளம் நகரின் ரயில்வே ஸ்டேஷன், 104 கோடி ரூபாய் வருவாயும், தலைநகரான திருவனந்தபுரம், 118 கோடி ரூபாய் வருவாயும் ஈட்டுகின்றன; கோவை ரயில்வே ஸ்டேஷனின் ஆண்டு வருவாய், 122 கோடி ரூபாய்.இதில், வடகோவை, பீளமேடு, போத்தனூர் போன்ற நகரங்களின் வருவாய் சேர்க்கப்படவில்லை. கேரள நகரங்களில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களை விட அதிக வருவாய் தரும் கோவையைப் புறக்கணித்து, கேரளாவுக்கு அதிக ரயில்களை இயக்கக் காரணம், ரயில்வே அதிகாரிகளின் பாரபட்சமும், தங்களுக்கான ஒதுக்கீடு குறைந்து விடும் என்ற அச்சமும்தான்.சென்னை-திருவனந்தபுரம் மெயில், யஷ்வந்த்பூர்-கண்ணனூர் எக்ஸ்பிரஸ், சென்னை-திருவனந்தபுரம் வாராந்திர ரயில் ஆகியவை, கோவைக்குள் வராதது மட்டுமின்றி, போத்தனூரிலும் நிற்காமல் செல்கின்றன. இந்த ரயில்கள் மட்டுமின்றி, கேரளா செல்லும் அனைத்து ரயில்களும் பாலக்காட்டில் நிறுத்தப்படுகின்றன.கதிர்மதியோன் கூறுகையில், ''கோவைக்கு முன்னுரிமை எதுவும் தர வேண்டாம்; குறைந்த பட்சம், பாலக்காட்டில் நிறுத்தும் ரயில்களையாவது நிறுத்த வேண்டாமா? இதைப் புறக்கணிப்பு என்று சொல்வதைத் தவிர வேறு வார்த்தையே இல்லை,'' என்றார்.கேரளா செல்லும் ரயில்களை கோவைக்குள் திருப்புவதற்காகப் போராட்டத்தை முன்னெடுத்த பல்வேறு அமைப்புகளும் இப்போது அமைதி காக்கின்றன; வருவாய் அதிகம் தரும் கோவைக்கு வசதிகளை ஏற்படுத்தித் தர மறுக்கும் ரயில்வே துறைக்கு எதிரான இந்த அமைதி, எப்போது மிகப்பெரும் போராட்டமாக வெடிக்கும் என்பதுதான் தெரியவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us