Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உடுமலை அமராவதி ஆற்றில் முதலைக் குஞ்சுகள் வீச்சு : பராமரிக்க முடியாமல் வனத்துறை திணறல்

உடுமலை அமராவதி ஆற்றில் முதலைக் குஞ்சுகள் வீச்சு : பராமரிக்க முடியாமல் வனத்துறை திணறல்

உடுமலை அமராவதி ஆற்றில் முதலைக் குஞ்சுகள் வீச்சு : பராமரிக்க முடியாமல் வனத்துறை திணறல்

உடுமலை அமராவதி ஆற்றில் முதலைக் குஞ்சுகள் வீச்சு : பராமரிக்க முடியாமல் வனத்துறை திணறல்

ADDED : ஜூலை 19, 2011 12:36 AM


Google News

அமராவதி முதலை பண்ணையில் உற்பத்தியாகும் முதலை குஞ்சுகளை பராமரிக்க முடியாத வனத்துறையினர் அவற்றை மறைமுகமாக நீர்நிலைகளில் வீசி வருகின்றனர்.

இதனால், அமராவதி அணை மற்றும் ஆறு, திறந்த வெளி முதலைப்பண்ணையாக மாறி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது. உடுமலை அருகே அமராவதியில், கடந்த 1976ல் பவானிசாகர் அணைப்பகுதியிலிருந்து முதலை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டன. அமராவதி வனச்சரகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள, இந்த பண்ணையில் தற்போது 94 முதலைகள் உள்ளன. இதில் 8 முதல் 45 வயது வரையுள்ள 72 பெண்; 22 ஆண் முதலைகள் உள்ளன. நூறு வயது வரை வாழக்கூடிய இந்த நன்னீர் முதலை இனம் 'இந்தியன் மக்கர்' என அழைக்கப்படுகிறது.



இந்த முதலைகளுக்கு நாள்தோறும் 26 கிலோ மாட்டிறைச்சி, 9 கிலோ மீன் உணவாக வழங்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணமாக 50 பைசா மட்டுமே வசூலிக்கப்படுகிறது. எப்போதாவது வரும் சுற்றுலா பயணிகளிடமும் குறைந்த கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுவதால் பண்ணையை பராமரிக்க வனத்துறையினர் கண்ணீர் விட வேண்டியுள்ளது. இந்நிலையில், பண்ணையில் 94 முதலைகள் மட்டுமே பராமரிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறைக்காக வனத்துறையினர் பின்பற்றும் நடைமுறையே அமராவதி அணை மற்றும் ஆற்றுப்படுகைகளின் அருகில் வசிப்பவர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறியுள்ளது.



நன்னீர் முதலை இனம் ஆண்டுதோறும் பிப்., மாதம் முதல் ஏப்., மாதம் வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடும். இந்த காலத்தில் பெண் முதலைகள் 8 முதல் 45 முட்டைகளை இடும். சராசரியாக 10 முதல் 36 முட்டைகள் இனப்பெருக்க காலத்தில் இடுவது வழக்கம். முதலை பண்ணையில் பெண் முதலைகள் முட்டைகளை இடுவதற்கு ஏதுவாக மணற்பரப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 55 முதல் 75 நாட்கள் வரை முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவரும் வரை பெண் முதலைகள் அடைகாக்கும் பணியில் ஈடுபடும்.



முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியானவுடன் அருகிலுள்ள நீர்நிலைக்கு குஞ்சுகளை தாய் முதலை கொண்டு சேர்த்து வளர்க்கும். இவ்வகை முதலைகள் 5 ஆண்டுகளில் 35 செ.மீ., வரை வளரும். பொறிக்கப்படும் முட்டைகளில் பல்வேறு காரணங்களினால் குஞ்சுகள் இறந்து விடும். இவற்றையும் தாண்டி ஆண்டுக்கு 20 முதலை குஞ்சுகள் வரை உயிர் பிழைக்கும். முதலை பண்ணையில் கூடுதலாக முதலைகளை பராமரிக்க வழியில்லாததால் குஞ்சுகளை மறைமுகமாக அருகிலுள்ள அமராவதி அணையிலும், ஆற்றிலும் வீசி விடுவதை வனத்துறையினர் வழக்கமாக கொண்டுள்ளனர்.



இவ்வாறு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முதலை பண்ணையிலிருந்து வீசி எறியப்பட்ட முதலை குஞ்சுகள், தற்போது அணை மற்றும் அமராவதி ஆற்றின் பல பகுதிகளை நிரந்தரமாக ஆக்கிரமித்து வசிப்பிடமாக மாற்றியுள்ளன. ஆற்றுப்படுகையிலும், அணையிலும் மீன் தவிர இதர உணவு கிடைக்காத நிலையில் முதலைகள், மனிதனை தாக்குவது அதிகரிக்கும் அபாயம் நிலவி வருகிறது. முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அமராவதி அணைப்பகுதியில் இரவு நேரத்தில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில், மாநிலத்திலுள்ள அனைத்து அணைகளிலும் இரவு நேரத்தில் வலை விரிக்கப்பட்டு மீன் பிடி பணிகள் மேற்கொள்ளப்படும். ஆனால், முதலைகள் நடமாட்டத்தால் அமராவதி அணையில் மட்டும் அதிகாலையிலிருந்து காலை 10.00 மணி வரை மட்டும் மீன் பிடி பணி மேற்கொள்ளப்படுகிறது. அணையின் கரையோரப் பகுதிகளில் முதலை தாக்கி மலைவாழ் மக்கள் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது.



கரூர் வரை செல்லும் அமராவதி ஆறு, திறந்த வெளி முதலைப்பண்ணையாக மாறி, உணவுத்தேவைக்காக குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பீதி ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் தாராபுரம் அருகே ருத்ராவதியில் பொதுமக்களை பீதிக்குள்ளாக்கிய, இரண்டு முதலைகளை வனத்துறையினர் பிடித்து வேறு பகுதியில் விட்டனர்.

தற்போது மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் முதலை தென்பட்டதால், மக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. விழிப்புணர்வுக்காகவும், அரிய வகை முதலை இனத்தை பாதுகாக்கவும் துவங்கிய முதலை பண்ணையை வனத்துறையினர் முறையாக பராமரிக்காததால், பொதுமக்கள் உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.



முதலை பண்ணையை விரிவுபடுத்தி, ஆண்டுதோறும் உற்பத்தியாகும் முதலை குஞ்சுகளை பராமரிக்க வேண்டுமென மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'அமராவதி முதலைப்பண்ணையில் ஆண்டு தோறும் இனப்பெருக்க காலத்தில் பொறிக்கும் முதலை குஞ்சுகள் முறையாக வளர்க்கப்படுகின்றன. முதலை பண்ணையை மேம்படுத்த கருத்துரு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பபட்டுள்ளது', என்றனர்.



-பி.செந்தில்ராமன்-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us