/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஹசாரேவுக்கு ஆதரவு: கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்புஹசாரேவுக்கு ஆதரவு: கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு
ஹசாரேவுக்கு ஆதரவு: கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு
ஹசாரேவுக்கு ஆதரவு: கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு
ஹசாரேவுக்கு ஆதரவு: கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு
ADDED : ஆக 23, 2011 11:33 PM
சென்னை:அன்னா ஹசாரேக்கு ஆதரவாக, அடையாறில் உள்ள சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள், நேற்று காலை வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
பின்னர், கல்லூரிக்கு வெளியே வந்து, தர்ணா செய்த மாணவர்கள், ஊழலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கல்லூரியில் இருந்து வெளியே கூடிய மாணவர்கள், பைக்கில் ஊர்வலமாகச் சென்றனர்.அங்கு வந்த போலீசார், மாணவர்களின் ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தினர். போலீசாரின் தடுப்பையும் தாண்டி, பைக் பேரணியில் ஈடுபட்டனர். அங்கிருந்து திருவான்மியூர் சென்ற மாணவர்கள், எல்.பி.சாலையில், 'ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பின் சார்பில், எட்டாவது நாளாக நடக்கும் உண்ணாவிரதத்தில்பங்கேற்றனர்.வகுப்புகளை புறக்கணிக்க முடிவு: அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அனைத்துக் கல்லூரி மாணவர்கள், இன்று வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.
இது குறித்துப் பேசிய சட்டப்பல்கலைக்கழகம், டி.பி.ஜெயின் மற்றும் லயோலா கல்லூரிகளின் மாணவர் பிரதிநிதிகள் கூறியதாவது:
அமைதியான முறையில், ஊழல் குறித்து, பைக் பேரணியின் மூலம் விழிப்புணர்வு செய்யச் சென்ற, டி.பி.ஜெயின் கல்லூரியின் ஆயிரக்கணக்கான மாணவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர். அதே போல, லயோலா கல்லூரியில் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட இருந்த மாணவர்களை வகுப்பறைக்குள் அடைத்து, மாணவர்களை வெளியே விட மறுத்தனர்.ஆனால், எங்களின் அமைதிப் போராட்டத்தைத் தடுக்க முடியாது. ஆயிரக்கணக்கான மாணவர்கள், எல்.பி. சாலையில், உண்ணாவிரதம் இருக்கும் 35 பேருக்கு ஆதரவுதெரிவித்து, உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.அது போல், இன்று வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர். கடைகள் அடைப்பு:அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக, ஒரு நாள் கடையடைப்பு நடத்த, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை, நேற்று அழைப்பு விடுத்திருந்தது. இதையொட்டி, சென்னை பெரம்பூர், கொளத்தூர், மணலி, சின்னச்சேக்காடு பகுதிகளில், வியாபாரிகள் ஒட்டுமொத்தமாக கடைகளை அடைத்து, முழு ஆதரவு தெரிவித்தனர். ஒரு சில மருந்துக் கடைகள் மட்டுமே திறந்திருந்தன. இதனால், மணலி பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.சென்னையில் பல்வேறு பகுதிகளில், வணிகர் சங்கப் பேரவை ஆதரவு வியாபாரிகள், ஆங்காங்கே கடைகளை அடைத்திருந்தனர். சென்னையின் பல பகுதிகளிலும் திறந்தே இருந்தது. வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்கப் பேரவை, கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், மற்றொரு சங்கமான, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு, 'கடையடைப்பு செய்ய வேண்டாம்' என அறிவித்திருந்ததால், கடைகள் செயல்பட்டன.வழக்கறிஞர்கள்உண்ணாவிதரம்:ஊழலுக்கு எதிராக, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும், அன்னா ஹசாரேக்கு ஆதரவாக, திருவொற்றியூர் கோர்ட் வழக்கறிஞர்கள், கோர்ட்டுகளைப் புறக்கணித்து,உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
திருவொற்றியூர் நகராட்சி எதிரே நடந்த உண்ணாவிரதத்திற்கு, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.மூத்த வழக்கறிஞர் தமிழரசன், உண்ணாவிரதத்தைத் துவக்கி வைத்தார். உண்ணாவிரதம் மாலை வரை நீடித்தது. சங்க நிர்வாகிகள் ஜெயக்குமார், வெங்கடேசன், செந்தில்ராஜா, அம்பிகைதாஸ் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் இதில் பங்கேற்றனர்.அன்னா ஹசாரேவுக்கு சினிமாக்காரர்கள் ஆதரவு போராட்டம்:அன்னா ஹசாரேக்கு ஆதரவாக, தமிழ்த் திரையுலகத்தின் சார்பில், சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொள்ளவில்லை.வலிமையான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, டில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரேக்கு ஆதரவாக, தமிழ்த் திரையுலகத்தின் சார்பில், சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.இப்போராட்டத்தைத் துவங்கி வைத்து, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் கேயார் பேசும் போது, ''இந்தியாவில் ஊழலை ஒழிக்க, அன்னா ஹசாரே நடத்தும் போராட்டத்திற்கு, எங்களின் இந்தப் போராட்டமும் பலம் சேர்ப்பதாக அமைய வேண்டும். நேற்று முன்தினம் தான், இப்போராட்டம் குறித்து அறிவித்தோம் என்றாலும், அழைப்பையேற்று பலர் கலந்து கொண்டதற்கு சந்தோஷப்படுகிறோம்'' என்றார்.திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் பேசும் போது, ''அன்னா ஹசாரேக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருவதால், வலுவான லோக்பால் மசோதா நிறைவேறுவது உறுதி.
தமிழகத்தில் அன்னா ஹசாரேக்கு, இன்னும் ஆதரவுக் குரல் கூடுதலாக ஒலிக்க வேண்டும்'' என்றார்.நடிகர் பார்த்திபன் பேசும் போது, ''அன்னா ஹசாரேயின் போராட்டத்திற்கு, இந்தியா முழுவதும் இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சி, அரசும், அரசியல்வாதிகளும் எந்தத் தவறும் செய்யக்கூடாது. மீறி தவறு செய்தால், மக்கள் தண்டிக்காமல் விட மாட்டார்கள் என்ற நினைப்பை ஏற்படுத்தும்'' என்றார்.உண்ணாவிரதத்தில், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், ஆனந்தா சுரேஷ், அன்பாலயா பிரபாகரன், திரைப்பட இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, ஏ.ஆர்.முருகதாஸ், ஆதிராஜன், நடிகர் அர்ஜுன், நடிகை ரோகிணி உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.தமிழ்த் திரையுலகில், முக்கிய சங்கங்களான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், நடிகர் சங்கம், திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம், திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகியவற்றில், ஒவ்வொரு சங்கத்திற்குள்ளும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடையே, 'நீயா, நானா' என்ற பாரபட்ச நிலை நிலவி வருவதால், இப்போராட்டத்தில் இச்சங்கங்களைச் சேர்ந்த முக்கியமானவர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை.ஒரு சில நடிகர், நடிகைகளைத் தவிர, மற்ற முன்னணி நடிகர், நடிகைகள் யாரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.