Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஏழு கொப்பரைகளில் தங்கப் புதையல்? : கிராம மக்களிடம் பரபரப்பு பேச்சு

ஏழு கொப்பரைகளில் தங்கப் புதையல்? : கிராம மக்களிடம் பரபரப்பு பேச்சு

ஏழு கொப்பரைகளில் தங்கப் புதையல்? : கிராம மக்களிடம் பரபரப்பு பேச்சு

ஏழு கொப்பரைகளில் தங்கப் புதையல்? : கிராம மக்களிடம் பரபரப்பு பேச்சு

ADDED : செப் 11, 2011 11:32 PM


Google News
தர்மபுரி: தர்மபுரி அருகே, ஏழு கொப்பரைகளில் தங்க நகைகள் இருப்பதாகவும், அங்குள்ள கோவில் அருகேயுள்ள கல்வெட்டில், அது குறித்த தகவல் இருப்பதாகவும் பல ஆண்டுகளாக, மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. தர்மபுரி மாவட்டம், கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையில் இருப்பதால், பலமொழி பேசும் மக்களை மாவட்டமாகவும், பல்வேறு பண்பாட்டு கூறுகளை கொண்ட மாவட்டமாகவும் உள்ளது. பழம் பெருமை கொண்ட தர்மபுரி மாவட்டத்தின், கிராம பகுதியில் பல்வேறு வரலாற்று கதைகளை இப்போதும் மக்கள் கூறி வியப்புக்குள்ளாகும் நிலையுள்ளது. பாலக்கோடு தாலுகா, பூமாண்டஹள்ளி பிர்காவுக்கு உட்பட்ட கிராமம் மோதூர். தர்மபுரியில் இருந்து, 15 கி.மீ., தூரத்தில் இக்கிராமம் உள்ளது. இக்கிராமத்தில், பெருமாளப்பா கோவில் உள்ளது. கோவிலுக்கு வெளியே பெரிய கல்வெட்டுக்கள் உள்ளன. இந்த கல்வெட்டில், அந்தபகுதியை பாண்டவர்கள் ஆண்ட போது, மோதூர் பட்டணம் என, அழைக்கப்பட்டதாகவும், ஊரின் முக்கிய பகுதியில் ஏழு கொப்பரைகளில் தங்கப் புதையல் இருப்பதாகவும் குறிப்புகள் இருப்பதாகவும் கிராம மக்கள், 300 ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை, பரம்பரையாக பேசி வருகின்றனர்.

புதையல் குறித்து தெரிந்து கொள்ள பலரும், கல்வெட்டை ஆராய்ச்சி செய்ததாகவும், வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டினரும் கல்வெட்டை ஆய்வு செய்ததாக கிராம மக்கள் கூறுகின்றனர். அக்கிராமத்தை சேர்ந்த செல்வமணி என்பவர், 'கல்வெட்டில் என்ன தகவல் உள்ளது என்பதை யாராலும் முழுமையாக படிக்க முடியவில்லை. படிப்பவர்களுக்கு தலை சுற்றல் ஏற்பட்டு விடுகிறது, என்றார். கடந்த சில ஆண்டுக்கு முன், தொல்லியல் துறையினர் இந்த கல்வெட்டை ஆய்வு செய்த போது, கிராம மக்கள் கூறுவது போல், தங்க புதையல் இல்லை என்பது தெரிந்தது. இக்கல்வெட்டில், சோழ மன்னன் திரிபுவன சக்கரவர்த்தி திருபுவன வீர சோழ தேவர் காலத்தில், இக்கோவிலுக்கு தானம் அளித்தது குறித்த செய்தி பதிவு செய்யப்பட்டிருப்பதாக, தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். தொல்லியல் துறையினர், கல்வெட்டில் தங்கப் புதையல் குறித்த தகவல் இல்லை என்பதை தெளிவாக குறிப்பிட்ட போதும், கிராம மக்கள் இன்று வரை தங்கப்புதையல் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

மூதூர் மோதுரானது : இக்கிராமத்துக்கு, ஆரம்பத்தில் மூதூர் என்ற பெயர் இருந்திருக்க வேண்டும். நாளடைவில், அது மோதூர் என மருவி விட்டதாக கூறப்படுகிறது. மூதூர் என்றால் பழமையான ஊர் என்று பொருள். இக்கிராமத்தில் தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில், பழமையான சான்றுகளையும், பொருட்களையும் சேகரித்துள்ளதால், மூதூர் என்பதே இக்கிராமத்தின் பெயராக இருந்திருக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us