நில அபகரிப்பு நடவடிக்கை : ஜெயலலிதாவுக்கு பா.ஜ., பாராட்டு
நில அபகரிப்பு நடவடிக்கை : ஜெயலலிதாவுக்கு பா.ஜ., பாராட்டு
நில அபகரிப்பு நடவடிக்கை : ஜெயலலிதாவுக்கு பா.ஜ., பாராட்டு

சேலம் : ''தமிழகத்தில் நில அபகரிப்பு விவகாரங்களில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கையை மனம் திறந்து பாராட்டுகிறேன்,'' என, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.
சேலத்தில் அவர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ராஜா தினமும் ஒரு தகவலை வெளியிட்டு வருகிறார்.
பிரதமர், சோனியா உள்ளிட்ட யாரும் மறுப்பு தெரிவிக்காமல், மவுனமாக இருப்பது, அதை உறுதி செய்வதாக இருக்கிறது. மும்பையில், தொடர்ந்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களால், பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. லோக்பால் மசோதாவால், அரசை தூய்மைப்படுத்த முடியாது. தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதைப் போல, 2014ம் ஆண்டு தேசிய அரசியலிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். தற்போது அரசு, மத வன்முறை தடுப்பு மசோதாவை நிறைவேற்ற உள்ளது. இந்த மசோதா சிறுபான்மையினருக்கு சாதகமானதாக இருக்கும். எனவே, அதை பா. ஜ., நிறைவேற்ற விடாது.
நில அபகரிப்பு விவகாரத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு, மனம் திறந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நில அபகரிப்பு விவகாரத்தில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களது நிலத்தை மீட்பதற்காக, தனிப்பிரிவு துவக்கப்பட்டது, வரவேற்கக் கூடியது. தமிழக ஆளுனர் மகன் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது, தமிழக அரசின் துணிச்சலான நடவடிக்கைக்கு உதாரணம். மீனவர் பிரச்னைக்காக, பாரதிய ஜனதா தேசிய அளவில் போராட்டங்கள் நடத்தும். ஆகஸ்ட் 7ம் தேதி ராமேஸ்வரத்தில், கடல் முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு இல.கணேசன் கூறினார்.